சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை குரூப் 1 - சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கடந்த டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை நியூஸிலாந்து துல்லியமாகத் தட்டித் தூக்கி முதல் வெற்றியை பெற்றது. அதுவும் மிகப் பெரிய 89 ரன்கள் வித்தியாச வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து. அதுவும், 2011-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூஸிலாந்து வீழ்த்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் அந்த மண்ணின் தன்மையை அறிந்தவர். அவர் எதற்காக முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதுவும் நியூஸிலாந்து மார்டின் கப்திலை உட்கார வைத்து ஃபின் ஆலன் என்ற உயரமான வலது கை வீரரை இறக்கும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவேயில்லை.
ஃபின் ஆலன் எனும் புதிய ‘பிரெண்டன் மெக்கல்லம்’ - ஃபின் ஆலன் வந்தார், இறங்கினார், சாத்தி எடுத்தார்! அதுவும் 16 பந்துகளில் 42 ரன்களை அவர் எடுத்தது ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பெற்ற பவுலிங்கிற்கு பேரதிர்ச்சி. இவரோடு அனுபவ டி20, சிஎஸ்கே வீரர் டெவன் கான்வே. இவர் 20 ஓவர் வரை நின்று 58 பந்துகளில் 92 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியாவில் முதலில் பேட் செய்து 200 ரன்களை குவித்து சாதனை புரிந்தது நியூஸிலாந்து. அதுவும் 200/3.
» T20 WC | ஆல்ரவுண்டில் மிரட்டிய நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணி படுதோல்வி
» T20 WC | சிக்கந்தர் ரசா விளாசல்: சூப்பர் 12-ல் ஜிம்பாப்வே... கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள்!
ஆலன் இதுவரை 18 டி20 சர்வதேசப் போட்டிகளை ஆடியுள்ளார். அவர் எப்படி ஆடுவார் என்று தெரியாது. ஆஸ்திரேலியாவுக்கும் தெரியவில்லை. மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச, மிட் ஆனில் முதல் பவுண்டரியை விளாசினார் ஆலன். அடுத்த பந்து மெக்கல்லம் பாணியில் ஸ்டார்க்கை மிட் ஆன் மேல் பெரிய சிக்சரை விளாசி திகைக்க வைத்தார். அடுத்ததாக, அம்பயருக்கு காயம் ஏற்படுமாறான ஸ்ட்ரெய்ட் ட்ரைவில் ஒரு பவுண்டரி. முதல் ஓவரே 14 ரன்கள். அடுத்து கான்வே ஹேசில்வுட்டை 2 பவுண்டரிகள் விளாசினார். ஆலன் ஹேசில்வுட்டை இறங்கி வந்து ஒரு பவுண்டை விளாச, 2 ஓவர்களில் 29 என்ற அதிரடி தொடக்கம் கண்டது.
அடுத்து கமின்ஸ் வந்தார். 2 பவுண்டரி 1 சிக்ஸ் விளாசினார் ஃபின் ஆலன். அந்த ஓவரில் 17 ரன்கள். 3 ஓவரில் 46. ஸ்டாய்னிசைக் கொண்டு வந்தும் பயனில்லை. 10 ரன்களை விளாசினார் ஆலன். 4 ஓவரில் 56. இதில் ஆலன் மட்டுமே 16 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என்று 42 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டின் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
இவர் ஆட்டமிழந்தவுடன் கேன் வில்லியம்சன் இறங்கி டெஸ்ட் போட்டி போல் 23 பந்துகளில் 23 ரன்களை எடுத்து ரன் ரேட்டைக் குறைத்தார். டெவன் கான்வேவோ கங்குலி போல் ஆஃப் சைடில் அதிக ரன்களை அடித்தார். கிளென் பிலிப்ஸ் 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டின் எகிறு பந்தில் தொண்டைக்குழிக்கு வந்த பந்தை கொடியேற்றி அவரிடமே கேட் ஆகி வெளியேறினார்.
டெவன் கான்வேயை ஸ்பின்னை வைத்து மடக்கி விடலாம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பிஞ்ச் நினைத்தார். ஆனால், ஆடம் சாம்பா 4 ஓவர்களில் 39 ரன்களை கொடுத்தார். இதில் டெவன் கான்வே மட்டுமே 32 ரன்களை, அதுவும் 2 சிக்சர்களுடன் விளாசினார். 6 ஓவர்களில் 65/1 என்று இருந்த நியூஸிலாந்து 7வது ஓவரிலிருந்து 15வது ஓவர் வரையிலான மிடில் 9 ஓவர்களில் 79 ரன்களை எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 56 ரன்களை விளாசியது நியூஸிலாந்து. ஜேம்ஸ் நீஷம் 13 பந்துகளில் 2 சிக்சர்கள் உட்பட 26 ரன்களை எடுக்க, டெவன் கான்வே 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, நியூஸிலாந்து 200/3 என்று முடித்தது. உண்மையில் தொடங்கிய வேகத்திற்கு 230 ரன்கள் சென்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பந்து வீச்சு சிதறடிக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற பவுலர்களில் யாரும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் கீழே கொடுக்கவில்லை.
தோனி பாணியில் சாண்ட்னரின் ஸ்பின்னை வைத்து ஆஸ்திரேலியாவை முடித்த கேன் வில்லியம்சன்! - 201 ரன்கள் இலக்கை எதிர்த்து உலக சாம்பியன் ஆன அணி எப்படி ஆட வேண்டும்? ஒன்று, இலக்கை விரட்ட முடியாது; நாம் நெட் ரன் ரேட்டுக்காக ஆடி 180-185 ரன்களை எடுப்போம் என்று ஆட முயற்சி செய்திருந்தால், ஒருவேளை கடைசி வரை வந்து நியூஸிலாந்துக்கு ஒரு சிறிய பதற்றத்தையாவது கொடுத்திருக்க முடியும். மாறாக, ஏதோ இந்த இலக்கை விரட்டி விடுவோம் என்ற இறுமாப்பில் ஆடினர்.
கேன் வில்லியம்சன் செம பிரில்லியன்டாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னரை பவர் ப்ளேயில் கொண்டு வந்தார். தோனி எப்படி கிறிஸ் கெய்ல் போன்ற அதிரடி வீரரை மடக்க அஸ்வினைக் கொண்டு வருவாரோ, அதேபோல் கேன் வில்லியம்சன் பேட்டிங் பிட்சில் சாண்ட்னரைக் கொண்டு வந்து ஆஸ்திரேலியாவின் முதுகெலும்பை உடைத்தார். மறுபுறம் அனுபவ அதிரடி இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட். முதலில் சவுதீ டேவிட் வார்னரை வீழ்த்தினார். ஆனால் இது வார்னரின் துரதிர்ஷ்டம். ஏனெனில் லெக் ஸ்டம்பில் விழுந்த பந்து பவுண்டரி பந்து, ஆனால் வார்னர் அதை அடிக்க முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு, அவரது தொடையில் பட்டு எழும்பி அவரது மட்டையின் பின்பக்கத்தில் பட்டு ஸ்டம்பில் போய் விழுந்தது.
கிளென் பிலிப்ஸின் பிரமிப்பூட்டும் அட்டகாச கேட்ச்: ஏரோன் பிஞ்ச் ஓய்வு பெறும் காலம் வந்து விட்டது. ஆனால் ட்ரெண்ட் போல்ட்டை இவர் அடித்த 100மீ சிக்ஸ் அதனை பொய்ப்பித்தது. 13 ரன்களில் ஒரு பவுண்டரி 1 சிக்ஸ் விளாசிய பிஞ்ச் சாண்ட்னரிடம் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் வழக்கம் போல் 2 பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசி சவுதி பந்தில் நீஷமின் பிரில்லியண்ட் மிட்விக்கெட் கேட்சுக்கு வெளியேறினார்.
பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு எழும்பவில்லை. மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒன்றும் தேறவில்லை. 14 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து கிளென் பிலிப்சின் அட்டகாச கேட்சுக்கு வெளியேறினார். சாண்ட்னர் பந்தை ஸ்டாய்னிஸ் கவருக்கு மேல் அப்பாவியாகத் தூக்கி அடித்து 2 ரன்களை எடுக்கலாம் என்று பார்க்க, கிளென் பிலிப்ஸ் டீப் கவரிலிருந்து ஓடி வந்து வலது புறம் ஒரு கட்டத்தில் பிளாட்டாக காற்றில் மிதந்து கேட்சை எடுத்தார், நம்ப முடியாத கேட்ச்!!
மும்பை இந்தியன்சின் அதிரடி வீரர் டிம் டேவிட் 1 பிளாட் சிக்சருடன் 11 ரன்களில் சாண்ட்னரிடம் வீழ்ந்தார். அதன் பிறகே ஆஸ்திரேலியா அணி உடைந்து நொறுங்கியது. கமின்ஸ் மட்டுமே 18 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்தார். சவுதீ 3 விக்கெட், போல்ட் 2 விக்கெட், சாண்ட்னர் 3 விக்கெட் என்று ஆஸ்திரேலியா கதையை முடிக்க அந்த அணி 17.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு மடங்கியது.
மேக்ஸ்வெல் பேசாமல் ஓய்வு பெற்று விடலாம். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்களை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் கேம் போய் விட்டது. 20 பந்துகளில் 18 பந்துகளை அவர் இடது கையில் ஆடினார். அதாவது, ரிவர்ஸ் ஷாட் ஆடினார். இதில் சோதியை ஒரு பெரிய சிக்ஸ் விளாசினார். ஆனால் இவரை இது போன்று அடிக்க விட எதிரணி பவுலர்கள் ஒன்றும் லீக் பவுலர்கள் அல்ல. கடைசியில் அதேபோல ஒரு ரிவர்ஸ் ஷாட்டில் சோதியிடம் பவுல்டு ஆனார். முழுக்க முழுக்க ஃபேன்சி ஷாட்களை மட்டுமே ஆடி ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டை ஆட முடியாது, மேக்ஸ்வெல்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றே கொள்ளலாம். ஆட்ட நாயகன் டெவன் கான்வே.
ஆஸ்திரேலியாவின் நெட் ரன் விகிதம் மைனஸ் 4.450. நியூஸிலாந்தின் நெட் ரன் விகிதம் 2 புள்ளிகளுடன் பிளஸ் 4.450. ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது அடுத்தடுத்த போட்டிகளை வெல்வதைப் பொறுத்து உள்ளது. அதிலும் அயர்லாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தினாலும் மற்ற அணிகளுக்கு இடையிலும் ஒருவருக்கொருவர் கடும் போட்டி இருப்பதால் ஆஸ்திரேலியா மற்ற போட்டிகளின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே, ஆஸ்திரேலியா தோற்றது தவறு. அதைவிட பெரிய தவறு, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. உலக சாம்பியன்களுக்கு காத்திருக்கிறது சோதனை!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago