T20 WC | அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு இந்தியாவுக்கு கட்டாய வெற்றி தேவை - ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதல்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று குரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணியுடன் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகிறது.

அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது. மெல்பர்ன் மைதானத்தில்தான் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அவரிடம் இருந்தும், சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கே.எல்.ராகுல், வங்கதேச அணிக்கு எதிராக அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பி இருப்பது டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலுசேர்த்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இருந்து மட்டுமே இன்னும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிராக 53 ரன்கள் விளாசிய அவர், மற்ற 3 ஆட்டங்களிலும் கூட்டாக 21 ரன்களே சேர்த்தார். அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ரோஹித் சர்மா பேட்டிங்கில் கூடுதல் பொறுப்புடன் செயல்படக்கூடும்.

ஜிம்பாப்வே அணியில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் இந்திய அணியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு தீபக் ஹூடா அல்லது யுவேந்திர சாஹல் சேர்க்கப்படக்கூடும். மெல்பர்ன் மைதானத்தின் சராசரி ரன் குவிப்பு 155 முதல் 160 ஆகும். எனினும் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் 180 முதல் 200 ரன்கள் வரை சேர்க்க முயற்சிக்கக்கூடும்.

ஜிம்பாப்வே அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. எனினும் அந்த அணி இந்தத் தொடரில் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சிகொடுத்திருந்தது. அதேவேளையில் 3 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியும் கண்டிருந்தது. பேட்டிங்கில் சிகந்தர் ராஸா அதிரடியில் பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அவர், சற்று நெருக்கடி கொடுக்கக்கூடும்.

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி இதற்கு முன்னர் மோதியது இல்லை. ஆனால் சமீபத்தில் இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடின. இதில் பங்கேற்ற அதே ஜிம்பாப்வே அணியே தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆனால் இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஜிம்பாப்வேக்கு எதிராக டி 20-ல் விளையாடியது இல்லை.

அரை இறுதி வாய்ப்பு எப்படி?: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் 8 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து எளிதாக அரை இறுதிக்கு முன்னேறிவிடும். மாறாக தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் அது பாகிஸ்தான் அணி நாக் அவுட்சுற்றுக்கு முன்னேற வழியை ஏற்படுத்திவிடும். எனினும் அதற்கு பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவின் கையிலும் உள்ளது. 5 புள்ளிகளுடன் உள்ள தென் ஆப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்கா எளிதாக அரை இறுதியில் கால்பதித்துவிடும். மாறாக தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்.

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்து, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்றால், இந்தியாவுடன் இணைந்து, பாகிஸ்தான் அணியும் அரை இறுதியில் கால்பதித்துவிடும். இது ஒருபுறம் இருக்க வங்கதேச அணியும் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணி, பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும். அதேவேளையில் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்காவை வெல்ல வேண்டும். இது நிகழ்ந்தால் வங்கதேச அணி அரை இறுதி வாய்ப்பை பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்