T20 WC | டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்தை வென்ற அயர்லாந்து - கேம் ஸ்பிரிட்டை சுட்டிக்காட்டி மிஸ்ரா ட்வீட்

By செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து அணி. இந்நிலையில், அயர்லாந்து அணியை பாராட்டும் வகையில் கேம் ஸ்பிரிட்டை சுட்டிக்காட்டி இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு சூசகமாக அவர் பதிலடி கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணி 14.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாத சூழல் இருந்தது. அதன் காரணமாக டிஎல்எஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மழை பொழிவு இல்லாமல் இருந்திருந்தாலும் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். அமித் மிஸ்ராவும் அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

“மகத்தான வெற்றி பெற்ற அயர்லாந்து அணிக்கு வாழ்த்துகள். டிஎல்எஸ் சிஸ்டத்தின் கீழ் வெற்றி பெறுவதை கேம் ஸ்பிரிட்டில் சேராது என இங்கிலாந்து சொல்லாது என நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை மன்கட் முறையில் அவுட் செய்திருந்தார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. ஐசிசி விதிகளின்படி நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் பேட் செய்பவரை ரன் அவுட் செய்யலாம். இருந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இது கேம் ஸ்பிரிட்டில் சேராது என விமர்சித்திருந்தனர்.

அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் கூட இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மன்கட் முறை அவுட் குறித்து பேசி இருந்தார் அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது. அந்த சம்பவத்தை மனதில் கொண்டு இப்போது மிஸ்ரா ட்வீட் செய்துள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE