T20 WC அலசல் | பாபர் அசாம், ரிஸ்வான், ஷாஹின் அஃப்ரீடியை மட்டுமே நம்பாமல் வளரும் பாகிஸ்தான் அணி பாயுமா?

By ஆர்.முத்துக்குமார்

நியூஸிலாந்தில் நடைபெற்ற வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. நேற்று கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத நிலையிலிருந்து எதிர்த் தாக்குதல் ஆட்டம் ஆடி 163 ரன்கள் இலக்கை அனாயசமாக 3 பந்துகள் மீதம் வைத்து முடித்து சாம்பியன் ஆனது. உலகக்கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்குவதற்கு முன்பாக இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்கும் கேப்டன் பாபர் அசாமுக்கும் பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்பது உறுதி.

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக தங்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் நெருக்கமான போட்டியாக அமைந்த டி20 தொடரில் 3-4 என்று தொடரை இழந்தனர். ஆகவே, இந்த முத்தரப்பு தொடர் வெற்றி அவர்களுக்கு பெரிய பூஸ்ட்தான்.

இந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் அடைந்த மேம்பாடு என்னவெனில், கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வானுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி ஒன்றுமில்லை என்று நினைப்பவர்களின் எண்ணங்களை மாற்றும் விதமாக ரிஸ்வான் (34), பாபர் அசாம் (15), ஷான் மசூத் (19) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தான் வென்றுள்ளது. அதாவது 12 ஓவர்களில் 74/3 என்று இருந்தது பாகிஸ்தான். வெற்றி பெற்ற 8 ஓவர்களில் 90 ரன்கள் என்று தேவைப்படும் ரன் விகிதம் எகிறியது.

அப்போதுதான் ஹைதர் அலி, நவாஸ் இணைந்து 8 பந்துகளில் 33 ரன்களை விளாசித் தள்ளினர். சற்றும் எதிர்பாராத எதிர்த்தாக்குதல் என்றால் இதுதான். இதற்கு முந்தைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராகத்தான் நவாஸ் 20 பந்துகளில் 45 ரன்களை விளாசி பிரமிப்பூட்டும் தாக்குதல் ஆட்டத்தை ஆடினார். நேற்று இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பவுலிங்கையும் விட்டு வைக்கவில்லை. 22 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

பாபர் அசாம்

இத்தனைக்கும் நியூஸிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் அப்போதுதான் 4 ஓவர் 14 ரன்கள் என்று கஞ்சத்தனமான தன் ஸ்பெல்லை முடித்து விட்டுச் சென்றிருக்கிறார். இஷ் சோதி வந்தவுடன் ஹைதர் அலி சிக்சருடன் தொடங்கினார். 15வது ஓவரில் ஹைதர் அலியும் நவாஸும் சேர்ந்து 25 ரன்களை விளாசினர். மேட்சையே மாற்றி விட்டது. ஹைதர் அலி 15 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள். இவரும் ஆசிப் அலியும் ஆட்டமிழந்தாலும் முகமது நவாஸுக்கு உறுதுணையாக ஆட வேண்டிய இப்திகார் அகமது அவர் பங்குக்கு 14 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 25 நாட் அவுட் என்று முடிய பாகிஸ்தான் அருமையாக வெற்றி பெற்றது.

இந்த முத்தரப்பு தொடர் முழுவதும் பாபர் அசாம், ரிஸ்வான் இருவரில் ஒருவர் சொதப்பி விரைவில் அவுட் ஆனாலும் ஷதாப் கான், நவாஸ், ஹைதர் அலி, இஃப்திகார் அகமது ஆகியோர் கைகொடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர் என்பதால் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர், கீழ்வரிசை பேட்டிங்கில் மேம்பாடு தெரிகிறது. இது அந்த அணியின் உலகக்கோப்பை நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 3 இடங்களில் முதலாம் இடத்தில் ரிஸ்வானும், 3-ம் இடத்தில் பாபர் அசாமும் உள்ளனர். டி20 உலக சாதனைத் தொடக்க ரெக்கார்டுகளை இவர்களே வைத்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஆசிப் அலி, பகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷதாப் கான், ஷாஹின் ஷா அப்ரீடி, ஷான் மசூத்.

2021-ம் ஆண்டு யுஏஇ.யில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை வந்தது பாகிஸ்தான். இவர்களைப் பொறுத்தவரை உலகக் கோப்பையை வெல்வதை விட இந்தியாவை வெல்வது அதனினும் பெரிய சாதனை என்ற மனநிலைதான். அதனால்தான் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. 2009-ல் ஒரே ஒருமுறை உலககக் கோப்பை டி20-யில் சாம்பியன் ஆனது பாகிஸ்தான். அக்டோபர் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிளாக்பஸ்டர் போட்டி என்று வர்ணிக்கப்படும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றது. அதுவும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 90,000 பார்வையாளர்களில் பெரும்பாலும் இந்திய பார்வையாளர்களின் காட்டுக் கூச்சலில் பாகிஸ்தானுக்கு உண்மையில் முதுகுத்தண்டு சில்லிடும் பதற்றம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

ரிஸ்வான்

பாகிஸ்தானின் பிரச்சினையாக இருந்த மிடில் ஆர்டர்: ஆசியக் கோப்பை 2022 தொடரில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பெரிய சொதப்பலாக இருந்தது, இஃப்திகார், குஷ்தில் ஷா, ஆசிப் அலி ஆகியோர் சொதப்பினர், ஆனாலும் இவர்கள் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். காரணம், இந்த வீரர்களை நம்ப முடியாது. முக்கியமான போட்டியில் நம்ப முடியாமல் ஆடி வெற்றிகளைப் பெற்றுத் தருபவர்கள் இவர்கள், இப்படித்தான் நேற்று நியூசிலாந்து இப்திகார், ஹைதர் அலி, முகமது நவாஸ் சற்றும் எதிர்பாராத வெற்றியைப் பாகிஸ்தானுக்கு பெற்றுத் தந்தனர். இதில் ஆசிப் அலி பினிஷராக அறியப்படுபவர்.

பாகிஸ்தான் மிடில் ஆர்டர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், இப்போது நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரிலும் மேம்பாடு அடைந்துள்ளது. இந்த மிடில் ஆர்டர் அபாயகரமானது. பாகிஸ்தான் அணிக்கேயுரிய நிச்சயமின்மைதான் அந்த அணியை அபாயகரமான அணியாக மாற்றியுள்ளது. வெற்றி பெறும் நிலையிலிருந்து அப்படியே சரிவடைந்து தோல்வி அடைவார்கள், இல்லையெனில் நிச்சயம் தோல்வி என்ற நிலையிலிருந்து பயங்கரமாக வெற்றி பெறுவார்கள், இது பாகிஸ்தான் அணியின் இயல்பு. ஆனால், இப்போது பாபர் அசாம் கேப்டன்சியில் இந்த நிச்சயமின்மை கொஞ்சம் குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் பாபர் அசாம், ரிஸ்வானை நம்பித்தான் அணி இருக்கிறது.

பாகிஸ்தான் பவுலிங் அபாரமான சேர்க்கையுடையது, ஷாஹின் ஷா அஃப்ரீடி மீண்டும் இணைந்து விட்டார், இது ஒரு பெரிய பூஸ்ட். ஆனால் காயத்திலிருந்து வந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. இவரை இந்திய அணி தொடக்கத்திலேயே சாத்தி எடுத்து விட்டால் தொடர் முழுதுமே இவருக்கு கை வர விடாமல் செய்ய முடியும். மற்றபடி ஹாரிஸ் ராவுஃப்பின் வேகம் ஆஸ்திரேலிய பிட்ச்களில் பெரிய அச்சுறுத்தலே. அதேபோல் முகமது வாசிம், நசீம் ஷா, ஹஸ்னைன் ஆகியோரும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள். ஸ்பின்னில் ஷதாப் கான் அனுபவசாலி, மெல்போர்ன் போன்ற ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் இறுதி ஓவர்களை இவர் வீசினால் தூக்கி அடித்தேயாக வேண்டிய நிர்பந்தத்தில் பெரிய பவுண்டரி என்பதால் கேட்ச் ஆகி எதிரணியினர் இவரிடம் நடையைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். இவரோடு இப்திகார் என்ற ஆல்ரவுண்டர் ஒரு நல்ல ஆஃப் ஸ்பின் பவுலராக இருக்கிறார். முகமது நவாஸ் அபாயகரமான இடது கை ஸ்பின்னர் மற்றும் அதைவிட அபாயகரமான இடது கை பேட்டர். அணிச்சேர்க்கை நன்றாகவே உள்ளது.

ஷாஹின் அஃப்ரீடி

பாகிஸ்தான் அணிக்கு சாதகமற்ற விஷயங்கள்: பெரும்பாலும் சிறிய மைதானங்களான யுஏஇயில் பெரும்பகுதி ஆடுகின்றனர். இப்போது நியூசிலாந்தில் ஆடியுள்ளனர்.இங்கு மைதானங்கள் சிறியது. பாகிஸ்தான் பிரீமியர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகள், மற்றும் சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேசப் போட்டிகள் உட்பட எல்லைக்கோட்டை முன்னால் கொண்டு சென்று 55-60மீ அல்லது அதிகம் போனால் 65 மீ பவுண்டரியை வைத்துக் கொண்டே ஆடி பழகிவிட்டனர், இந்த குறுகிய பவுண்டரிகளால்தான் 200 ரன்கள் இலக்கையெல்லாம் அனாயசமாக நோ-லாஸில் வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் பரந்து விரிந்தவை. இங்கு பவுண்டரிகள் சிக்சர்கள் கடினம், டீப்பில் தள்ளி விட்டு ஒன்று, இரண்டு, 3 ரன்களை எடுக்கும் திறமை வேண்டும். நீண்ட காலம் கழித்து இத்தகைய பெரிய பவுண்டரி ஆஸ்திரேலியாவில் ஆடுவதால் பாகிஸ்தான் அணிக்கு பெரிய சிக்கல்கள் உள்ளன. இதை அந்த அணி நிர்வாகத்தில் யாரும் பேசியதாகத் தெரியவில்லை.

மேலும், புதிய பந்து எகிறும் என்பதால், பெரிய டெக்னிக் இல்லாத நம்பர் 2 டி20 வீரர் ரிஸ்வான் விரைவில் காலியானால், பாபர் அசாம் நிற்க வேண்டி வரும் இது அணியின் இலக்கை குறைத்து விடும் அபாயம் உள்ளது. நடுவரிசை பிக் ஹிட்டர்கள் தூக்கி அடித்து கையில் கொடுத்து விட்டுச் சென்றால் பாகிஸ்தான் மீள்வது கடினம். அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தான் பீல்டிங் எப்போதுமே மோசம்தான், இந்த அணியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆஸ்திரேலியா பிட்ச்களில் 165-170 ரன்கள் இலக்கை விரட்டுவதே கடினம். கொஞ்சம் கிளாசிக் தரமும் கொஞ்சம் புத்திசாலித்தனமான அதிரடி வீரரும் பாகிஸ்தான் வரிசையில் இருந்தால், சுருக்கமாக சூரியகுமார் போல் ஒரு புத்திசாலி அதிரடி வீரர் இருந்தால் பாகிஸ்தான் அசைக்க முடியாத அணியாக இருக்கும். அங்கு அப்படிப்பட்ட வீரர் இல்லை என்பது நிச்சயம் சாதகமற்ற விஷயமே. சிறிய மைதானங்களில் ஆடி ஆடி பழகிய இந்த அணி பரந்து விரிந்த ஆஸ்திரேலியா மைதானத்தில் தொடர் வெற்றி பெற்று கோப்பையை வென்றால் அது உண்மையில் பெரிய சாதனைதான், ஆச்சரியம்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்