விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதற்கும் இந்திய கேப்டனும் ஆட்ட நாயகனுமான விராட் கோலியின் பங்களிப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளது.
அதாவது, இங்கிலாந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு விராட் கோலியின் பேட்டிங் பங்களிப்பே காரணம் என்று கூற முடியும்.
முதல் இன்னிங்சில் 167 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 40/3 என்று தடுமாறிய தருணத்தில் 7-வது விக்கெட் வரை தாக்குப் பிடித்து, கடினமான சூழல், கடினமான பிட்சில் 74.31 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 81 ரன்களையும் கோலி எடுத்தார், ஆக மொத்தம் 248 ரன்கள் கோலியின் பங்களிப்பு, இங்கிலாந்து தோற்ற ரன் எண்ணிக்கை 246 ரன்கள், எனவே இந்திய வெற்றியில் அல்லது இங்கிலாந்து தோல்வியில் கோலியின் பேட்டிங் பங்களிப்பு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது, இதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.
ஆனாலும் அவர் அடில் ரஷித்துக்கு நன்றியுடன் இருக்க வேண்டும், அதே போல் ஓரிரு தருணங்களில் நடுவருக்கும் நன்றிக்கடன் பட்டவராக இருக்க வேண்டும் என்பது போட்டியை உன்னிப்பாக கவனித்தவர்கள் வேண்டுவதாகும். கோலியின் சிறப்பம்சம் என்னவெனில் பெரிய ஆக்ரோஷ உடல் மொழி, மட்டை சுழற்றல் இல்லாமலேயே சரியான பந்தை தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு அனுப்பியதிலும், நல்ல பந்தை அருமையான ‘டைமிங்’ மூலம் ரன் பந்தாக மாற்றியதும், கடினமான பந்துகளை தவிர்ப்பதிலும் சரி, தடுத்தாடுவதிலும் சரி கோலியின் அணுகுமுறை அப்பழுக்கற்றதாக இருந்தது. கோலியின் பேட்டிங்தான் இரு அணிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம்.
2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து குக், ஹமீது மூலம் உறுதியான, நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் இத்தகைய பிட்சில் அவ்வளவு ஓவர்கள் நிற்க முடியும் எனும்போது ரன்களையும் அடித்திருக்கலாமே என்பதுதான். முந்தைய தொடரில் ஹஷிம் ஆம்லா, டிவிலியர்ஸ் டெல்லியில் ஆகாத்ய தடுப்பாட்டம் ஆடினர், ஆனால் அந்தப் பிட்ச் குழி பிட்ச், அதில் அவ்வளவு நேரம் அவர்கள் விக்கெட்டை இழக்காமல் நின்றது சாதனையே, ஆனால் இந்தப் பிட்சில் அவ்வப்போது பந்துகள் கணுக்காலுக்குக் கீழ் வந்தது, ஆனால் பந்துகள் திரும்பவில்லை, இங்கிலாந்து கொஞ்சம் பிட்ச் பற்றிய தேவையற்ற பயத்தில் ஆடியது போலவே இருந்தது, குறிப்பாக குக், ஹமீத் ஆட்டமிழந்த பிறகு. இவர்கள் அடித்துக் காண்பித்திருந்தால் பின்னால் மொயின் அலி, ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும் ஏனெனில் அஸ்வின் பந்து வீச்சிலெல்லாம் பெரிய அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. சும்மா லைனையும் லெந்தையும் மாற்றி மாற்றி வீசிப் பார்த்தார் அவ்வளவுதான். ஜெயந்த் யாதவ் முதல் போட்டி என்பதால் அவரை அடித்து ஆடியிருக்க வேண்டும் இங்கிலாந்து, மாறாக குகைக்குள் சென்று ஆடி அவரையும் ஏதோ ஒரு பெரிய ஸ்பின்னர் என்பது போல் ஆடினர்.
இங்குதான் விராட் கோலிக்கும் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்குமான வேறுபாடு எழுகிறது, அவரால் 74% ஸ்ட்ரைக் ரேட்டுடன் விக்கெட்டை விடாமலும் ஆட முடிந்தது, எனவே இந்த போட்டியில் மிகச்சரியாக ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்ட கோலியின் 2 இன்னிங்ஸ் ஸ்கோர்தான் இங்கிலாந்து தோல்வியில் பெரும்பங்களிப்பு செய்தது என்று கூற முடியும்.
பிட்ச்:
பிட்ச் இரண்டு புறங்களிலும் பக்கவாட்டில் ‘கொதகொதவென்று’ இருந்ததே தவிர மையப்பகுதி ஓரளவுக்கு சேதமடையாமல் இருந்தது. இதுவும் குழி பிட்ச் முயற்சிதான் ஆனால் இந்திய அணியினர் எதிர்பார்த்த அளவுக்கு குழியாகவில்லை.
மாறாக ஒரு ‘சேஞ்ச்சுக்கு’ பிட்சில் பந்துகள் மிகவும் தாழ்வாக கணுக்காலுக்கும் கீழே வந்தது, இந்தப் பந்துகளை ‘உருட்டல்’என்று கூற முடியாது அவ்வளவுதான் மற்றபடி உருளலுக்கு சற்று உயரமாக வந்ததே. இத்தகைய பிட்சிலெல்லாம் பாவம் இங்கிலாந்து வீரர்கள் எப்படி ஆட முடியும்?
எனவே பெரிய அளவுக்கு பந்துகள் திரும்பி, எழும்பி, எழும்பி திரும்பவில்லை என்று கூறுவதன் மூலம் நாங்கள் நல்ல பிட்ச்தான் அளித்தோம் என்று இந்திய அணி நிர்வாகம் கூறிக்கொள்ள முடியாது. இத்தகைய பிட்சில் ஜிம்மி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், அடில் ரஷீத், மொகமது ஷமி பந்து வீச்சே பாராட்டுக்குரியது.
விக்கெட்டுகள் விழுந்த விதம்:
இன்று காலை முதலில் டக்கெட் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவர் ஸ்பின்னுக்கு எதிராக புதிதான உத்தியை முயற்சி செய்து வருகிறார், ஆனால் கைகொடுக்கவில்லை. இம்முறை அவர் அஸ்வினை ஸ்வீப் செய்ய முயன்றார் பந்து சற்றே, மிக சற்றே கூடுதலாக எழும்ப, இவரது மட்டையின் ரீச்சிற்கு பந்து இல்லாததும் சேர்ந்து கிளவ், தொடைக்காப்பு என்று சகல இடங்களிலும் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது. நல்ல வேளையாக சஹா பிடித்தார், ஏனெனில் எல்பி அப்பீல் செய்து கொண்டே கேட்சை விடலாம் அல்லவா?
அடுத்த 9 ஓவர்களில் 9 ரன்களே வந்தன அப்போது 2 ரன்களில் இருந்த மொயின் அலி., ஜடேஜா பவுலர்கள் காலடித் தடத்தில் ஒரு பந்தை பிட்ச் செய்து திருப்பி எழுப்ப கோலியிடம் எளிதான கேட்ச் ஆனது. அலி 31 பந்துகளில் 2 ரன்கள்.
அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் 33 பந்துகள் அவரால் நிற்க முடிந்தது. ஆனால் ஜெயந்த் யாதவ் இந்த டெஸ்ட் போட்டியின் சிறந்த பந்தை வீசினார், அதாவது முதல் இன்னிங்சில் குக்கை பவுல்டு செய்த ஷமியின் பந்துக்குப் பிறகு சிறந்த பந்து இது, நடு மற்றும் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை பிட்ச் செய்து திருப்ப ஸ்டோக்ஸ் செய்வதறியாமல் ஆட அது மட்டையை கடந்து ஆஃப் ஸ்டம்பை தட்டியது. அபாரமான பந்து ஸ்டோக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு கோலி மிகவும் புத்திசாலித்தனமாக ஷமியைக் கொண்டு வர மொகமது ஷமி நேற்று பிராட் வீசிய முறையை உள்வாங்கிக் கொண்டு கட்டர்களையும் ரிவர்ஸ் ஸ்விங்குகளையும் வீசினார், அப்போதுதான் 107 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த ஜோ ரூட் ஷமியின் பந்து வீச்சில் சில பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அருமையான இன்ஸ்விங்கருக்கு (ரிவர்ஸ் ஸ்விங்) எல்.பி.ஆனார். ரிவ்யு பயனளிக்கவில்லை.
அன்சாரியை அஸ்வின் தாழ்வான பந்தில் பவுல்டு செய்தார். ஜெயந்த் யாதவ்வை ஸ்வீப் செய்ய முயன்று கால்காப்பில் வாங்க ஸ்டுவர்ட் பிராட் வெளியேறினார். அடுத்த பந்தே ஆண்டர்சனும் எல்.பி.ஆனார். 38.1 ஓவர்களில் இன்று இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. மொத்தம் 158 ரன்களுக்கு இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 97.3 ஓவர்களைச் சந்தித்தது.
மொத்தத்தில் இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களை விக்கெட்டுகளை வீழ்த்த போராட வைத்தது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சும் ஸ்பின் பந்து வீசில் அடில் ரஷீத்தும் அருமையாக உள்ளனர், அன்சாரிக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் வர முடிந்தாலோ அல்லது வேறு வேகப்பந்து வீச்சாளர் வர முடிந்தாலோ, மொஹாலியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்தாலோ நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முடியும்.
அதற்கான வாய்ப்பு இங்கிலாந்துக்கு எப்போதும் உள்ளது, அதற்கான தடயத்தை, அடையாளத்தை இங்கிலாந்து இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் காண்பித்துள்ளது, மாறாக இந்திய அணியும் தரமான வேகப்பந்து வீச்சிற்கு மடியும் ரகம் இன்னும் தங்களிடையே இருப்பதை நிரூபித்துள்ளது. வரும் போட்டிகள் இன்னும் சுவாரசியமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் டெஸ்ட் தொடர் ஒன்றை ‘டாஸ்’ தீர்மானம் செய்யும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து நீடிப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுகின்றனர், அதற்காக ஆஸ்திரேலியா எனக்கு குழி பிட்ச் வேண்டுமென்றோ, ‘புற்களே கூடாது’ என்றோ, பேட்டிங் சாதக ஆட்டக்களம் வேண்டும் என்றோ ஒரு போதும் கூறுவதில்லை என்பதை இந்திய அணி நிர்வாகம் நினைவில் கொள்வது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லது,
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago