நடப்பு டி20 உலகக் கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் மகா அறுவையான ஒரு போட்டி உண்டென்றால், ஒரு தலைபட்சமான போட்டி ஒன்று உண்டென்றால் அது இன்று சிட்னியில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டிதான். தென் ஆப்பிரிக்கா 205/5 என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க, நெட் ரன் ரேட்டுக்காகக் கூட நல்ல பேட்டிங்கை ஆட முடியாத வங்கதேசம் 16.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு எந்த ஒரு போராட்டமும், முயற்சியும் இன்றி டோட்டலாக சரணடைந்தது.
ஏதோ தென் ஆப்பிரிக்காவின் நெட் ரன் ரேட்டை உயர்த்திவிட வங்கதேசம் ஆடியது போல்தான் இருந்ததே தவிர, வெற்றி பெறும் எண்ணம் கூட வங்கதேசத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தென் ஆப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதால் நெட் ரன் ரேட் இப்போது 5.2 என்று அபார நிலையில் உள்ளது. அதோடு குரூப் 2-வில் மூன்று புள்ளிகளையும் பெற்று முதலிடத்தில் உள்ளது.
உலகின் அபாய டி20 கூட்டணி ரைலி ருசோவ், குவிண்டன் டி காக் சிக்சர் மழை: சிட்னி சிறந்த பேட்டிங் பிட்ச் அன்று நியூசிலாந்து ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்தனர். அதனால் இந்த முறை தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பவுமா முதல் ஓவரிலேயே நடுக்கத்துடன் ஆடி 2 ரன்களில் டஸ்கின் அகமதின் வெளியே போகும் பந்தை விளடையாட சென்று, அது எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது.
இந்த விக்கெட்டுக்குப் பிறகு ருசோவ் இறங்கி டி காக்குடன் சேர்ந்த பிறகு நடந்தது படுகளம், அதகளம்தான். வங்கதேசம் வெறுமனே பந்தை வீச இவர்கள் இருவரும் விளாச பந்தை பவுண்டரியிலிருந்து பொறுக்கி எடுத்து மீண்டும் களத்தில் வீசுவதும்தான் வங்கதேச பீல்டர்களின் வேலையாக இருந்தது. கிரிக்கெட் உலகில் அபாயகரமான பேட்டிங் இணையரான ருசோவ், டி காக்கின் சிக்சர் மழை பொழிந்தனர்.
» கோவை சம்பவம் | “அண்ணாமலையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்” - அமைச்சர் செந்தில்பாலாஜி
» T20 WC | பேட்டிங்கில் மிரட்டிய ரோகித், கோலி & சூர்யகுமார் யாதவ்: நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு
டஸ்கின் அகமது வீசிய 2-வது ஓவரில் 21 ரன்களை லீக் செய்தார். அப்போது டி காக் ஆக்ரோஷம் காட்ட அடுத்த சில நிமிடங்களில் ரைலி ருசோவ் இதோ நானும் என்று இணைந்து அடுத்த 2 ஓவர்களில் 3 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி விளாசினார். மழை வந்ததை பெரிய ஆசீர்வாதமாக வங்கதேசம் கருதியிருக்கும். ஆனால் மழைக் கடவுளும் அவர்களை காப்பற்றவில்லை இதனால் சிக்சர் மழையை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
ருசோவ் தொடர்ந்து லாங் ஆன் மற்றும் அதற்குக் கொஞ்சம் தள்ளி என்று சிக்சர்களை விளாசி 19 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார். அந்த இடங்களில் அடிக்க முடியாதவாறு வங்கதேசத்தினால் வீச முடியவில்லை என்பதுதான் உண்மை. மேலும் 2 சிக்சர்களை ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார் ருசோவ். 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசிய அவர் 109 ரன்களை எடுத்தார். இவர் லெக் திசை பவுண்டரிகளை கவனித்துக் கொள்ள டி காக் தன் பெரும்பாலான ஆஃப் திசையில் பவுண்டரி லைனுக்கு பந்தை விரட்டினார். கட் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் என்று அசத்திய டி காக், லெக் திசையில் 3 சிக்சர்களை விளாசினார்.
முதல் 10 ஓவர்களில் 91 ரன்களை இருவரும் அதிரடியாக குவித்திருந்தனர். அடுத்த 5 ஓவர்கள் இன்னும் வெறிபிடித்தது போல அடித்து நொறுக்கி 84 ரன்களை விளாசி தள்ளினர். ஷாகிப் அல் ஹசன் தன் முதல் ஓவரில் 21 ரன்களை வாரி வழங்கினார். ருசோவ் 89 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை மஹ்மூத் நழுவ விட்டார். 14வது ஓவரில் டஸ்கின் மீண்டும் 23 ரன்கள் கொடுத்தார்.
14.3 ஓவர்களில் 170 ரன்களை எட்டியது தென்னாப்பிரிக்கா. ஆனால் அதன் பிறகு வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மஹமூதும் கொஞ்சம் டைட் லைனில் பந்தை வீசி கடைசி 5 ஓவர்களில் வெறும் 29 ரன்கள்தான் வந்தது. இல்லையெனில் டி காக், ருசோவ் காட்டிய ஆக்ரோஷத்தை தொடர்ந்திருந்தால் மிகப்பெரிய ரன்னை அந்த அணி எட்டியிருக்கும். எய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடி 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் எதிர்கொண்ட முதல் பந்தையே ரிவர்ஸ் ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனாலும் 7 ரன்களில் அவர் வெளியேறினார். டேவிட் மில்லர் 2 ரன்கள் எடுத்திருந்தார். டி காக் 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். ருசோவும், அவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 168 ரன்கள் என்ற மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது.
பிரகாசமாகத் தொடங்கிய வங்கதேசம் சரணடைந்த கதை! - 206 ரன்கள் இலக்கு இந்தப் பிட்சில் எடுக்க முடியாதது அல்ல. அதே போல் சவுமியா சர்க்கார் ரபாடாவின் முதல் ஒவரிலேயே 2 அபாரமான சிக்சர்களை விளாசி பிரகாசமான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் நோர்கியா வந்தார். வந்த வேகத்தில் வங்கதேசத்தை ஊதி தள்ளினார். தொடக்க வீரர் நஜ்முல் ஷாண்ட்டோ, நோர்கியாவின் அதிவேக பந்துக்கு பவுல்டு ஆகி வெளியேறினார். படுமோசமாக அவர் பேட்டை சுழற்றி இருந்தார்.
சவுமியா சர்க்கார், 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் நோர்கியா பந்தில் அண்டர் எட்ஜ் ஆகி வெளியேறினார். கேப்டன் ஷகிப் அல் ஹசன், வேகமாக மிடில் ஸ்டம்புக்கு வந்த பந்தை பிளிக் செய்ய முயன்று அதை மிஸ் செய்து, எல்.பி ஆகி 1 ரன்னில் வெளியேறினார். ஆனால் அவர் ரிவ்யூ செய்திருக்கலாம் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்புக்கு வந்தது. ஸ்டம்ப்களை மிஸ் செய்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஷாகிப் ரிவ்யூ கேட்கவில்லை. 6வது ஓவரில் ஹுசைனை ரபாடா வீழ்த்தினார்.
லிட்டன் தாஸ் 17 ரன்களில் இருந்த போது இளம் வீரர் ஸ்டப்ஸ் கேட்சை விட்டார். அவர் 34 ரன்கள் எடுத்தார். இடது கை ஸ்பின்னர் கேசவ் மகராஜையும் அடிக்க முடியலவில்லை. ஷம்சியையும் வங்கதேச பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியவில்லை. ஷம்சி தன் பங்குக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நோர்கியா கடைசியில் டஸ்கின் விக்கெட்டை கைப்பற்றினார். 3.3 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். பொதுவாகவே நோர்கியா வீசும் பந்துகளை எதிர்கொள்ள வங்கதேச வீரர்கள் கொஞ்சம் அஞ்சுவார்கள். அதுதான் இன்றும் நடந்துள்ளது. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ருசோவ் பெற்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago