அடிலெய்டில் நடைபெறும் பகலிரவு, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் முதல் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது, கவாஜா 3 ரன்களுடனும், மேட் ரென்ஷா என்ற அறிமுக வீரர் பல சோதனைகளைக் கடந்து 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். வார்னர் சில நேரம் பீல்டில் இல்லாததால் உடனடியாக களமிறங்க முடியவில்லை.
ஒருவேளை இதனைப் பயன்படுத்திக் கொள்ளவே டுபிளெசிஸ் டிக்ளேர் செய்தாரோ என்று தோன்றுகிறது. அல்லது 12 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியை ஒருகை பார்க்கலாம் என்று கூட ஆக்ரோஷமான டிக்ளேரை டுபிளெசிஸ் செய்திருக்கலாம்.
இன்றைய ஆட்டத்தின் நாயகர்கள் இருவர். ஒன்று 118 நாட் அவுட் ஆக இருந்த டுபிளெசிஸ், 2-வது மிக அருமையாக வீசிய ஹேசில்வுட் (4/68).
இன்று டுபிளெசிஸ் களமிறங்கும் போது பந்தைச் சேதப்படுத்திய புகாருக்காக ஆட்டத்தொகையை இழந்ததை முன்னிட்டு ரசிகர்கள் கேலித்தொனியுடன் களமிறங்கினார். ஆனால் அந்தப் புகாருக்கும் ரசிகர்கள் கேலிக்கும் பதிலளிக்குமாறு மிக அருமையான சதம் ஒன்றை அவர் அடித்தார், அதுவும் எதிர்முனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் சில அற்புதமான ஆஸ்திரேலிய பந்து வீச்சையும் தூணாக நின்று எதிர்கொண்டு சதம் அடித்தார் டுபிளெசிஸ்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் டுபிளெசிஸ். அடிலெய்ட் பிட்சில் பந்துகள் முதல் 2 அல்லது இரண்டரை நாட்களுக்கு பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டது. இன்றும் அதேபோல்தான் இருந்தது.
ஸ்டார்க், ஹேசில்வுட் அருமையான திசையிலும் லெந்த்திலும் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் வீசி சவால் அளித்ததில் டீன் எல்கர் 5 ரன்களில் ஸ்டார்க் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரர் குக், இவரது ஆட்டம் பற்றி சொல்லியே ஆகவேண்டும், இவரது உத்தி, ஆஃப் ஸ்டம்ப் திசையில் வரும் பந்துக்கு தோதானது அல்ல, ஏனெனில் இவர் நகர்ந்து ஆடுபவர். இதனால் எல்.பி.டபிள்யூ வீரர் என்று பவுலர்கள் நினைக்கலாம். ஆனால் இவர் அம்மாதிரி பவுலர்களை நினைக்க வைத்து அவர்களை நேராக வீசச் செய்து அதன் மூலம் ரன்களை எடுப்பவர். இன்று அப்படித்தான், எல்.பி.க்கு ஆசைப்பட்டு அவருக்கு பந்தை நேராக வீசிய போதெல்லாம் அவர் சவுகரியமாக ரன்களை எடுத்தார். சில ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை கணித்து அவர் ஆடாமல் விட்டாலும் சற்றே நெருக்கமாக வீசினால் தொட்டு விடக்கூடியவர்தான் இவர், ஆனால் இன்று அவர் ஆஸி.பவுலர்களை எல்.பி.ஆசைகாட்டி 40 ரன்கள் வரைத் தாக்குப் பிடித்தார், இவரது இந்த உத்தியை இயன் சாப்பல் மிகச்சரியாக சுட்டிக் காட்டினார். ஆனால் இவர் 4 ரன்களில் இருக்கும் போது ஸ்டார்க் பந்தில் எல்.பி.ஆனார். ஆனால் அது நோபாலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டுமினிக்கு ஹேசில்வுட் ஒரு அருமையான பந்தை கடினமான லெந்தில் வீச டுமினி மட்டை உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் மேத்யூ வேடிடம் கேட்ச் ஆனது, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வேட் பிடிக்கும் முதல் டெஸ்ட் கேட்ச் இது! டெஸ்ட் கிரிக்கெட்டின் அபாய வீரர் ஹஷிம் ஆம்லா 5 ரன்களில் ஹேசில்வுட் பந்தை எட்ஜ் செய்ய அறிமுக வீரர் ரென்ஷா தன் முதல் டெஸ்ட் கேட்சைப்பிடித்தார்.
44/3 என்ற நிலையில் டுபிளெசிஸ் ரசிகர்களின் கேலிக்குரல்களுடன் களம் புகுந்தார். ஆஃப் திசையில் அருமையாக டிரைவ்களை ஆடிய டுபிளெசிஸ் லெக்திசையிலும் சில அருமையான டைமிங் பவுண்டரிகளை அடித்தார், மொத்தம் 17 பவுண்டரிகளில் பாதிபவுண்டரிகள் ஸ்டார்க் பந்தில் அடித்ததே. இவரும் குக்கும் ஸ்கோரை 44/3 என்ற நிலையிலிருந்து 95க்கு கொண்டு சென்றனர், குக் அப்போது 40 ரன்களில் ஸ்டார்க் பந்தை ஸ்மித்திடம் எட்ஜ் செய்தார்.
92 பந்துகளில் டுபிளெசிஸ் அரைசதம் கடந்தார். சதம் 147 பந்துகளில் கடந்தார். தெம்பா பவுமா என்ற உறுதி மிக்க வீரர் 8 ரன்களில் ஜேக்சன் பேர்ட் பந்து ஒன்று கூடுதலாக எழும்ப எட்ஜ் செய்தார். குவிண்டன் டி காக் 24 ரன்களை விரைவில் எடுத்து அச்சுறுத்தினார், ஆனால் ஹேசில்வுட் இரண்டு ஒரேமாதிரியான பந்துகளை அவருக்கு வீசினார் ஒன்று ஸ்கொயர்லெக்கில் பவுண்டரி ஆனது, மற்றொன்று அதே லெந்தில் போதிய ஸ்விங் ஆக எட்ஜ் ஆனது, அருமையான பந்து வீச்சு இது. இந்தத் தொடரில் அரைசதம் எடுக்காமல் டி காக் திரும்பியது இதுவே முதல்முறை. வெர்னன் பிலாண்டரும் இன்சைடு எட்ஜில் காலியானார், ஹேசில்வுட் விக்கெட்.
ஆனால் இதன் பிறகு கைல் அபாட் அருமையாக நின்று உறுதுணை காட்டினர், இவர் 50 பந்துகளில் 17 ரன்களை எடுக்க டுபிளெசிசுடன் இணைந்து முக்கியமான அரைசதக் கூட்டணி அமைத்தார். ஆனால் 17 ரன்களில் பேர்டு பந்தில் எல்.பி.ஆனார். நேதன் லயன் பந்துகள் ஒரு ஸ்பாட்டில் பட்டு அருமையாக திரும்பி எழும்பின, அவருக்கு விக்கெட் விழாதது துரதிர்ஷ்டமே. ஸ்மித்தும் அவருக்கு சிலிபாயிண்ட் நிறுத்தவில்லை, டிகாக் பேட் செய்யும் போது ஷார்ட் பைன் லெக் நிறுத்தவில்லை. கடைசியில் நேதன் லயன் ரபாடாவை ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். பெர்த்தில் விக்கெட் எடுத்த பிறகு லயனுகு இந்த விக்கெட்டுதான்.
கடைசியில் இறங்கிய இடது கை சைனமன் பவுலர் ஷம்சி 18 ரன்களை அடித்தார், மட்டையை சுழற்றினார், டுபிளெசிசுடன் இணைந்து 39 முக்கியமான ரன்களை சேர்த்தார். 118 ரன்களில் டுபிளெசிஸ் இருந்த போது, ஸ்கோர் 259ல் இருந்த போது இன்னிங்ஸை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார்.
அதன் பிறகு 12 கடினமான ஓவர்களை ஆஸ்திரேலியா வார்னர் இல்லாமல் எதிர்கொள்ள நேரிட்டது, ஆனால் தொடக்க வீரர்களான ரென்ஷா, கவாஜா சவாலுக்கு சரிநிகராக பதில் அளித்தனர், முதல் ரன்கள் மட்டையிலிருந்து வந்த போது 37 பந்துகள் முடிந்திருந்தன. அபாட் 3 ஓவர்களை வீசி 3 ஓவர்களுமே மெய்டன். பிலாண்டர், ர்பாடா, ஷம்சி என்று ஒருவரிடமும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. 14/0 என்று முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago