டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்களது தன்னம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துக் கொண்டுள்ளது.
இந்திய அணியின் 187 ரன்கள் இலக்கை எதிர்த்து விரட்டிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஆரோன் பிஞ்சின் அதிரடி 76 ரன்களினால் வெற்றிக்கு அருகில் வந்து 18-வது ஓவர் முடிவில் 171/4 என்ற நிலையில் இருந்தது. 2 ஓவர்களில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்திருந்தது. அப்போதுதான், அதுவரை 2 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து செம சாத்து வாங்கிய ஸ்லோயர் ஒன் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் படேல் மீண்டும் 19-வது ஓவரை வீச வந்தார். சரி இந்த ஓவரிலேயே முடிந்து விடும் என்று நினைத்தபோது ஹர்ஷல் படேல் தன் ஸ்லோயர் ஒன் கிடங்கிலிருந்து ஒரு பந்தை எடுத்து விட்டார்.
அதாவது பிஞ்ச் கிரீசில் இருக்கிறார், பயங்கரமாக ஆடிக்கொண்டிருக்கிறார்... ஆனால் ஹர்ஷல் படேல் ‘வைட் ஆஃப் த கிரீசில்’ இருந்து ஒரு பந்தை சற்றே மேலிருந்து கிரீசுக்கு இறங்கும் ஸ்லோ யார்க்கரை வீச பிஞ்ச் ஷாட்டை முன்னமேயே ஆட முயற்சிக்க பவுல்டு ஆகி வெளியேறினார். இதுதான் திருப்புமுனை.
அடுத்த பந்தில்தான் விராட் கோலி, ஜாண்ட்டி ரோட்ஸ் போல் ஒரு ரன் அவுட்டைச் செய்தார். அதுவும் மும்பை இண்டியன்ஸ் அதிரடி வீரர் டிம் டேவிட்டை கோலி அற்புதமாக ரன் அவுட் செய்தார். அதாவது, புதிய பேட்டர் இங்லிஸ், ஹர்ஷலின் இன்னொரு யார்க்கரை ஷார்ட் மிட் விக்கெட்டில் தட்டி விட்டு ஒரு ரன் ஓட டிம் டேவிட்டை அழைக்க, அவரும் ஓடி வர... விராட் கோலி எங்கிருந்தோ ஓடி வந்து, ஒரே கையில் பந்தை தடுத்து, அதே வேகத்தில் த்ரோவும் செய்தார். அது நேராக பேட்டிங் முனை ஸ்டம்பைத் தாக்க ஆஸ்திரேலியாவின் அபாய வீரர் டிம் டேவிட் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கமின்ஸ் இறங்கினார். அற்புதமான அந்த ஓவரில் 6 பந்துகளையுமே ஹர்ஷல் யார்க்கர்களாக வீச பேட்டில் 4 ரன்கள், லெக் பை 1 ரன் என 5 ரன்களே வந்தது.
இதனையடுத்து, 20-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. கமின்ஸும் ஜோஷ் இங்லிசும் கிரீசில் இருந்தனர். புவனேஷ்வர் குமாரிடம் ஓவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வார்ம்-அப் போட்டியில் அணியில் உள்ள யாரை வேண்டுமானாலும் பவுலிங் செய்ய வைக்கலாம் என்ற அடிப்படையில் முகமது ஷமியை கொண்டு வந்தார் ரோஹித் சர்மா.
முதல் 2 பந்துகளும் யார்க்கர்கள் தலா 2 ரன்கள் என்று 4 ரன்கள் வந்தன. அடுத்த ஃபுல் லெந்த் பந்தை வீச கமின்ஸ் பந்தை லாங் ஆனில் ஒரே தூக்குத் தூக்கினார், பந்து சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது, அப்போதுதான் அங்கு நின்று கொண்டிருந்த விராட் கோலி அட்டகாசமாக எம்பிக் குதித்து ஒரு கையால் கேட்சைப் பிடித்தார். அப்போது பின்னணியில் வார்னர் உட்கார்ந்திருந்தார். அவரே இந்தக் கேட்சை ரசித்தார். கமின்ஸ் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் ஆஷ்டன் ஆகர் ரன் அவுட் ஆனார். அடுத்த 2 வேகமான யார்க்கர்களில் ஜோஷ் இங்லிஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸனின் ஸ்டம்ப் எகிற ஷமியின் அட்டகாச கடைசி ஓவர் முடிந்தது. ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவும் முடிந்தது. கடைசி ஓவரில் 4 ரன்களே வந்தன. 4 விக்கெட்டுகள் விழுந்தன. இதில் 3 விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றினார்.
கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் விளாசல்: முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. கே.எல்.ராகுல் செம ஆக்ரோஷ மூடில் இருந்தார். 5 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் என்று இந்தியா அபாரத் தொடக்கம் கண்டது. ஆனால் இதில் வெறும் 5 பந்துகளையே சந்தித்த ரோஹித் சர்மா 1 ரன்னை மட்டுமே எடுத்திருந்தார். ராகுல் 25 பந்துகளில் 49 ரன்கள். 27 பந்தில் அரைசதமும் எடுத்தார் ராகுல்.
ஸ்டாய்னிஸின் ஒரே ஓவரில் 20 ரன்களை விளாசிய ராகுல், கமின்ஸையும் விட்டு வைக்கவில்லை. அவர் அடித்த பந்து, ஹை பிளிக் மிட்விக்கெட்டில் ஸ்டேடியத்தில் 4-5 வரிசைகள் தள்ளிப் போய் விழுந்தது சிக்ஸ். உடனேயே கிளென் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ரோஹித் சர்மா ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால் இருவருமே ஆட்டமிழந்தனர்.
கோலி, சூரியகுமார் யாதவ் சேர்ந்தனர். இருவரும் நன்றாக ஓடி ரன் எடுத்தனர். அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தனர். கோலி ஒரு அட்டகாச எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியையும் ஒரு சிக்சரையும் எடுத்து 19 ரன்களில் ஸ்டார்க்கின் பவுன்சரை ஹூக் செய்து டீப்பில் கேட்ச் ஆனார். மாறாக, சூரியகுமார் யாதவ் மீண்டும் அட்டகாசமாக ஆடினார். அதுவும் கமின்ஸை லாங் ஆனில் அடித்த பவுண்டரி பிரமாதம்! 6 பவுண்டரி 1 சிக்சர் எடுத்து 33 பந்தில் 50 என்று அவர் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு அட்டகாச சிக்சருடன் 20 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா சொதப்பலாக கேட்ச் ஆகி 5 ரன்களில் வெளியேறினார். கடைசியில் அஸ்வின், கேன் ரிச்சர்ட்சனை சிக்சர் அடித்து அடுத்த பந்தே அவுட் ஆக இந்தியா 186/7 என்று முடிந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கேன் வில்லியம்சன் அட்டகாசமாக வீசி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஸ்டார்க் 3 ஓவர் 20 ரன் 1 விக்கெட். மேக்ஸ்வெல், ஆகர் தலா 1 விக்கெட்.
ஆஸ்திரேலிய அணி பிஞ்ச், மிட்செல் மார்ஷ் (35) மூலம் 34 பந்துகளில் 64 என்ற தொடக்கம் கண்டது. மார்ஷ் குமார் பந்தில் பவுல்டு ஆக, பிஞ்ச் ஒருமுனையில் பவுண்டரிகளாக விளாச, ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களில் செஹல் பந்தில் ஆட்டமிழந்த போது ஆஸ்திரேலியா 10.4 ஓவர்களில் 97/2 என்று வலுவான நிலையில் இருந்தது.
கிளென் மேக்ஸ்வெல் ஒரு சிறு அதிரடியில் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து புவன்ஷேவர் குமார் பந்தில் எட்ஜ் ஆகி கார்த்திக்கிடம் கேட்ச் கொடுக்க 145/3 என்ற நிலையிலிருந்து 171 ரன்களுக்கு வர அப்போதுதான் ஹர்ஷல் படேல் சிறப்பான ஒரு யார்க்கரை வீசி பிஞ்சை வீழ்த்த ஆஸ்திரேலியா அடுத்த 6 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்து 180 ரன்களுக்குச் சுருண்டது.
அஸ்வின் 4 ஓவர் 28 ரன்கள் என்று டைட்டாக வீசியது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. அதேபோல் ஹர்ஷல் படேலின் இந்த ஸ்லோ யார்க்கர் உத்தியும், பும்ரா இல்லாத நிலையில் ஷமி இப்படி வீசினால் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் என்றே தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago