பிரிஸ்பன்: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி.
பிரிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். கடந்த எட்டு, டி 20 ஆட்டங்களில் ஆரோன் பின்ச் அடித்த முதல் அரை சதமாக இது அமைந்தது.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசி மிரட்டியது. முன்னதாக டேவிட் வார்னர் 3, மிட்செல் மார்ஷ் 28, கிளென் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 15, மேத்யூ வேட் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து சார்பில் பாரி மெக்கார்த்தி 3, ஜோஷ் லிட்டில் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணியானது 25 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது. ஆன்டி பில்பிர்னி 6, பால் ஸ்டிர்லிங் 11, ஹாரிடெக்டர் 6, கர்டிஸ் கேம்பர் 0, ஜார்ஜ் டாக்ரெல் 0 ரன்களில் நடையை கட்டினர். 13 பந்துகள் இடைவெளியில் இந்த 5 விக்கெட்களும் சரிந்திருந்தன. சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கரேத் டெலானி 14 ரன்களில் போல்டானார்.
» T20 WC | டக்கரின் பேட்டிங் மிரட்டல் வீண் - அயர்லாந்தை 42 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா
» T20 WC | ‘என்னைத் தாண்டி அடி பார்க்கலாம்’ - அயர்லாந்து வீரர் மெக்கார்த்தியின் அபார ஃபீல்டிங்
ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதிலும் தனிநபராக லார்கன் டக்கர் போராடினார். 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசி அசத்தினார் லார்கன் டக்கர். சீராக ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மார்க் அடேர் (11), ஃபியோன் ஹேண்ட் (6) ஆகியோர் ஆடம் ஸம்பா பந்தில் நடையை கட்டினர்.
கைவசம் 2 விக்கெட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 62 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 17-வது ஓவரில் லார்கன் டக்கர் 3 பவுண்டரிகள் உட்பட 18 ரன்களை விளாசினார். பாட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மெக்கார்த்தியை (3) ஆட்டமிழக்கச் செய்தார். இந்த ஓவர் திருப்புமுனையாக அமைந்தது.
கடைசி 12 பந்துகளில் 43 ரன்கள் தேவை என்ற கடினமான நிலைக்கு அயர்லாந்து தள்ளப்பட்டது. மேக்ஸ்வெல் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ஜோஷ் லிட்டில் (1), ரன் அவுட்டில் வெளியேற 18.1 ஓவரில் 137 ரன்களுக்கு அயர்லாந்து அணி ஆட்டமிழந்தது. லார்கன் டக்கடர் 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்தத் தொடரில் 2-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று குரூப் 1 பிரிவில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிராகஆஸ்திரேலிய அணி விளையாட இருந்த ஆட்டம்மழை காரணமாக ரத்தாகி இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் ரன் ரேட்டில் சற்று முன்னேற்றம் கண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது.
அதேவேளையில் அயர்லாந்து அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்திருந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றிருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டிருந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அயர்லாந்து 3 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி ஆட்டத்தில் வரும் 4-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. அதேநாளில் அயர்லாந்து, நியூஸிலாந்து அணியுடன் தனது கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது.
3-வது இடத்தில்…: அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 3 சிக்ஸர்கள் விளாசினார். இதன் முலம் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆரோன் பின்ச் 3-வது இடத்துக்கு முன்னேறினார். அவர், 125 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
பின்ச் காயம்: அயர்லாந்துக்கு எதிராக அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்சிற்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பீல்டிங்கின் போது 7 ஓவர்கள் மட்டுமே அணியை வழிநடத்தினார். இதன் பின்னர் சிகிச்சைக்காக அவர், களத்தில் இருந்து வெளியேறினார். எஞ்சிய ஓவர்களில் மேத்யூ வேட், கேப்டனாக செயல்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago