T20 WC | ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் விளாசல்: இலங்கையை வீழ்த்தியது ஆஸி.

By செய்திப்பிரிவு

பெர்த்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்த போட்டியில் ஆஸி. அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார்.

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக நிசங்கா - 40 ரன்கள், அசலங்கா - 38 ரன்கள் மற்றும் தனஞ்ஜெயா - 26 ரன்கள் எடுத்திருந்தனர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. இருந்தும் வார்னர் 11 ரன்களில் வெளியேறினார். மிட்செல் மார்ஷ், 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து மிரட்டினார். 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்களில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலிய அணி சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிவேக அரைசதம். 17 பந்துகளில் அவர் அரை சதம் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ஃபின்ச் மிகவும் நிதானமாக விளையாடி இருந்தார். 42 பந்துகளில் 31 ரன்களை அவர் சேர்த்தார்.

16.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது ஆஸி. அதனால் ரன் ரேட்டை கூட்டும் வகையில் இந்தப் போட்டியை அதிவேகமாக முடித்து காட்டியுள்ளது. இதன் மூலம் அரையிறுதியை குறி வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE