டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சிட்னி: ஆடவருக்கான ஐசிசி-யின் 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இந்த 8 அணிகளும் 22-ம் தேதி தொடங்கும் சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இந்த முதல் சுற்று ஆட்டங்கள் ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் சுற்றில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இந்த இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றில் கலந்துகொள்ளும். முதல் சுற்றில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் உறுதியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறக்கூடும். ஏனெனில் இந்த இரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளை காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை வலுவானவை.

தொடக்க நாளான நாளை இரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் சமீபத்தில் ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற தவறிய இலங்கை அணி, ஆசிய கோப்பையில் பலம் வாய்ந்த இந்தியா, இலங்கை அணிகளை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சாய்த்தது.

நமீபியா அணி கடந்த ஆண்டு தனது அறிமுக தொடரிலேயே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியிருந்தது. டேவிட் வைஸ், ரூபன் டிரம்பில்மான் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.

முதல் சுற்று ஆட்டங்கள் 21-ம் தேதி முடிவடையும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூப்பர் 12 சுற்று அடுத்த நாளான 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில்நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 13-ம் தேதி மெல்பர்னில் அரங்கேறுகிறது.

நெதர்லாந்து அணி 4-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. எனினும் அந்த அணி 2016-ம் ஆண்டு தொடருக்கு பிறகு எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி காணவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்