சிட்னியில் இன்று பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 போட்டியில் இலங்கை அணியை போராடி வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7 புள்ளிகள் பெற்றிருந்தாலும், இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்தும் அதற்கேற்ப மோசமாக ஆடி விக்கெட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்து. கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு சென்று ஒரு வழியாக வென்றது.
இலங்கை அணி முதலில் பேட் செய்து 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் 75 ரன்கள் விளாசி விக்கெட் இழக்காமல் இருந்த நிலையிலிருந்து, திமிர்த்தனமாகவும், மட்டித்தனமாகவும், பொறுப்பற்ற விதத்திலும், ஆடி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 129/6 என்று, ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 13 ரன்கள் என்று கிட்டி முட்டி வந்து கடைசி ஓவரில், 5 ரன்கள் தேவை என்று நெருக்கமாக டென்ஷனுக்குக் கொண்டு வந்து விட்டது. கடைசியில் 3 பந்தில் 2 ரன்கள் என்று, வந்து வோக்ஸ் ஒரு பவுண்டரியை பாயிண்ட்டில் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி இறுதி வரை நின்று 42 ரன்கள் எடுத்தார்.
அலட்சியமாக ஆடி விக்கெட்டுகளை கொடுத்த இங்கிலாந்து: 142 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இறங்கிய இங்கிலாந்து ஜாஸ் பட்லர் (28), அலெக்ஸ் ஹேல்ஸ் (47) இருவர் மூலமும் 7 ஓவர்களில் 75 ரன்கள் என்ற அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பிறகு, ஹசரங்க்அ டிசில்வா பந்தை எந்த வித இலக்குமின்றி சுற்றினார். பட்லர் டீப் மிட்விக்கெட்டில் கருணரத்னே அபாரமான கேட்சை எடுத்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களில் காட்டுத்தனமாக ஒரு ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஆடப்போய் ஹசரங்க டிசில்வா பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.
அதன் பிறகு, தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. ஹாரி புரூக் 4 ரன்களில் லெக் ஸ்டம்பில் ஃபுல் ஆக வந்த பந்தை அசிங்கமாக பவுலர் தனஞ்ஜயாவிடமே லூஸ் ஷாட் ஆடி கேட்ச் கொடுத்தார். லியாம் லிவிங்ஸ்டன் அடுத்ததாக, லாஹிரு குமாரா பந்தை ஏதோ மைதானத்துக்கு வெளியே அடிப்பவர் போல் மிக மோசமான பொறுப்பற்ற ஷாட் ஒன்றை ஆட, பந்து மேலே எழும்ப கேட்ச் ஆனது. இங்கிலாந்து 106/4. மொயீன் அலியை இறக்கிவிட்டு, அடி என்றால் அவரோ, 5 பந்துகள் தட்டுத்தடுமாறி ஆடி, 1 ரன் எடுத்து தனஞ்ஜெயா பந்தை ஷார்ட் கவரில் நின்றிருந்த ஷனகாவிடம் கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்து வெளியேறினார்.
சாம் கரன் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, ஆனால் அவரோ 11 பந்துகளை ஆடி வரிசையாக டாட்பால்களாக விட்டு டென்ஷனை ஏற்றிக் கொண்டார். அதனால், அடுத்து பொறுத்தது போதும் என்று, குமாரா பந்தை புல் ஷாட் ஆடினார். ஆனால் சரியாகச் சிக்காமல் டீப்பில் அவுட் ஆக, இங்கிலாந்து 18-வது ஓவரில் 129/6 என்று போட்டி இலங்கை பக்கம் சாயுமாறு தோன்றியது.
ஆனால், ஒருமுனையில் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி 36 பந்துகளில் 42 ரன்களை எடுக்க, கடைசி ஓவரில் டாட்பால் விட்டு டென்ஷன் படுத்தி, கடைசியில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் கிறிஸ் வோக்ஸ். 19.4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இப்படி ஆடும் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறுவதை விட ஆஸ்திரேலியாவே மேல் என்று இந்தப் போட்டியை பார்த்தவர்கள் நினைப்பதில் தவறில்லை.
கடைசி 5 ஓவர்களில் சரிவு கண்ட இலங்கை, தனியாகப் போராடிய நிசாங்கா! - முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தது இலங்கை. இதே பிட்சில் 2 போட்டிகள் நடந்திருக்கிறது என்பதால், பிட்ச் கொஞ்சம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது முழுக்க முழுக்க ஒரு பேட்டிங் பிட்ச் ஆக அமைந்தது. இலங்கை அணி பதும் நிசாங்காவின் தனிநபர் ஆதிக்க இன்னிங்சினால், பவர் ப்ளேயில் 6 ஓவர்களில் 54 ரன்களை எடுத்து, நல்ல அடித்தளம் அமைத்தது. 10 ஓவர்களில் 80/2 என்று நல்ல ஸ்கோரை எடுக்கும் நிலையில் இருந்தது.
பதும் நிசாங்காவும், குசல் மெண்டிஸும், பிரமாதமாகத் தொடங்கினர். அதுவும் ஸ்டோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தையே, லெக் திசையில் குறைந்த தூர பவுண்டரிக்கு மேல் சிக்சர் விளாசினார் நிசாங்கா. கிறிஸ் வோக்ஸ் ஒரு ஓவரை டைட்டாக வீசி 6 ரன்களையே கொடுக்க 3-வது ஓவரில் மார்க் உட், வந்து வீச குசால் மெண்டிஸ் ஒரே வீசு வீசினார். மட்டையை 79மீட்டர் பவுண்டரியை அனாயாசமாகக் கடந்த பந்து சிக்சருக்குச் சென்றது, இதே ஓவரில், கடைசி பந்தை நிசாங்கா அப்பர் கட் செய்து, டீப் தேர்ட்மேனுக்கு சிக்சருக்கு அனுப்ப ஒரே ஓவரில் 17 ரன்கள் என்று இங்கிலாந்துக்கு லேசாக புளியைக் கரைத்தது.
மெண்டிஸ் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தை தூக்கி அடிக்க, டீப்பில் எங்கிருந்தோ இருந்து வந்த, லிவிங்ஸ்டன் சறுக்கிக் கொண்டே அற்புதமான கேட்சை எடுத்தார். சாம் கரணை நிசாங்கா ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசி, ஒருமுனையில் ஆக்ரோஷத்தைக் குறைக்காமல் ஆட பவர் ப்ளேயின் கடைசி ஓவரை ஆதில் ரஷீத் டைட் செய்து, 2 ரன்களை மட்டுமே கொடுக்க இலஙகி அணி 6 ஓவர்களில் 54/1 என்று நல்ல அடித்தளம் அமைத்திருந்தது.
அதன் பிறகு லிவிங்ஸ்டனை ஒரு சிக்ஸ் விளாசிய நிசாங்கா 41 ரன்களை எட்டினார். இன்னொரு முனையில் தனஞ்ஜயா மந்தமாக ஆடினார் அவரை ரஷீத் கட்டிப்போட்டார். கடைசியில் தனஞ்ஜயா 11 பந்தில் 9 ரன்களுக்கு சாம் கரன் பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயின் அலி ஒரு ஓவரில் 5 ரன்களையே கொடுக்க இலங்கை அணி 10 ஓவர்களில் 80/2 என்று வலுவாகவே இருந்தது.
அசலங்கா 8 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேற, பதும் நிசாங்கா தனித்து விடப்பட்டார். லிவிங்ஸ்டன் பந்தை லாங் ஆனில் தட்டி விட்டு 33 பந்துகளில் 4 சிக்சர்களுடன் அரைசதம் கண்ட நிசாங்கா, அடுத்த ஓவரில் ஸ்டோக்ஸை பெரிய சிக்சர் விளாசி டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்தார். 13 ஓவர்களில் இலங்கை 100/3 என்று இப்போதும் வலுவாகவே இருந்தது.
ஆனால், நிசாங்கா 45 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து, ஆதில் ரஷீத் பந்தில் ஜோர்டானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழக்க, ரஷீத் இந்தத் தொடரில் தன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். 120/4 என்ற நிலையில் ராஜபக்ச 2 பவுண்டரிகளுடன் 15 என்று களத்தில் இருந்தார். அதன் பிறகு 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை, அதாவது கடைசி 5 ஓவர்களில் வெறும் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி, எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டிய ஸ்கோரை இங்கிலாந்து 141/8 என்று குறைத்தது.
மார்க் உட் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதில் அபாய வீரர் ராஜபக்சா விக்கெட்டும் அடங்கும். ஆதில் ரஷீத் 4 ஓவர் 16 ரன் 1 விக்கெட். பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் தலா ஒரு விக்கெட்.
இந்தப் போட்டியின் முடிவு காரணமாக, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆட்ட நாயகனாக ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டார். நாளை மூன்று போட்டிகள் நடக்கவிருக்கின்றன. ஒன்று தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து, இரண்டு பாகிஸ்தான் - வங்கதேசம், மூன்று, இந்தியா-ஜிம்பாப்வே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago