மொஹாலி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்தின் 283 ரன்களுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
அஸ்வின் 57 ரன்களுடனும் ஜடேஜா 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், நாளை தொடர்வார்கள். 148/2 என்ற நிலையிலிருந்து 204/6 என்று சரிந்த இந்திய அணியை அஸ்வின், ஜடேஜா கூட்டணி இன்று 67 ரன்கள் விக்கெட்டில்லா கூட்டணியுடன் நிலை நிறுத்தியுள்ளது. நாளை மேலும் தொடரவும் இந்த கூட்டணி உறுதியுடன் உள்ளது.
இன்றைய தினத்தின் சிறப்பு இங்கிலாந்தின் பீல்டிங் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது. கேட்ச்களை விட்டாலும் முக்கியத் தருணங்களில் பிடித்த கேட்ச், ரன் அவுட் ஆகியவற்றினால் இங்கிலாந்து இந்திய அணியை பின்னடைவு காணச் செய்தது.
அஸ்வின் சாதனை:
82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இன்றைய தினத்தை முடித்த ஆல்ரவுண்டர் அஸ்வின் இந்த ஆண்டில் 500 ரன்கள் 50 விக்கெட்டுகள் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.
அருமையான ஒரு டெஸ்ட் தினமாக இது அமைந்தது. இரு அணிகளும் சரிசமமாக பலப்பரிட்சை நடத்தின, புஜாரா, விராட் கோலி காலையில் இங்கிலாந்தின் முயற்சிகளை முறியடித்து அரைசதங்கள் கண்டனர், பார்த்திவ் படேல் அருமையாக ஆடினார், குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை இவர் கையாண்டதுதான் சரி என்று தோன்றும் விதமாக ஆடினார், அதுவும் அந்த இரண்டு நேர் டிரைவ்கள் உண்மையில் ஆண்டர்சனுக்கு எரிச்சலூட்டக்கூடியவைதான்.
42 ரன்கள் எடுத்த பார்த்திவ் படேல் ரஷீத் படேல் பந்தை நன்றாக முன்னால் வந்து ஆடினார், ஆனாலும் பேடில் பட்டதற்கு இங்கிலாந்து ரிவியூ செய்ய அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. காரணம் லெக் ஸ்டம்ப் எப்போது நடுவருக்குரியது என்றே 3-வது நடுவர் தீர்ப்பு வழங்குவர், இம்முறை லெக்ஸ்டம்பின் முனையில் படுமாறுதான் ரீப்ளே காண்பித்தது, ஆனால் நடுவர் நாட் அவுட் தீர்ப்பை மாற்றி அவுட் என்றார் 3ம் நடுவர், இத்தகைய முரண்பாடுகளைத்தான் தோனி போன்றவர்கள் கடுமையாக விமர்சித்தனர். கங்குலி கூறியது போல் பார்த்திவ் படேல் இன்று சதம் அடித்திருக்க வேண்டும்.
முன்னதாக கேட்ச் கோட்டை விடப்பட்ட வாய்ப்பை முரளி விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 12 ரன்களில் ஸ்டோக்ஸ் வீசிய மிகவும் வெளியே சென்ற பந்தை தட்டுமாறு ஆடினார், உண்மையில் அது கேட்சிங் பிராக்டீஸ்தான், அந்த ஷாட்டை சேவாக் போல் அடித்து நொறுக்குமாறு ஆடியிருந்தால் எட்ஜ் எடுத்தால் கூட பந்து தலைக்கு மேல் பறக்கும், ஆனால் விஜய்யோ பந்தைப் போய் மட்டையால் இடித்தார். உண்மையில் ‘நத்திங் ஷாட்’ என்பார்களே அதுதான் விஜய் ஆடியது. நடுவர் இதற்கு அவுட் கொடுக்காத போதிலும் விஜய் நேர்மையாக பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியது பாராட்டுக்குரியது. எப்படியிருந்தாலும் ரிவியூவில் அவர் அவுட் என்பது தெளிவாக தெரிந்து விடும் போதிலும் அவுட் என்றால் வெளியேறுவது என்பது ஒரு நல்ல பண்பு, அதைத்தான் விஜய் இன்று செய்தார்.
அதன் பிறகு கோலியும், புஜாராவும் 3-வது விக்கெட்டுக்காக 75 ரன்களைச் சேர்த்தனர். நேற்று இங்கிலாந்து போல்தான் தேவையில்லாமல் அவுட் ஆனதுதான் விஜய், புஜாரா, கோலி, ரஹானே போன்றோரது அவுட்கள். புஜாரா 104 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து இன்னொரு சதம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் அடில் ரஷீத் வீசிய ஒன்றுமேயில்லாத, எங்கு வேண்டுமானாலும் கேட்டு அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து டீப்பில் லெக் திசையில் வோக்ஸிடம் அடித்தார், வோக்ஸ் சில அடிகள் முன்னால் ஓடி வந்து கீழே தொடும் நிலையில் பந்தைப் பிடித்தார்.
அடுத்ததாக ரஹானேயின் மோசமான பார்ம் தொடர்ந்தது. 6 பந்துகள் ஆடி ரன் எடுக்காமல் ரஷீத்தின் லேசான கூக்ளியை ஆட நிறைய நேரம் இருந்தும், கால்காப்பில் நேராக வாங்கி எல்.பி.ஆனார்.
இதற்கு அடுத்தபடியாக அறிமுக வீரர் கருண் நாயர் 4 ரன்களில் ஜோஸ் பட்லரின் அற்புதமான பீல்டிங், மற்றும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.
கோலி, புஜாரா கூட்டணியின் போது மற்றொரு ஆஃப் ஸ்பின்னர் கரேத் பாத்தியை கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு சரியாக அமையவில்லை, அவர் 5 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக் கொடுத்தார். புஜாராவுக்கும் லெக் திசையில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ ஒரு கேட்சை விட்டார், அதன் பிறகு விரைவு கதியில் 6 ஓவர்களில் 34 ரன்கள் அடிக்கப்பட்டது. முன்னதாக அடில் ரஷீத் தன் டெஸ்ட் வாழ்க்கையில் முதன்முறையாக இரு ஓவர்களை மெய்டன்களாக்கினார்.
விராட் கோலி அருமையாக ஆடி, பொறுமைகாத்து 127 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்திருந்த போது தேவையில்லாமல் ஸ்டோக்ஸ் வீசிய வெளியே சென்ற பந்தை விக்கெட் கீப்பருக்கு கேட்சிங் பிராக்டீஸ் கொடுத்தார். 148/2லிருந்து இந்திய அணி 204/6 என்று சரிவின் விளிம்பில் இருந்தது.
மீண்டும் அஸ்வின் அருமையாக அணியை சரிவிலிருந்து மீட்டு ஆடிவருகிறார், விக்கெட்டுகளுக்கிடையே இவரது ஓட்டம் பிரச்சினைதான் என்றாலும் திட்டமிட்டு ஆடுகிறார். 2 ரன்களையெல்லாம் 1 ரன் ஓடினார் அஸ்வின். ஆனால் 7வது பவுண்டரியுடன் இந்தத் தொடரில் தனது 3-வது அரைசதத்தை எட்டினார். ரவீந்திர ஜடேஜா 34 பந்துகளில் 8 ரன்களிலிருந்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 59 பந்துகளில் 31 என்று ஆடி வருகிறார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொயின் அலி விக்கெட் எடுக்காவிட்டாலும் 9 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுகொடுத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago