T20 WC | டக்கரின் பேட்டிங் மிரட்டல் வீண் - அயர்லாந்தை 42 ரன்களில் வென்றது ஆஸ்திரேலியா

By செய்திப்பிரிவு

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், ஸ்டாய்னிஸ், மார்ஷ், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், சாம்பா போன்ற வீரர்கள் அணியின் வெற்றிக்கு உதவினர்.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. ஃபின்ச், 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். ஸ்டாய்னிஸ் 35 ரன்களும், மார்ஷ் 28 ரன்களும் எடுத்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலக்கை விரட்டியது அயர்லாந்து. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இந்த இன்னிங்ஸில் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் என இருவரும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அதுவும் பவர் பிளேவின் அடுத்தடுத்த ஓவர்களில் இந்த விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றி இருந்தனர். அது அயர்லாந்துக்கு பேரிடியாக அமைந்தது.

இருந்தும் அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டக்கர் அவரது பெயருக்கு ஏற்ற வகையில் விளையாடிக் கொண்டிருந்தார். 48 பந்துகளில் 71 ரன்களை அவர் குவித்தார். இறுதி வரை பலம் வாய்ந்த ஆஸி. அணியின் பந்து வீச்சாளர்களால் அவரது விக்கெட்டை வீழ்த்தி முடியவில்லை.

18.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. அதன் மூலம் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE