90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருந்த மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலியின் அத்தனை ஷாட்டுகளும் தீபாவளி வெடிகளை முன்கூட்டியே ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தின. அவர் அடித்த 4 இமாலய சிக்ஸர்கள் ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக அமைந்தது
4 விக்கெட்களுக்கு 31 ரன்கள் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி இருந்தபோது தனது சக அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார் விராட் கோலி. தான் சந்தித்த முதல் 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி அதன்பிறகு ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தார். அடுத்த 29 பந்துகளில் அவர் குவித்த ரன்கள் 67.
குறிப்பாக 16-வது ஓவருக்குப் பிறகு அவர் அடித்த ஷாட்கள், இலக்கணச் சுத்தமாக அமைந்திருந்தன. 19-வது ஓவரில் ரவுஃப்பின் கடைசி 2 பந்துகளையும் அவர் எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டினார். பாகிஸ்தானின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ரவுஃபின் பந்தை சிக்ஸருக்கு விரட்டுவது சாதாரண விஷயமல்ல என்பது கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் புரியும்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பொதுவாகவே பவுன்ஸ் ஆகக்கூடியவை. அதுவும் மிக அதிக வேகத்தில் வரும் பந்துகள் பேட்ஸ்மேனின் பேட்டுக்கு வரும்போது எழும்பிய நிலையில் இருக்கும். அதுவும் அந்த பந்தை நல்ல லெந்த்தில் ரவுஃப் வீசினார். அதை முன்னதாகவே கணித்த அவர் பவுலரின் தலைக்கு மேலேயே அடித்தார். பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்தது. அதைப் போலவே அடுத்து லெக்-சைடில் வீசிய பந்தை அழகாக ஃபிளிக் செய்து சிக்ஸராக்கினார்.
2 மீட்டருக்கும் சற்றே குறைந்த உயரமுடைய இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடியின் பந்துகளையும் கோலி விளாசினார். அப்ரிடி 2021 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்த காரணமாக அமைந்திருந்தார். அந்த தோல்விக்குப் பழிவாங்கும் விதத்தில் விராட் கோலியின் பேட்டிங் அமைந்தது போட்டியின் ஹைலைட்.
கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலியின் பேட்டிங்கில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் ரன் குவிப்பு இயந்திரமாக திகழ்ந்து வந்த விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் ரன் குவிக்காமல் தனது பார்மில் சற்று தடுமாற்றத்தை கண்டு வந்தார். ஆனாலும் சிறிய ஓய்வுக்குப் பிறகு ஆசிய கோப்பை தொடரில் அசத்தலான சதம் விளாசிய விராட் கோலி அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பையிலும் முக்கியமான வீரராக திகழ்வார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அதை தற்போது உண்மையாக்கியுள்ளார் கோலி.
விராட் கோலி கூறும்போது, “ஹோபர்ட் மைதானத்தில் நான் அடித்த இன்னிங்ஸை வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸாக நினைக்கிறேன்" என்றார்.
ஹோபர்ட் மைதானத்தில் விராட் கோலியின் பேட்டில் இருந்த புறப்பட்ட இன்னிங்ஸுக்கு உலகம் முழுவதிலும் இருந்து இன்சமாம், மிட்செல் மார்ஷ் போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
விராட் கோலியின் இன்னிங்ஸ் குறித்து கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “விராட் கோலி, உங்கள் வாழக்கையில் சிறந்த இன்னிங்ஸ் என்றால் இதுதான். உங்களுடைய ஆட்டம் எங்களுக்கு விருந்து போல் இருந்தது. 19-வது ஓவரில்ஹாரிஸ் ரவுஃப்க்கு எதிராக நீங்கள் பேக் ஃபுட்டில் அடித்த சிக்ஸர் எனக்கு பிரமிப்பை கொடுத்தது. இதே போன்று தொடர்ந்து விளையாடுங்கள்" என்றார். இதை விட பாராட்டு வேறு எதுவும் இருக்கிறதா என்ன... வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம். தொடர்ந்து கலக்குங்கள் கோலி.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள்: மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 102 போட்டிகளில் விளையாடி 51.97 சராசரியுடன் அவர் 3,794 ரன்களைக் குவித்துள்ளார்.
இதில் ஒரு சதம், 34 அரை சதங்கள் அடங்கும். அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (3,741 ரன்கள்) உள்ளார். அதற்கடுத்த இடங்களில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்டில் (3,531 ரன்கள்), பாகிஸ்தானின் பாபர் அஸம் (3,231 ரன்கள்), அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் (3,119) உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 9 முறை இலக்கை வெற்றிகரமாக எட்ட உதவியிருக்கிறார் விராட் கோலி. இந்த 9 இன்னிங்ஸ்களில் அவர் 518 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 8 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். சராசரி 518 ஆகும். அதிகபட்சமாக 82 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் சேஸிங்கின்போது டி20 சர்வதேச போட்டிகளில் 18 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில் 18 முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago