பிறந்தநாள் ஸ்பெஷல்... - கோலியின் ஆட்டத் திறனை வெகுவாக பாராட்டிய கம்பீர்!

By செய்திப்பிரிவு

சிட்னி: டி20 உலகக் கோப்பை போட்டியில், வங்கதேச அணியுடனான விராட் கோலியின் ஆட்டத்தை கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இன்று விராட் கோலியின் பிறந்தநாள் என்பது கவனிக்கத்தக்கது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார். மேலும், வங்க தேசத்துடனான கோலியின் சிறப்பான ஆட்டம், அவரை விமர்சித்து வந்தவர்களை பாராட்ட வைத்துள்ளது.

இந்த நிலையில், வங்கதேச அணியுடனான கோலியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதிவு செய்துள்ள கருத்தில், “இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கோலி கடைசி பத்து ஓவர்களில் ஆக்ரோஷமாகவும், நங்கூரமாகவும் இருக்கிறார். பாபர் அசாமின் ஆட்டத்தைப் பார்த்து, அவரை ‘நங்கூரம்’ என்று அழைக்க வேண்டிய அவசியமில்லை. விராட் கோலி ஒரு நங்கூரம் என்பதை விட அதிகமான பங்களிப்பை அணிக்கு அளித்திருக்கிறார்.

போட்டியின் முதல் 10 ஓவர்களில் நிலைமை கடினமாக இருக்கும்போது, இந்தியா விக்கெட்களை இழந்து கொண்டிருக்கும்போது, ​கே.எல்.ராகுலுடன் ​கோலி இணைந்து விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். ராகுல் அவுட்னானபோது, ​​சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் அவுட் ஆனபோது, ஆட்டத்தின் முக்கிய நாயகனாக மாறினார்” என்று பாராட்டினார்.

இதுவரை கோலியை கடுமையாக விமர்சித்து வந்த கம்பீர், விராட் கோலியின் பிறந்தநாளான இன்று அவரை வெகுவாக பாராட்டி இருப்பது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE