ஹோபார்ட்டில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று ஆட்டத்தில் குரூப் பி-யில் 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் அயர்லாந்திடம் தோல்வி கண்டு இருமுறை டி20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியது. முதலில் மே.இ.தீவுகளை 146 ரன்களுக்கு மட்டுப்படுத்திய அயர்லாந்து, பிறகு காட்டடியாக ஆட்டத்தை தொடங்கியது. 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ‘சூப்பர் 12’ சுற்றுக்குள் சென்றது.
ஒட்டுமொத்த ஆட்டத்தையும் பார்க்கும்போது, குறிப்பாக அயர்லாந்து ஆடிய விதத்தைப் பார்க்கும்போது ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷம், தன்னம்பிக்கை உடல் மொழி போன்ற தீவிரத்தன்மை மே.இ.தீவுகளிடத்தில் சற்றும் இல்லாமல் போனதுதான் வருந்தத்தக்கது.
விராட் கோலி ஒரு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார் அதுதான் ‘இன்டன்சிட்டி' ((Intensity). இன்றைய அயர்லாந்தின் தாரக மந்திரம் அதுதான். அயர்லாந்து வெற்றியில் மிக மிக முக்கியமான, கவனிக்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சம் என்னவெனில், முதலில் டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்ய முடிவெடுத்தவுடன் தங்களது அருமையான திட்டத்தைச் செயல்படுத்தியது, கேப்டன் பால்பர்னி அருமையாக கேப்டன்சி செய்தார்.
பந்து வீச்சு மாற்றம், டைட்டான கள வியூகம் என்று அசத்தினார். அதாவது, ஹோபார்ட் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் சிறியன. அதை அருமையாக தன் கள வியூகம் மூலமும், லெக் ஸ்பின்னர் டிலேனியை (4 ஓவர், 16 ரன், 3 விக்கெட்) அபாரமாக பயன்படுத்தியதன் மூலமும் ஷார்ட் பவுண்டரி சாதகங்களை மேற்கிந்திய தீவுகளின் அசகாய ஹிட்டர்களுக்கு மறுத்தார். அதனால்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது அந்த அணி. 20 முதல் 25 ரன்கள் குறைவாகக் கொடுத்த அயர்லாந்து அணியினர் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருந்தனர்.
» சென்னை அண்ணா சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர்
பிறகு பேட்டிங்கில் இறங்கிய அயர்லாந்து கேப்டன் பால்பர்னி, 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். அனுபவசாலியான பால் ஸ்டர்லிங், 48 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இருவரும் அதிரடி தொடக்கம் கொடுக்க பவர் ப்ளே முடிவில் 64 ரன்களை விக்கெட் இழப்பின்றி எட்டியது அயர்லாந்து.
இருவரும் 7.3 ஓவர்களில் 73 ரன்கள் என ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ரன் ரேட்டில் வேகம் காட்டினார். மேற்கிந்திய தீவுகள் அணி 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் மட்டுமே அடிக்க அயர்லாந்து தரப்பில் 11 பவுண்டரி, 7 சிக்சர்களை அந்த அணி வீரர்கள் விளாசினர். கடைசியில் லோர்க்கன் டக்கர், மெக்காய் வீசிய பந்தை தூக்கி கவர் திசையில் பவுண்டரி விளாச அயர்லாந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அதாவது 2009-ல் இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இரண்டாவது முறையாக பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அயர்லாந்து.
மே.இ.தீவுகளின் மோசமான தொடக்கம்: மேற்கிந்திய தீவுகள் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ஆனால் முறையான திட்டம் ஏதும் அந்த அணியின் வசமில்லை. பவர் ப்ளே முடிவதற்குள்ளேயே கைல் மேயர்ஸ் (1), ஜான்சன் சார்லஸ் (24) என இருவரும் பெரிய ஷாட்களை ஆடப்போய் பெவிலியன் திரும்பினர். மேயர்ஸ், மெக்கார்த்தி பந்தை தூக்கி அடிக்கப் போய் மிட் ஆஃபில் கேட்ச் ஆனார். சார்லஸ் நன்றாகத் தொடங்கினார். ஆனால் சிமி சிங் அருமையாக ஒரு பந்தை வீசி ஒரு கடினமான கோணத்தில் செலுத்த, பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதே சிமி சிங், பிராண்டன் கிங் (62 ரன், 48 பந்து 6 பவுண்டரி 1 சிக்ஸ்) கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் மேற்கிந்திய தீவுகள் கதி அதோகதியாகி இருக்கும். அந்த கேட்ச் நழுவலை பிராண்டன் கிங் நன்றாகப் பயன்படுத்தினார். 8-வது ஓவர் வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த பந்து வீச்சை, பீல்டிங்கை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை.
மே.இ.தீவுகளின் முதுகெலும்பை ஒடித்த லெக் ஸ்பின்னர் டிலேனி: இடக்கை பேட்ஸ்மேனான எவின் லூயிஸ் ரன் சேர்க்க திணறினார். 18 ரன்கள் எடுத்து லெக் ஸ்பின்னர் டிலேனியின் பந்தை லாங் ஆஃப் நோக்கி தூக்கி அடித்து கேட்ச் ஆனார். 11 ஓவர்கள் முடிவில் 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது மே.இ.தீவுகள். அந்த சமயத்தில் அயர்லாந்து அந்த அணியை முடக்கி, மூச்சுத் திணறச் செய்தது. கிங், ஒருபுறம் அருமையாகவே ஆடினார். கேப்டன் பூரன் ஒரு அபாயகரமான வீரர். அவர் ஏற்கெனவே ஒரு பெரிய சிக்சரை அடித்து 13 ரன்களில் இருந்த போது டிலேனி அருமையாக ஒரு கூக்ளியை வீசி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செலுத்தினார், அதை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடித்தார் பூரன். அங்கு ஒரு பீல்டர் தயர்நிலையில் நிறுத்தி வைக்கப்பட பந்து அவர் கைகளில் கேட்ச் ஆனது.
பிறகு டிலேனி தன் 3-வது ஓவரில் அதிரடி மன்னன் ரோவ்மன் போவெலுக்கு ஒரு பந்தை பிளைட் செய்து ஏமாற்ற, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை போவெல் லாங் பவுண்டரிக்கு ஸ்லாக் ஸ்வீப் செய்து, டீப்பில் சிக்கி வெளியேறினார்.
டிலேனி 3 விக்கெட்டுகளை 16 ரன்களுக்குக் கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்த 17 ஓவர்களில் மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து திண்டாடியது. கடைசி ஓவர்களில் கிங் மற்றும் ஓடியன் ஸ்மித் சிலபல அதிரடி ஷாட்களை ஆட வெஸ்ட் இண்டீஸ் 146 என்ற ஸ்கோரை எட்டியது. ஒரு சாதாரண நாளில் இதை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றாலும் வென்றிருக்கும், ஆனால் அயர்லாந்து அணி ஒரு முடிவுடன் இறங்கியிருக்கும் போது எந்த ஒரு பாச்சாவும் பலிக்கவில்லை. மே.இ.தீவுகளும் தீவிரத்தனத்துடன் பந்து வீசவில்லை.
கேப்டன் பூரன் செய்த தவறு, அயர்லாந்தின் அதிரடி தொடக்கமும் வெற்றியும்! - அயர்லாந்து அணி இந்த சேசிங்கை பதற்றத்துடன் அணுகியிருந்தால் தோற்றிருக்கும். ஆனால் எப்படி இருந்தாலும் வெல்லப் போகிறோம் என்ற முனைப்புடன் பந்தின் மீது மட்டையை தன்னம்பிக்கையுடன் செலுத்தினர். குறிப்பாக பால் ஸ்டர்லிங், இந்த ஆண்டு முழுதும் மோசமாக ஆடி வந்தார். ஆனால் இந்த இன்னிங்சில் எப்படியாவது ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என்ற அவரது தீவிரத்தின் முன்பும், அனுபவத்தின் முன்பவும் வெஸ்ட் இண்டீஸின் பவுலிங் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. பால் ஸ்டர்லிங் உலக அளவில் டி20 பேட்டர் பட்டியலில் அதிக ரன்கள் எடுத்த 5-வது வீரராக இருப்பவர்.
பூரன் செய்த மிகப்பெரிய தவறு என்னவெனில், சிறந்த பவுலரான ஜேசன் ஹோல்டரை தொடக்கத்தில் கொண்டு வராமல் பெரிய தவறிழைத்து விட்டார். ஸ்பின்னரான அகீல் ஹுசைனையும், ஆபெட் மெக்காயையும் பயன்படுத்தினார். ஓடியன் ஸ்மித்தையும் பயன்படுத்தினார். முதல் ஓவரில் மெக்காய் 5 ரன்களையே கொடுக்க 2வது ஓவரில் ஸ்பின்னர் அகீல் ஹுசைன் 16 ரன்களைக் கொடுத்தார். பால்பர்னி ஒரு சிக்சரை விளாச, ஸ்டர்லிங் பவுண்டரி விளாசினார். 3-வது ஓவரில் அல்சாரி ஜோசப்பை கொண்டு வந்தார்.
பால் ஸ்டர்லிங் நிதானமாக வீசப்பட்ட பந்தை ஒரே தூக்குத் தூக்கினர். மிட்விக்கெட்டில் சிக்ஸ், அந்த ஓவரில் 10 ரன்கள். பவர் ப்ளேயில் ஒடியன் ஸ்மித்தின் சிக்கன விகிதம் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் என்பதோடு வெறும் 3 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். அவரைக் கொண்டு வந்ததால் என்ன ஆச்சு? அயர்லாந்து கேப்டன் பால்பர்னி, 4,6,4 என பின்னி எடுத்து விட்டார். அந்த ஓவரில் 14 ரன்கள். 4 ஓவர்களில் அயர்லாந்து 45/0.
அடுத்த ஓவர் மெக்காய் மீண்டும் வர அவர் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்தில் வீச பால்பர்னி திகைப்பூட்டும் ஒரு ஆஃப் சைடு ஸ்வீப் அல்லது ஸ்லாக் ஸ்வீப் போல் ஒரே தூக்குத் தூக்கினார். பாயிண்டில் சிக்ஸ்!! இந்த ஓவரில் 9 ரன்கள். மீண்டும் ஜோசப்பைக் கொண்டு வர இம்முறை ஸ்டர்லிங் தேர்ட்மேனில் ஒரு பவுண்டரியையும், பாயிண்ட் திசையில் இன்னொரு பவுண்டரியையும் விளாசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் வர 64/0 என்று பவர் ப்ளேயிலேயே மே.இ.தீவுகளின் விதியை சீல் வைத்து முடித்தது என்றே கூற வேண்டும்.
எல்லாம் முடிந்த பிறகு ஹோல்டரைக் கொண்டு வந்து என்ன பயன், 7-வது ஓவர் வந்தார். ஆனால் அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் எந்த கவலையும் இல்லாமல் ஆடினர். ஒரேயொரு ஆறுதல் விக்கெட் பால்பர்னி அவுட் ஆனதுதான். இன்னொரு விக்கெட்டையும் வெஸ்ட் இண்டீஸ் எடுத்தது, ஆனால் அது நோ-பால் ஆனது. எதுவும் இருமுறை உலக சாம்பியன்களுக்கு சாதகமாக நடக்கவில்லை.
காரணம், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் விராட் கோலி சொல்லும் அந்தத் ‘தீவிரம்’ இல்லை. அதனால் வெளியேறியது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆட்ட நாயகனாக லெக் ஸ்பின்னர் காரெத் டிலேனி தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago