T20 WC | இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய முகமது ஆமிர்

By செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி உள்ளார்.

அவர் மட்டுமல்லாது கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஜிம்பாப்வே உடனான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியை விமர்சித்து வருகின்றனர். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.

“உலகக் கோப்பை தொடருக்கான இந்த அணி அறிவித்த அந்த நாளிலிருந்தே மிகவும் மோசமான அணித் தேர்வு இது என நான் சொல்லி வருகிறேன். இதற்கு வாரியத்தின் தலைவரும், தேர்வுக் குழு தலைவரும் தான் முழு பொறுப்பு” என ஆமிர் ட்வீட் செய்துள்ளார். முன்னதாக, “தேர்வுக்குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான (Cheap) தேர்வு” எனக் குறிப்பிட்டு உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி குறித்த அறிவிப்பு வெளியான போது அவர் ட்வீட் செய்திருந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் ஆமிர். மொத்தம் 259 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். 30 வயதான அவர் கடந்த 2020 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதே போல பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தரும் அணியின் தோல்வியை விமர்சித்ததுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE