T20 WC அலசல் | அதிரடியாக ஆடும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வது கடினம்... ஏன்?

By ஆர்.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் வீழ்த்தி, வலுவான மன நிலையில் செல்கிறது. கடந்த 2010-ல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது இங்கிலாந்து. அதனால், இந்த முறை அதிரடி ஆல்ரவுண்டர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இருந்து நீக்கி விட முடியாது என்பதே பேச்சாக உள்ளது.

ஆனால், இங்கிலாந்து அணியிலும் சில பிரச்சினைகள் இருக்கிறது. எல்லோரும் அதிரடியாக ஆடக்கூடிய திறன் படைத்த வீரர்கள் தாம், மற்ற அணிகளை காட்டிலும் ஆல்ரவுண்டர்களை அதிகம் தேர்வு செய்துள்ள அணி இங்கிலாந்து என்றால் அது மிகையாகாது. முதலில் இந்த தொடருக்கு இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

இங்கிலாந்து அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், அலெக்ஸ் ஹேல்ஸ். காத்திருப்பு வீரர்கள்: லியாம் டாசன், ரிச்சர்ட் கிளீசன், டைமல் மில்ஸ்.

இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி என்று பேசப்பட்டு வருகிறது. இவர்களுடன் வழக்கம் போல் இந்திய அணியையும் சேர்த்துக் கொள்வார்கள், ஆனால் இந்தியா எந்த அளவுக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் சோபிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளும் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் உள்ளன. ஆனால் எப்போதும் பட்டியல் போட்டால் அந்த அணிகள் வராமல் வேறு அணிதான் கோப்பையை வெல்வது வழக்கம். ஏனெனில் டி20 வடிவம் எந்த ஒரு கணிப்பையும் உண்மையில் தவிடுபொடி ஆக்கக்கூடிய வடிவமாகும்.

ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் முதல் சுற்று குரூப் ஏ போட்டிகளின் வின்னர் (நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, யுஏஇ), இதே குரூப்பில் முதல் சுற்று குரூப் பி-யின் ரன்னர் அணி (அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே) ஆகியவை இடம் பெற்றுள்ள குரூப்பில் இங்கிலாந்து உள்ளது. இதில் ஒன்று இலங்கையாக இருக்கலாம். குரூப் பி ரன்னர் நிலைக்கு மட்டும் 3 அணிகள் போட்டியில் உள்ளன (அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே). இதில் எது தகுதி பெறும் என்பது தகுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவில் தான் தெரியும்.

இங்கிலாந்து அணி அக்டோபர் 22ம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் தன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அபாயகரமான ஆப்கன் அணியை விளையாடிய இருமுறையும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது, எனவே இந்த போட்டியின் ரிசல்ட் இங்கிலாந்துக்கு சாதகமாகவே அமையும்.

2வது போட்டியில் முதல் சுற்றின் குரூப் பி ரன்னர் அணியுடன் மோதுகிறது, இது வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே என்று எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த அணிகளும் அன்றைய தினத்தில் அபாயகர அணிகளே, எனவே இங்கிலாந்து முதல் 2 போட்டிகளில் வென்று நிலையை உறுதிச் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

3வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து. இப்போதைய வெற்றிகளை வைத்துப் பார்க்கும் போது இங்கிலாந்தின் கைதான் இந்தப் போட்டியிலும் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்த போட்டியில் குரூப் ஏ வின்னரை எதிர்கொள்கிறது. முதல் 2 போட்டிகளில் வென்று விட்டால் பிறகு இரண்டிலும் தோற்றால் கூட மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து தகுதி பெற்று விடும், அதில் சிக்கல் இல்லை.

கோப்பையை இங்கிலாந்து வெல்வது கடினம்: ஏன் தெரியுமா? - இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டி மற்றும் டி20 அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது. 2015 உலகக்கோப்பை தொடரின் மோசமான தோல்விகளுக்குப் பிறகு மோர்கன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்று குவித்த வெற்றிகளின் உச்சகட்டமாக 2019 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை முதன் முதலாக மோர்கன் தலைமையிலான அணி வென்றது.

இங்கிலாந்தின் தாரக மந்திரம் ‘வருவது வரட்டும் ஆக்ரோஷம் மட்டுமே கைக்கொடுக்கும்’ என்பதே. இதுதான் இந்த அணியின் பலமும் பலவீனமும். பலம் என்னவெனில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் தொடங்கி யார் இறங்கினாலும் அதிரடி ஆட்டம்தான். ஒருவர் 20 ஒவர் வரை நிற்பது, ஒரு முனையை சரியாமல் தாங்கி நிற்பது போன்ற எந்த ஒரு அசட்டுத்தனமான உத்தியும் அவர்களிடத்தில் கிடையாது.

அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘அடி, அதிரடி, காட்டடி’ என்பதே அவர்களது பேட்டிங் மந்திரம். டேவிட் மலான் மட்டுமே கொஞ்சம் நிதானித்து, பிறகு அடிப்பவர். மற்றவர்கள் அனைவரும் இறங்கியது முதலே அதிரடிதான். கடைசி வரை பேட்டிங் உள்ளது. ஆல்ரவுண்டர்கள் மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், வோக்ஸ், டேவிட் வில்லே ஆகியோர் உள்ளனர். கடைசி வரை பேட்டிங் உள்ளது.

பவுலிங்கில் புதுவரவு ரீஸ் டாப்லி உண்மையில் டாப் பவுலர் தான். ஆதில் ரஷீத் ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் கடைசி ஓவர்களில் ஒன்றிரண்டை வீசினால் டீப்பில் கேட்ச் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. மார்க் உட் ஒரு அதிவேக பவுலர். தொடக்க ஓவர்களில் இவரும், டாப்லியும் அபாயகர பவுலர்கள். மொயின் அலியை ஒரு மேக் ஷிஃப்ட் பவுலராக வைத்துக் கொள்ளலாம். அணி படு ஸ்ட்ராங்காக உள்ளது. இங்கிலாந்து அணியினர் இடத்தில் ஒரு காலத்தில் இருந்த தோல்வி பயம் இப்போது இல்லவே இல்லை. அதனால் அந்த அணி ஒரு அபாயகர அணியாகத் திகழ்கிறது.

ஆனாலும் இங்கிலாந்து கோப்பையை வெல்வது கடினம். ஏனெனில், தொடக்கத்திலிருந்தே வருவது வரட்டும் என்று அடிக்கிறார்கள். இந்த அணுகுமுறை ஒருவேளை அவர்களுக்கு கைகூடாமல் போகும் வாய்ப்பு உள்ளது, எப்படி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சொற்பமாக ஆல் அவுட் ஆகி இந்தியா எளிதில் வென்றதோ, அது போல் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் பிக் ஹிட்டர்கள் எல்லாம் முதல் வரிசையில் இங்கிலாந்தில் இறங்கி விடுகின்றனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஒயிட் பால் கிரிக்கெட், அதுவும் புதிய பந்துகள் எகிறும். அப்போது இவர்கள் ஆட்டமிழந்து விட்டால், பிற்பாடு முதல் வரிசை வீரர்கள் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவில் எப்போதும் பந்து பழையதான உடன் ரன்கள் எடுக்கலாம். அப்போது 5, 6 மற்றும் 7-ம் நிலைகளில் பெரிய ஷாட்களை ஆடி, பெரிய பவுண்டரிகளை கிளியர் செய்யும் ஹிட்ட்டர்கள் அவசியம். இந்த இடத்தில் இங்கிலாந்தின் முதல் வரிசை போல் பின்வரிசை இல்லை என்றே தோன்றுகிறது.

எனவே இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ அணுகுமுறை கத்தியின் மேல் நடப்பது போல்தான். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அந்த அணியினால் திட்டமிட முடியாது. ஏனெனில் ஒரே அணுகுமுறைதான். இங்கிலாந்தின் இன்னொரு பலவீனம் ஃபீல்டிங். கேட்ச்களை தவற விடுவார்கள். மிஸ் ஃபீல்டிங் செய்வார்கள். உண்மையில் பவுலிங் படு ஸ்ட்ராங். நல்ல காம்பினேஷன் உள்ளது. அதாவது வேகம், ஸ்பின் கலவை சரி விகிதத்தில் அனுபவமும் ஆக்ரோஷமும் கொண்டதாக உள்ளது. இங்கிலாந்தின் பேட்டிங்கை குலைத்து, சரியச் செய்தால் அந்த அணியை எளிதில் வீழ்த்தலாம். ஆஸ்திரேலிய மண்ணில் இதற்குச் சாத்தியம் அதிகம் என்பதால் அந்த அணியினால் உலகக்கோப்பையை வெல்வது சற்று கடினமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்