T20 WC அலசல் | இது கோலியின் உலகக் கோப்பை? - உலக அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்த 2-வது அரைசதம்

By ஆர்.முத்துக்குமார்

சிட்னியில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையின் இன்றைய 2வது ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் 3 வரிசையான ரோஹித், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் வித்தியாசமான அரைசதங்களை எடுக்க நெதர்லாந்தை 56 ரன்களில் எளிதில் வீழ்த்தியது இந்தியா. அன்று பாகிஸ்தானை தனிநபராக ஊதிய விராட் கோலி இந்தப் போட்டியிலும் நிதானமாகத் தொடங்கி பிறகு பொங்கி எழுந்து அற்புதமான அரைசதத்தை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

அவரின் இந்த இன்னிங்ஸ், இந்த டி20 உலகக்கோப்பை கோலியினுடையது என்பதை அறிவுறுத்துவதாகவும் இனிவரும் டி20, ஒருநாள் போட்டிகள் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி இன்னொரு பெரிய 2வது இன்னிங்ஸிற்குத் தயாராவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விராட் கோலியின் இந்த பார்ம் மீட்பு, அவரது பழைய பார்மை விடவும் எதிரணிகளுக்கு அபாயகரமானது.

ரோஹித் சர்மா இருக்கும் வரைக்கும் ஒன்று, இரண்டு என்று நங்கூரம் பாய்ச்சிய விராட் கோலி முதல் 21 பந்துகளில் பவுண்டரி எதையும் அடிக்கவில்லை. ரிஸ்க் எடுக்கவில்லை, இன்னிங்ஸ் முடியும் போது 44 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து நாட் அவுட், அதாவது முதல் 21 பந்துகளில் 20 ரன்களையே எடுத்த கோலி அதன் பிறகு 23 பந்துகளில் 42 ரன்கள் என்று கிட்டத்தட்ட சூரியகுமாரின் ஸ்ட்ரைக் ரேட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் 73 ரன்கள் கூட்டணி அமைக்க, சூரியகுமார் யாதவ் இறங்கி தன் போக்கில் அனாயசமாக மைதானங்களின் இடைவெளிகளைப் பிடித்து ரன்களைக் குவித்து கடைசி பந்தில் மிகப்பெரிய சிக்சரை விளாசி 25 பந்துகளில் 200% ஸ்ட்ரைக் ரேட்டுடன் 51 ரன்களை 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் விளாச, இவரும் கோலியும் இணைந்து 48 பந்துகளில் 95 ரன்களை அடித்து நொறுக்கினர். 179/2 என்று இந்திய அணி முடிக்க நெதர்லாந்து எந்த நேரத்திலும் இந்திய இலக்கை எட்டுமாறு ஆடவில்லை. அக்சர் படேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கழற்ற 123/9 என்று முடிந்தது நெதர்லாந்து.

இது கோலியின் கோப்பையா?: கோலி தொடர்ச்சியாக 2 அரைசதங்களை அடித்தது பெரிய விஷயமல்ல, இந்த இரண்டில் ஒன்று மெல்போர்ன் கிரீன் டாப் எகிறு பிட்சில். இன்று அவர் ஆடியது ரிஸ்க்கே இல்லாத ஒரு நிதானத் தொடக்கம் பிறகு அதிரடி, அதுவும் இடைவெளிகளைக் கண்டுப்பிடித்து துல்லியமாக ஆடினார். இது எதிரணிகளுக்கு இனி வரும் எந்த வடிவ போட்டியாக இருந்தாலும் கோலி அபாய வீரராகத்தான் இருப்பார் என்பதற்கான எச்சரிக்கை மணி.

ஆஸ்திரேலியா பிட்ச்களில் பந்து புதிதாக இருக்கும் போது நிதானித்து பழசானவுடன் ஆக்ரோஷம் காட்ட வேண்டும் அதனால்தான் கடைசி 10 ஓவர்களையே ஆக்ரோஷத்துக்கு எந்த அணியும் தேர்வு செய்ய வேண்டும், இதை கோலி இந்த 2 போட்டிகளிலும் துல்லியமாகச் செய்து காட்டியுள்ளார்.

டெத் ஓவர்களில் உண்மையில் சிறந்த வீரர் விராட் கோலிதான். அதனால்தான் தொடக்கத்தில் கொஞ்சம் அப்படி இப்படி ஆடினாலும் முடிக்கும் போது விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டுகளுக்கு, ஹிட்டர்களுக்கு ஒப்பானதே.

மேலும் இந்தியா, ஷார்ஜா போன்ற பிட்ச்களில் 200 ரன்கள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற பிட்ச் உள்ளிட்ட நிலைமைகளில் கோலியின் இன்னிங்ஸ் சற்றே மெதுவானதாகத் தெரியும், ஆனால் ஆஸ்திரேலியப் பிட்ச்களில் 160-62 ரன்களை சேஸ் செய்வதே கடினம். அதனால் இங்கு கோலி விவரமாக அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்தார், நெதர்லாந்துக்கு எதிராக கடைசி வரை நிற்போம் எப்படியும் 180 பக்கம் வரும் என்று திட்டமிட்டு ஆடினார்.

மேலும் கோலி வாள் சுழற்றுவது போல் பேட்டை சுற்றி ஆடிய இன்னிங்ஸ்களிலெல்லாம் அவர் சோபித்ததில்லை. இங்கேயே கூட கோலி அடுத்ததாக ஒரு 200 ரன் பிட்ச் அமைந்தால் மீண்டும் பேட்டை சுற்றும் ஆட்டத்திற்கும் அவர் திரும்பலாம், இப்போது அவர் இருக்கும் தன்னம்பிக்கையில் பார்மில் அதுவும் கைகூடினாலும் கைகூடும்.

மேலும் சூரியகுமார் யாதவ் இறங்கினால் நிச்சயம் அடிப்பார் என்று கோலிக்குத் தெரிவதால் அவர் நின்று ஆடுகிறார், பிறகு அடித்து ஆடுகிறார். இந்த ஆஸ்திரேலிய பிட்ச், மைதானத்தின் அளவு பொறுத்தமட்டில் கோலியின் ஆட்டப்பாணிதான் சிறந்தது என்பதை அவர் இதுவரை நிரூபித்துள்ளார். ஆனாலும் எதிரணியினரின் பலத்தைப் பொறுத்து முதலில் பேட்டிங் ஆடும்போது இன்னும் கொஞ்சம் வேகமாக ரன்கள் எடுப்பது நல்லது. இது கோலிக்கும் தெரியும், அந்தப் பாதையில்தான் அவரும் செல்கிறார். ஆகவே இது கோலியின் கோப்பை, இந்தியாவின் கோப்பையானாலும் ஆகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்