சிட்னியில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் 2 அட்டவணையில் +1.117 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி எந்தவித இடையூறும் இல்லாமல் நெதர்லாந்தை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் தொடரில் இருந்து வெளியேறிவிடும். அப்படியல்லாமல் மழைக் குறுக்கீடு என்ற சூழலில் புள்ளிகள் பகிரும் நிலை ஏற்பட்டால் நிச்சயம் குரூப் பி-இல் இருந்து அரையிறுதிக்கான தகுதி மிகவும் போட்டி நிறைந்ததாக மாறவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சிட்னியின் நல்ல பேட்டிங் பிட்சில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அது பயனற்று போய்விடுமோ என சொல்லும் அளவுக்கு பேட்டிங் பிட்சிலும் கூட ரிஸ்வான், பாபர் அசாம், ஷான் மசூத் போன்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்தனர்.
ஒன் டவுனில் இறங்கிய முகமது ஹாரிஸ், மினி சூரியகுமார் யாதவ் போல தனது இன்னிங்ஸை ஆடி விட்டுப் போனார். இவர் இறங்கியவுடன் அவரை வரவேற்கும் விதமாக பவுன்சர் வீசி இருந்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள். அதில் ஒன்று அவரது ஹெல்மெட் கிரில்லில் பட்டது. அதன் பிறகு ரபாடாவை 2 சிக்ஸர்கள், நார்க்யாவை ஒரு சிக்ஸ், இங்கிடியை 2 பவுண்டரிகள் என்று விளாசினார். 11 பந்துகளில் 28 ரன்கள் விளாசி நார்க்யா பந்தில் எல்.பி ஆகி வெளியேறினார். 6.3 ஓவர்களில் பாகிஸ்தான் 43/4 என தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது ஜோடி சேர்ந்த முகமது நவாஸ், இப்திகரும் இணைந்து இன்னிங்ஸை கொஞ்சம் நிலைப்படுத்தினர். ஆனால் 13-வது ஓவரில் நவாஸ், ஷம்சியின் ஓவரில் வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். அதற்கு அடுத்த 7 ஓவர்களில் 90 ரன்களை குவித்ததற்கு காரணம் பந்து சோப்புக்கட்டி போல் தென் ஆப்பிரிக்கா பவுலர்களுக்கு வழுக்கியதும், அதனால் ஃபீல்டிங் படுமோசமாகி, கேட்ச்கள் குறைந்தது. ஒரே ஓவரில் 4 அல்லது 5 மிஸ் ஃபீல்ட்களை செய்தது தென் ஆப்பிரிக்கா.
இருந்தாலும் அதற்காக ஷதாப் கான், 20 பந்துகளில் பதிவு செய்த அரை சதத்தைக் குறை கூற முடியாது. அவர் 22 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 மிகப்பெரிய சிக்சர்களுடன் 52 ரன்களை எடுத்தார். மறுமுனையில்ல இப்திகர் அகமது, மிகப் பிரமாதமான இன்னிங்ஸ் ஆடி 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாச இருவரும் சேர்ந்து 35 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்கள் என்றால் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க பீல்டர்கள், பவுலர்கள் நிலைமையை யூகித்துக் கொள்ளலாம். சிக்சர்களெல்லாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கில் மூன்று, நான்கு வரிசைகள் தாண்டிப் போய் விழுந்தன. மாட்டாத ஷாட்களில் வந்த கேட்சை எல்லாம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் நழுவவிட்டனர். ரபாடா தன் 4 ஓவர்களில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 44 ரன்களை விட்டுக் கொடுத்தார். நார்க்யா 4 ஓவர்களில் 1 பவுண்டரி, 4 சிக்சர்களை வாரி வழங்கினார். முக்கியமாக புல்டாஸ்களாக பந்தை வீசி பாகிஸ்தானுக்கு வசதி செய்து கொடுத்தார். ஆனால் இவர் தன் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மொத்தம் 4 விக்கெட்டுகளை இந்த போட்டியில் கைப்பற்றினார். தப்ரைஸ் ஷம்சி, 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அவர் வீசிய 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்திருந்தார். ஆனால், முகமது நவாஸ் விக்கெட்டை சரியான தருணத்தில் வீழ்த்தினார். கடைசியில் பாகிஸ்தான் 185 ரன்களை எட்டியது. ஆனால் இது 200 ரன்கள் ஸ்கோர் செய்யும் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபீல்டிங், பவுலிங்கில் சொதப்பிய பிறகு பேட்டிங்கும் படுமோசமாக ஆடிய தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி, ஒரு வழியாக கடைசியில் அவரிடம் இருந்து எதிர்பார்த்த ஒரு தொடக்கத்தை கொடுத்தார். டிகாக், இவரை ஆன் திசையில் விளாசும் முதல் நான்கு பந்து முயற்சிகள் தோல்வியடைய, கடைசியில் 5-வது பந்தில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்த ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் அபாயகரமான அதிரடி மன்னன் ரைலி ரூசோ என்ற பெரிய மீனை வலையில் சிக்க வைத்தார் ஷாஹின் அஃப்ரீடி. 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. கேப்டன் பவுமா, மிக நேர்த்தியான இன்னிங்ஸை ஆடினார். இரண்டு இடிபோன்ற புல் ஷாட் பவுண்டரிகளுடன் 4 பவுண்டரிகள், ஒரு ஸ்கூப் சிக்ஸ் என்று 18 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஷதாப் கானின் பந்தில் தேர்ட் மேனில் திருப்புகிறேன் என்று எட்ஜ் செய்து, கேட்ச் ஆகி வெளியேறினார்.
மழை வரும் என்பதால் இது மிக முக்கியமான விக்கெட். ஏனெனில் 7.1 ஓவர்களில் டி.எல்.எஸ் முறைப்படி 2 விக்கெட்டுகளுடன் இருந்தால் ரன் எண்ணிக்கை 59 ரன்கள் இருந்தால் போதும். தென் ஆப்பிரிக்கா 65 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் 3-வது விக்கெட் விழுந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அப்போது மழை வந்தால் 66 ரன்கள் என்று அதிகரித்தது. தென் ஆப்பிரிக்கா 1 ரன் பின் தங்கியிருந்தது.
அதே ஓவரில் மார்க்ரம் பின்னால் சென்று ஷதாப் பந்தை கட் செய்ய நினைத்து பவுல்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் என இருந்தது. மழை வரும் போது 9 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்கள் என்று இருந்தது. 4-வது விக்கெட்டையும் இழந்ததால் டி.எல்.எஸ். முறைப்படி அப்போது இலக்கு 85 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்ற நிலை. தென் ஆப்பிரிக்கா 17 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது 14 ஓவர்களில் 142 ரன்கள் இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது தென் ஆப்பிரிக்கா மீதமுள்ள 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுக்க வேண்டும். இது எப்போதும் சாத்தியமில்லை. அதுவும் டேவிட் மில்லர் காயத்தினால் இல்லாத போது முடியவே முடியாது. இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் என்று தென் ஆப்பிரிக்கா முடிந்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று மூன்றிலும் சொதப்பி முச்சொதப்பலாகி படுதோல்வி கண்டது தென் ஆப்பிரிக்கா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago