T20 WC அலசல் | அயர்லாந்து வெற்றி அதிர்ஷ்டமல்ல... துச்சமாக மதித்து திமிராக ஆடியதாலேயே இங்கிலாந்து தோல்வி!

By ஆர்.முத்துக்குமார்

2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பெங்களூருவில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்திய அயர்லாந்து அணி, இன்று 2022 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் இங்கிலாந்து அணியை மெல்போர்னில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெற, இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு டக்வொர்த் லூயிஸ் முறையில் 14.3 ஓவர்களில் 110 எடுக்க வேண்டிய இங்கிலாந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

நாம் இங்கிலாந்து அணி பற்றி ரிவ்யூ செய்யும்போதே அதிரடி வீரர்களாக கடைசி வரை வைத்திருக்கும் அணிக்கு உள்ள பேராபத்து என்னவெனில் விக்கெட்டுகள் விழுந்தால் மடமடவென விழுந்து நின்று ஆட ஆளில்லாமல் தோற்கும் என்று கூறியிருந்தோம். இன்று அதுதான் நடந்தது. மழை வரும் என்று கணித்திருப்பதால் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு நடந்தது நமக்கும் நடக்கும் என்று யோசிக்கவில்லை. இத்தனை அதிரடி வீரர்களை வைத்துக் கொண்டு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வேண்டியதுதானே! ‘அயர்லாந்துதானே முடக்கி விடலாம் பிறகு அடித்து நொறுக்கி விடலாம்’ என்ற நினைப்புத்தான் இங்கிலாந்தின் பிழைப்பைக் கெடுத்து விட்டது.

வெற்றி ஏதோ அயர்லாந்தின் அதிர்ஷ்டமல்ல, மழையினால் அயர்லாந்து வெற்றி பெற்றது என்று கூறுவதற்கில்லை. இங்கிலாந்து திமிர்த்தனமாக ஆடி, அயர்லாந்தை துச்சமாக மதித்து தன் போக்கில் ஆடியதால்தான் தோல்வி என்றே கூற வேண்டும். அயர்லாந்து ஃபீல்டிங் மேம்பாடு அடைய வேண்டும், இரண்டு கேட்ச்களை அடுத்தடுத்து ஹாரி புரூக் மற்றும் மலானுக்கு கோட்டை விட்டனர். இது நிச்சயம் மேட்சையே விட்டதற்குச் சமம் என்று நினைக்கையில், கேட்சை விட்ட டிலேனியே ஹாரி புரூக்கிற்கு அதே ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் அற்புதமாகக் கேட்சை எடுத்தார்.

மொயின் அலி 12 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் என்றும், இன்னொரு அதிரடி மன்னன் லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னுடனும் கிரீசில் இருந்தனர். ஆட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் இன்னும் 33 பந்துகளில் 53 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்தை மொயின் அலி, லிவிங்ஸ்டன் வெற்றி பெறக்கூட செய்திருக்கலாம். ஆனால், மழை என்றால் கனமழை பெய்யத் தொடங்கியது, கட் ஆஃப் டைம் இந்தப் போட்டிக்கு 10 நிமிடங்கள்தான் என்பதால் மழை மேலும் வலுக்க ஆட்டம் முடிந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அதில் அயர்லாந்தை விட இங்கிலாந்து 5 ரன்கள் குறைவாக பெற்றிருந்ததால் இங்கிலாந்து தோல்வி என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்விங் மன்னர்களுக்கே ஸ்விங் என்றால் என்னவென்று காட்டிய அயர்லாந்து: 158 ரன்கள் வெற்றி இலக்கு மெல்போர்ன் மைதானத்தில் எத்தனை கஷ்டம் என்பதை அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கண்டது. விராட் கோலி இல்லையெனில் அன்று இந்தியா மண்ணைக் கவ்வியிருக்கும், ஹர்திக் பாண்டியாவும்தான். ஆனால் இங்கிலாந்து அணி திமிராகத் தொடங்கியதே இன்றைய அதன் தோல்விக்குக் காரணம்.

ஏனெனில், ஜோஷுவா லிட்டில் என்ற இடது கை ஸ்விங் பவுலர் அயர்லாந்துக்காகத் தொடங்குகிறார். 2வது பந்தை பட்லர் ஏதோ நெட் பவுலரை ஆடுவது போல் மட்டையை விடுகிறார், கிளீன் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார். மிக அருமையான பந்து அது, இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கே உரித்த வகையில் பந்து பிட்ச் ஆகி குறுக்காக சென்றது. அதை கால்களையெல்லாம் நகர்த்தாமல் மிகவும் பொறுப்பற்ற முறையில் பட்லர், ஏதோதான் அடித்தால் மட்டையில் படாமல் போகுமா என்ற இறுமாப்பில் ஆடுவது போல் மட்டையை அதன் மீது விட்டார், எட்ஜ் ஆனது. டக் அவுட் ஆகி வெளியேறினார்.

சரி! ஒரு விக்கெட் போய் விட்டது, அடுத்ததாக இன்னொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானித்திருக்க வேண்டாமா? அவரும் 7 ரன்களில் இதே இடது கை வீரர் ஜோஷ் லிட்டில் ஷார்ட் பிட்ச் பந்தை திரும்பிக் கொண்டு புல் ஆடினார், ஆனால் பந்து டாப் எட்ஜ் ஆகி அடைரிடம் கேட்ச் ஆனது, இது மிகவும் அராஜகமான ஷாட், கொஞ்சம் கூட கவனம் இல்லாமல் ஆடிய ஷாட். இங்கிலாந்து 14/2. டேவிட் மலான் மட்டுமே இத்தகைய பிட்ச்களுக்கு லாயக்கான வீரர். அவர் நேராக ஆடக்கூடியவர்.

இவருடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இருவரும் 15 ரன்களை திக்கித் திணறி 3 ஓவர்க்ளில் எடுத்தனர், காரணம் அயர்லாந்து ஸ்விங் பவுலர்களான ஜோஷ் லிட்டில், மார்க் அடைர், மெக்கார்தி, ஃபியான் ஹேண்ட் அருமையாக ஸ்விங் செய்தனர், ஸ்விங் மன்னர்களான இங்கிலாந்துக்கே ஸ்விங் படம் காட்டியது அயர்லாந்து. பென் ஸ்டோக்ஸ் 8 பந்துகளில் 6 ரன்களை எடுத்த நிலையில் ஃபியான் ஹேண்ட் என்ற பிரமாதமான ஒரு ஸ்விங் பவுலர் வந்த உடனேயே ஒரு பந்தை அருமையாக லேட் இன்ஸ்விங் செய்தார், பென் ஸ்டோக்ஸ் தன் வலது காலை குறுக்காகப் போட்டு ஒரு டெஸ்ட் தடுப்பாட்டம் ஆடுவதை விடுத்து தன் வலது காலை இன்னும் வலது புறமாக லேசாக நகர்த்தி பந்தை புஷ் செய்யப் பார்த்தார் பேட் மற்றும் கால்காப்பு இடைவெளியில் புகுந்து குச்சி பெயர்ந்தது, இங்கிலாந்து 29/3. பவர் ப்ளே முடிவில் இங்கிலாந்து 37/3 என்று தடுமாறியது.

பவர் ப்ளேவுக்குப் பிறகு அருமையான லெக் ஸ்பின்னர் டிலேனி வந்தார். மலான் ஒரு பவுண்டரி அடித்தார், கிட்டத்தட்ட 17 பந்துகளுக்குப் பிறகு ஒரு பவுண்டரி. அதன் பிறகு அடுத்த பவுண்டரி வர இன்னும் 3 ஓவர்கள் ஆனது. 10 ஓவர்கள் முடிவில் 63/3 என்றுதான் இங்கிலாந்து தடுமாறியது. அடிக்க முடியவில்லை, எனவே அயர்லாந்து வெற்றி மழை அதிர்ஷ்டத்தினால் அல்ல, இந்த 10 ஓவர்களில் இங்கிலாந்தை முடக்கியதுதான் அயர்லாந்தின் சாதனை! மாறாக அயர்லாந்து பேட் செய்தபோது முதல் 10 ஓவர்களில் அயர்லாந்து 92 ரன்களை விளாசி 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. ஆகவே, அயர்லாந்துக்கு இந்த வெற்றி தகுதியான வெற்றிதான்.

டிலேனியை அடிக்க முடியவில்லை. மலானும், புரூக்கும் 38 ரன்களை 5 ஓவர்களில் சேர்க்க ஸ்கோர் 11வது ஓவரில் 67 ரன்களை திக்குமுக்காடி எட்ட அப்போதுதான் இடது கை ஸ்பின்னர் டாக்ரெல் வந்தார், 2 கேட்ச்களை அவருக்கு விட்டனர், ஒன்று அடைர் முன்னால் வேகமாக ஓடி வந்ததால் விட்டார், அடுத்த பந்தே மலான் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து ஒதுங்கிக் கொண்டு தூக்கி அடித்தார் கவர் திசையில் டிலேனி கேட்சை ஓடி வந்து விட்டார். சரி அயர்லாந்துக்கு போதாத நேரம்தான் என்று நினைக்கும் போது மீண்டும் ஹாரி புரூக் ஒரு பிக் ஷாட்டை மிட்விக்கெட்டில் ஆட அதே ஓவரில் இம்முறை டிலேனி தவறு செய்யவில்லை. புரூக் 18 ரன்களில் வெளியேறினார்.

டேவிட் மலான் 37 பந்துகளில் வெறும் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து மெக்கார்த்தியின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார் டாப் எட்ஜ் ஆகி ஆஃப் திசையில் தேர்ட் மேனில் கேட்ச் ஆனது. இங்கிலாந்து 13.1 ஓவர்களில் 86/5. அதன் பிறகுதான் மொயின் அலி 3 பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார். லிவிங்ஸ்டன் 1 ரன் எடுத்திருந்தார் 14.3 ஓவர்களில் 105/5 என்ற போது மழை வந்தது. கனமழையாக மாறியது, ஆட்டம் முடிந்தது என்று அறிவிக்கப்படும் போது இங்கிலாந்து 110க்குப் பதிலாக 105 ரன்களையே எடுத்திருந்தது, தோல்வி கண்டது. கோப்பையை வெல்லும் அணி என்று கருதப்பெற்ற அணி கத்துக்குட்டி என்று கருதப்பட்ட அயர்லாந்திடம் தோல்வி.

முதல் 10 ஓவர்களில் விளாசித் தள்ளிய அயர்லாந்து... கேப்டன் பால்பர்னி அபாரம்! - அயர்லாந்து இன்னிங்சில் மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. பால் ஸ்டர்லிங் அதிரடியாகத் தொடங்கினார். பிட்சில் ஸ்விங்கெல்லாம் இருந்தது. ஆனால் இங்கிலாந்து அதை சரியாகப் பயன்படுத்தவில்லை, அல்லது அயர்லாந்து இங்கிலாந்தை பயன்படுத்தவிடவில்லை என்றே கூற வேண்டும். முதல் ஓவரை ஸ்டோக்ஸ் வீசி 3 ரன்களையே கொடுத்தார். 1.3 ஓவர்கள் சென்று மழை வந்தது. ஸ்டர்லிங் வோக்ஸை ஒரு பவுண்டரி அடித்திருந்தார். மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது மார்க் உட் பந்தை பால் ஸ்டர்லிங் தேர்ட்மேனில் சிக்ஸ் அடித்தார், கரன் பந்தை பிடிக்கும் முயற்சியில் கோட்டை தாண்டி விட்டார். பந்து சிக்ஸ். ஆனால் அதே ஒவரில் மார்க் உட் நெருப்பைக் கக்கும் ஒரு பவுன்சரை வீச ஒதுங்கிய ஸ்டர்லிங் மீண்டும் தேர்ட் மேனில் தூக்கினார். ஆனால் இம்முறை கரன் கேட்சைப் பிடித்தார்.

ஆனால், அதன் பிறகு கேப்டன் பால்பர்னி மற்றும் லார்கன் டக்கர் இணைந்து இங்கிலாந்தின் திசையற்ற பந்து வீச்சை வெளுத்து வாங்கி விட்டனர். கிறிஸ் வோக்ஸ் 3 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்தார். உட் வைடு 4 ரன்களை கொடுத்தார். விக்கெட் எடுத்தாலும் மார்க் உட் 4 ஓவர் 34 ரன்களை வாரி வழங்கினார். இன்னொரு பவுலர் சாத்து வாங்கியது சாம் கரன். இவர் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 3 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கினார். 10வது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் 18 ரன்களை கொடுக்க அயர்லாந்து 92/1 என்று அற்புதமான நிலையில் இருந்தது.

அப்போதுதான் டக்கர் 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில், ஆதில் ரஷீத் கையில் பட்டு ரன்னர் முனையில் ஸ்டம்பில் பட வெளியில் இருந்த இவர் ரன் அவுட் ஆனார். இது திருப்பு முனையானது. வரிசையாக விக்கெட்டுகள் காலியாகின. அதிரடி வீரர் கேம்பர் 18 ரன்களையும் டிலேனி 12 ரன்களையும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட 103/1 என்ற நிலையிலிருந்து அயர்லாந்து 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட நாயகனான அயர்லாந்து கேப்டன் பால்பர்னி 47 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் உடன் 62 ரன்களை எடுத்து பொறுப்பாக ஆடினார். லிவிங்ஸ்டன் 3 விக்கெட். ரஷீத் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர் 24 ரன் என்று டைட் செய்தார்.

இந்த 158 ரன்களை எடுக்க இங்கிலாந்து ஆடியபோதுதான் திமிர்த்தனமாக ஆடி மேட்சைக் கோட்டை விட்டது. இதனால் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. அயர்லாந்து பேட் செய்தபோது முதல் 10 ஓவர்களில் 92 ரன்களை அயர்லாந்து விளாசியதும், அதே சமயத்தில் இங்கிலாந்து அணியை முதல் 10 ஓவர்களில் 63/3 என்று முடக்கியதும் இங்கிலாந்து துச்சமாக மதித்து ஆடியதாலும், அயர்லாந்து கேப்டன் பால்பர்னி பொறுப்பாக ஆட இங்கிலாந்து கேப்டன் பட்லர் பொறுப்பற்று டக் அவுட் ஆக அயர்லாந்து வெற்றி பெற்றதே தவிர மழையால் விளைந்த அதிர்ஷ்டம் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்