சூப்பர் 12 ரவுண்ட் அப்: மட்டைக்கும் பந்துக்குமான சமநிலை போர்க்களம்!

By பெ.மாரிமுத்து

டி 20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன் களுக்கான ஆட்டமாகவே கருதப்பட்டு வருகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகபவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசும் வகையில்பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற கருத்தும் உள்ளது. பெரும்பாலான அணிகள் ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆக்ரோஷமாக விளையாடும் அணுகுமுறையை கடைபிடிக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி மட்டுமே விதிவிலக்கு. தொடக்கத்திலேயே மட்டையை சுழற்றும் அந்த அணி விக்கெட்கள் சரிந்தாலும் கூட அதிரடி பாணியை மாற்றுவது இல்லை. இந்த வகையில் தற்போது பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் நங்கூரமிட்டு விளையாடுவதை விட தாக்குதல் ஆட்டம் தொடுப்பதே சிறந்தது என்ற கண்ணோட்டத்தில் டி 20 கிரிக்கெட்டை அணுகத் தொடங்கிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் ஆஸ்திரேலிய டி 20 உலகக் கோப்பையானது மட்டை வீச்சுக்கும், பந்து வீச்சுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் தொடராக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் ஆடுகளங்கள் மற்றும் பெரிய அளவிலான மைதானங்கள். பந்தில் வேகம் மற்றும்பவுன்ஸ் இருக்கும் என்பதால் வேகப் பந்து வீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் எல்லைக்கோடு தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் புகுந்து விளையாடலாம். போட்டி நடைபெறும் பிரிஸ்பன், மெல்பர்ன், அடிலெய்டு, பெர்த் ஆகிய ஆடுகளங்கள் வேகங்களுக்கு சாதகமானது. அதேவேளையில் ஹோபர்ட்சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அடிலெய்டு தவிர மற்ற மைதானங்களில் இந்த ஆண்டில்முதல் பேட்டிங்கின் போது எடுக்கப்பட்ட சராசரி ஸ்கோர் 170-க்கும் குறைவாகவே உள்ளது. எனவேஇந்த உலகக் கோப்பையில் பேட்டிங் உத்திகள்அணிகளை எந்தளவுக்கு அழைத்துச் செல்லும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறந்த பந்துவீச்சு குழுவை கொண்டஅணிகள் எது? மேலும் அவர்களை எதிர்கொள்ளும் பேட்டிங் பலம் எவை? என்பதை கண்டறிய டி 20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்று நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. முடிவு எதுவாக இருந்தாலும், மட்டை வீச்சு மற்றும் பந்து வீச்சுக்கு இடையே ஒரு சிறந்த சமநிலையை நாம் எதிர்பார்க்கலாம், இது டி 20 உலகக் கோப்பையை மேலும் சுவாரஸ்யமாக்கும். சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள 4 அணிகள் தகுதி சுற்று வாயிலாக தேர்வாகின்றன. இதில் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் இருந்து தேர்வாகும் 2 அணிகள் எது என்பது இன்று தெரிய வரும்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா: நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச் தலைமையில் களமிறங்குகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையில் மீண்டும் ஒரு முறை அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுக்க வேண்டும் என்பதில் ஆரோன் பின்ச் தீவிர முனைப்புடன் உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட், போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கக்கூடிய பணியில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பலம் சேர்க்கிறது. மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், மார்கஸ் ஸ்டாயினிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி வீரர்களுக்கு அணியில் பஞ்சமில்லை. இதுபோதாது என்று காயம் காரணமாக ஜோஷ் இங்லிஸ் விலகி உள்ளதால் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் வார்னருக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது அணிக்கு கவலையை கொடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் வலுவாக உள்ளனர். ஆடம் ஸம்பாவின் சுழலும் கூடுதல் பலம்.

கரை சேருமா நியூஸிலாந்து: வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வெல்லும் வகையில் நெருங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் டாஸில் நியூஸிலாந்து தோற்றது. பனிப்பொழிவை சாதகமாக கொண்டு ஆஸ்திரேலிய அணி இலக்கை எளிதாக அடைந்து பட்டம் வென்றது. இம்முறை பட்டம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக நியூஸிலாந்து அணி கருதப்படவில்லை. டிரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோர் வயதானவர்களாக உள்ளனர். முழங்கை காயத்தில் சிக்கிய கேன் வில்லியம்சன் சிறந்த பார்மில் இல்லை. ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை அரை இறுதியில் டேரில் மிட்செல் 72 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். இம்முறை டேவன் கான்வே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவருடன் கிளென் பிலிப்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.

அசராத இங்கிலாந்து: ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக சாம்பியனான இங்கிலாந்து புதிய கேப்டனான ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. இயன் மோர்கன் காலக்கட்டத்துக்கு பிறகு இங்கிலாந்து அணி சந்திக்கும் பெரிய தொடர் இது. அந்த அணி சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் பெர்த் நகரில் விளையாடுகிறது. உலகின் அதிவேக ஆடுகளமான இங்கு, இங்கிலாந்து அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த காத்திருக்கிறது. ஜானி பேர்ஸ்டோ காயம் காரணமாக விலகியது சற்று பின்னடைவுதான். எனினும் பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர், மொயின் அலி என பேட்டிங்கில் அதிரடி பட்டாளம் உள்ளது. பந்து வீச்சில் மார்க் வுட், சேம் கரண், தைமால் மில்ஸ், ஆதில் ரஷீத் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ரீஸ் டாப்லே கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி உள்ளது சற்று பின்னடைவுதான்.

அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்: உள்நாட்டில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வந்த போதிலும் சூப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றதே அந்த அணிக்கு பெரிய வெற்றிதான். ரஷீத்கானின் அபார திறமை, களத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் போட்டிமனப்பான்மை உள்ளிட்டவை ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும். சுழற்பந்து வீச்சு வலுவாக இருக்கும் அந்த அணியில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரையில் பெரிய அணிகளுக்கு எதிராகக்கூட மட்டையை சுழற்ற முயற்சி செய்யக்கூடிய அணியாகவே ஆப்கானிஸ்தான் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணி சில அதிர்ச்சி வைத்தியங்களை கொடுக்க காத்திருக்கிறது.

வேகங்களால் மிரட்டும் பாகிஸ்தான்: பாகிஸ்தான் அணியானது கேப்டன் பாபர் அஸம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொகமது ரிஸ்வான் ஆகியோரது மட்டை வீச்சை பெரிதும் சார்ந்துள்ளது. இலக்கைதுரத்தும் இந்த தொடக்க ஜோடி பெரும்பாலான ஆட்டங்களை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்துள்ளது. அதே வேளையில் நடுவரிசை பேட்டிங் அனுபவம் இல்லாததாக உள்ளது. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர்களான ஷதப்கான், மொகமது நவாஸ் ஆகியோர் பின்கள பேட்டிங்கில் மட்டையை சுழற்றுபவர்களாக இருப்பது பலம் கொடுப்பதாக உள்ளது.காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷாகீன் ஷா அப்ரிடி, பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸுக்கு எதிராக வீசிய அசுர வேக யார்க்கர் பாதத்தை பதம் பார்த்தது. இதனால் மீண்டும் ஒரு முறை எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஷாகீன் ஷா அப்ரிடி சவால் தரக்கூடும். அவருடன் ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோரும் வேகத்தில் மிரட்ட காத்திருக்கின்றனர்.

மீண்டெழுமா தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரில் தோல்விகளை சந்தித்திருந்தது. எனினும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 98 ரன்களுக்குள் சுருட்டி மிரளச் செய்தனர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் சூழ்நிலைகளை காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜ், வெய்ன் பார்னல், மார்கோ ஜேன்சன், லுங்கி நிகிடி ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு குழு சரியாக பயன்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தும். பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் கேப்டன் தெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரது பார்ம் கவலை அளிப்பதாக உள்ளது. அதேவேளையில் நடுவரிசையில் எய்டன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், கிளாசன் ஆகியோர் மிரட்டக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழலில் தப்ரைஸ் ஷம்ஸி பலம் சேர்க்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்