T20 WC | த்ரில் கிளைமாக்ஸ்: வங்கதேச வி.கீப்பர் செய்த பெருந்தவறு- திக் திக் கடைசி பந்தில் வங்கதேசம்  ‘கிரேட் எஸ்கேப்’

By ஆர்.முத்துக்குமார்

இந்தியா-பாகிஸ்தான், பாகிஸ்தான்-ஜிம்பாப்வே மேட்சுக்குப் பிறகு இவற்றை விடவும் திக் திக் கிளைமாக்ஸ் கொண்ட வங்கதேச-ஜிம்பாப்வே உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்சனின்(64) அபாரமான வெற்றிக்கான இன்னிங்ஸ், அவரை வெளியேற்றிய வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசனின் மேஜிக் ரன் அவுட் என்று மிகப்பிரமாதமான டி20 உலகக்கோப்பை போட்டியாக இந்த பிரிஸ்பன் போட்டி இன்று அமைந்தது. கடைசியில் வங்கதேசம்தான் த்ரில் வெற்றி பெற்றது. ஆனால் இதை கிரேட் எஸ்கேப் என்றுதான் கூற வேண்டும்.

கடைசி ஓவரில் நடந்தது என்ன? வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறினால் விளைந்த நோ-பால்:

வங்கதேச அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே 35/4 என்ற சரிவு நிலையிலிருந்து மீண்டு ஷான் வில்லியம்ஸ் 64 ரன்களை எடுக்க, ரியான் பர்ல் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்க ஜிம்பாப்வே கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலைக்கு வந்தது. அதாவது 17வது ஓவர் முடிவில் 111/5 என்று முன்னேறியிருந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை. வங்கதேசம் அனைத்து பவுலர்களின் ஓவரையும் முடித்து விட்டதால் மொசாடக் ஹுசைன் என்ற ஸ்பின்னரிடம்தான் கொடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தை வேகமாக மொசாடக் வீச கால்காப்பில் பட்டு சிங்கிள் சென்றது. கடந்த போட்டி ஹீரோ எவான்ஸ் வந்தார். அவர் அடித்த ஷாட் சிக்சருக்குப் போயிருக்க வேண்டியது. ஆனால் டீப் மிட்விக்கெட்டில் மிகவும் தொலைதூர பவுண்டரி என்பதால் ஆஃபிப் ஹுசைனிடம் கேட்ச் ஆனது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் இங்கரவா இறங்கினார். அவர் இறங்கியவுடன் சோதனையாக ஒரு பந்து அவரது இடுப்பில் பட்டு 4 ரன்களுக்கு சென்றது. லெக் பை என்றாலும் 4 ரன்கள். 4வது பந்தை மொசாடக் லெக்ஸ்டம்பில் வீச அதனை சற்றும் எதிர்பாராதவிதமாக திகைப்பூட்டும் ஒரு ஷாட்டை பைன் லெக்கில் தூக்கி அடிக்க பந்து சிக்சருக்குப் பறந்தது. வங்கதேசம் கடும் பிரஷருக்குள்ளானது. ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மொசாடக் அடுத்த பந்தை வேகமாக வீச, இறங்கி வந்த இங்கரவா அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

6வது பந்து 6 ரன்கள் தேவை என்ற நிலையில் முசரபானி இறங்கினார், இவரும் லேசாக இறங்கி வந்து ஒரு சுத்து சுத்த பந்து சிக்கவில்லை விக்கெட் கீப்பரிடம் சென்ற பந்தை அவர் ஸ்டம்பிங் செய்ய வங்கதேசம் கொண்டாடித் தீர்த்தது. அனைவரும் பெவிலியனே சென்று விட்டனர். ஆனால் அங்குதான் களநடுவர், மூன்றாம் நடுவர்கள் சிறப்பான சம்பவம் செய்தனர். விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் அவசரத்தில் ஒரு அடிப்படைத் தவறைச் செய்தார். அது என்னவெனில் பந்து ஸ்டம்பைத் தாண்டி வரும் முன்பே கிளவ்வை முன்னதாக நீட்டி பந்தை ஸ்டம்புக்கு முன்னதாகவே பிடித்து ஸ்டம்பிங் செய்தது ரீப்ளேயில் தெரியவர நோ-பால் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படிச் செய்தால் அது நோ-பால் தான். கடைசி பந்து ஃப்ரீ ஹிட் ஜிம்பாப்வேவுக்கு வெற்றி பெற 4 ரன்கள் தேவை. டை செய்ய 3 ரன்கள் தேவை. ஆனால் முசரபானி பந்தை கனெக்ட் செய்ய முடியவில்லை வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது.


ஷாண்டோவின் அற்புதமான இன்னிங்சில் வங்கதேசம் 150 ரன்கள் தேற்றியது!

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இது நல்ல பேட்டிங் பிட்ச். ஆனால் எப்போதும் போல் தரமான பவுலிங்குக்கு சாதக பலன் இருக்கும் அப்படிப்பட்ட பிரிஸ்பன் பிட்ச் இது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முசரபானி அருமையாக வீசி முதலில் சவுமியா சர்க்கார் (0), லிட்டன் தாஸ் (14) இருவரையும் வெளியேற்றி 2 ஓவர்களில் 13 ரன்களையே விட்டுக்கொடுத்தார்.

ஆனால் முசராபனியிடம் 4 ஓவர்களை ஏன் கொடுக்கவில்லை என்பது புரியாத புதிர்தான். வங்கதேசத்தின் இடது கை பேட்டர் ஷாண்ட்டோ அற்புதமான சில ஷாட்களை ஆடினார், எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ், ரிவர்ஸ் ஷாட் என்று அசத்த வங்கதேசம் பவர் ப்ளேயில் குறைவாக எடுத்திருந்தாலும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், உதவிபுரிய இருவரும் சேர்ந்து 54 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது ஷாகிப் 23 ரன்களில் முசர்பானியின் அற்புதமான கேட்சுக்கு ஸ்கொயர் லெக் திசையில் அவுட் ஆகி வில்லியம்சனிடம் வீழ்ந்தார்.

10 ஓவர்களில் 63/2 என்று இருந்த வங்கதேசம் ஷாண்ட்டோவின் அதியற்புத ரிஸ்க் இல்லாத அதிரடியிலும், ஆஃபிப் ஹுசைனின் புத்திசாலித்தனமான சிறிய அதிரடியிலும் (19 பந்தில் 29) அடுத்த 5 ஓவர்களில் 50 ரன்களை விளாசி 15 ஓவர்கள் முடிவில் 113/4 என்று கொண்டு சென்றனர். ஷாண்டோ 55 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து 17வது ஓவரில் சிகந்தர் ரசாவிடம் அவுட் ஆக, அதன் பிறகு ஜிம்பாப்வே பவுலர்கள் கிடுக்கிப் பிடி போட வங்கதேசம் 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இங்கரவா வீசிய கடைசி ஓவரில் வங்கதேசம் ஒரு ரன் அவுட் உட்பட 3 விக்கெட்டுகளை இழக்க 150/7 என்று முடிந்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் இங்கரவா 24 ரன்களுக்கு 2 விக்கெட், முசராபானி 2 விக்கெட்டுகள், ஆனால் இவரது 4 ஓவர்களை முடிக்கவில்லை.

35/4-லிருந்து ஷான் வில்லியம்சனின் வெற்றிப் போராட்டம்; ஷாகிப் அல் ஹசனின் மேஜிக் கேட்ச் மற்றும் ரன் அவுட்:

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது அதிர்ச்சியளித்தார் வெஸ்லி மெத்வரே அருமையான ஒரு பேக்புட் பஞ்ச் பவுண்டரிக்குப் பிறகே தூக்கி அடிக்கும் முயற்சியில் டீப்பில் கேட்ச் ஆனார். கிரெய்க் எர்வின் அப்போதுதான் அருமையான ஒரு பவுண்டரியை அடித்தார். ஆனால் அடுத்த பந்தே பொறுமையின்றி வைடு பந்தை விரட்டி எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார்.

6வது ஓவர் ஜிம்பாப்வேவுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார் இடது கை கட்டர் பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான். முதலில் ஷும்பா (8) லெந்த் பந்தை சும்மா சிப் செய்தார். அது ஷாகிப் அல் ஹசனின் இடது புறம் மிகவும் தாழ்வாகச் செல்ல முழு டைவ் அடித்த ஷாகிப் அல் ஹசன் பந்து தரை தட்டுவதற்கு இரண்டு இஞ்ச் முன்னதாக கேட்சை எடுத்தார். மேஜிக் கேட்ச். அதே ஓவரில் சிகந்தர் ரசா தேவையில்லாத ஷாட்டை ஆடி ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேற ஜிம்பாப்வே பவர் ப்ளேயில் 35/4 என்று ஆனது. பிறகு சகப்வாவும், ஷான் வில்லியம்சனும் கொஞ்சம் நிலை நிறுத்தி ஸ்கோரை 12வது ஓவரில் 69 ரன்களுக்கு உயர்த்த சகப்வா 15 ரன்களில் டஸ்கின் அகமதுவின் 3வது விக்கெட்டாக வெளியேறினார்.

அடுத்ததாக இறங்கிய பர்ல் 2 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் விளாச, ஷான் வில்லியம்சனும் ஒருமுனையில் அருமையான சில ஷாட்களை கேப்பில் ஆடி ரன்களை ஏற்ற அடுத்த 6 ஓவர்களில் 63 ரன்களை விளாசினர். 18.3 ஓவர்களில் 132 என்று ஜிம்பாப்வேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமான தருணத்தில் ஷான் வில்லியம்சன் ஷாகிப் அல் ஹசன் பந்தை அருகிலேயே தட்டி விட்டு ஒரு சிங்கிள் எடுக்கலாம் என்று நினைக்க தன் வலப்புறம் வேகமாக ஓடிய ஷாகிப் அல் ஹசன் பந்தை எடுத்து படுக்கை வசமாக இருந்த படியே திரும்பி நேராக ரன்னர் முனை ஸ்டம்பைப் பெயர்த்தார். உண்மையில் மேட்ச் வின்னிங் ரன் அவுட் அது, மேஜிக் ரன் அவுட்.

பிராட் இவான்ஸ் 2 ரன்களில் வெளியேறினார். பிறகுதான் கடைசி ஓவரில் பெரிய ட்ராமா நடந்தது. 16 ரன்கள் தேவை என்ற நிலையில் மொசாடக் ஹுசைன் அருமையாக வீசினார். ஆனால் ஒரு லெக் பை பவுண்டரி வர, இங்கரவா இறங்கி ஒரு திகைப்பூட்டும் சிக்சரை பைன் லெக்கில் அடிக்க வெற்றிக்கு அருகில் வந்தது ஜிம்பாப்வே. ஆனால் இங்கரவா இறங்கி வந்து ஆடி ஸ்டம்ப்டு ஆனார். அடுத்த பந்தில் முசராபனியும் ஸ்டம்ப்டு ஆனார், ஆனால் இதுதான் சர்ச்சையானது. அந்த ஸ்டம்பிங், பந்தை ஸ்டம்பிற்கு முன்னால் பிடித்து அடித்தார் நுருல் ஹ்சன். இதனால் அது நோ-பால், ஃப்ரீ ஹிட் ஆக, வங்கதேசம் அதிர்ச்சியடைந்தது, மீண்டும் வந்து பந்து வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அந்த ஒரு பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முசாடக் ஹுசைன் அருமையாக வீசினார். பந்து மாட்டவில்லை. வங்கதேசம் த்ரில் வெற்றி. ஆட்ட நாயகன் டஸ்கின் அகமது.

இந்த வெற்றி மூலம் வங்கதேசம் மூன்றில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது. ஆனால் நெட் ரன்ரேட் -1.533 என்று இருப்பதால் அரையிறுதி வாய்ப்பு இன்னமும் கூட கடினமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்