T20 WC | “உலகின் சிறந்த காரை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளது இந்திய அணி” - பிரெட் லீ

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணி தன் வசம் உள்ள உலகின் சிறந்த காரை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளது என டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணித் தேர்வை விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரெட் லீ. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளரை சேர்க்காததை அவர் இப்படிச் சொல்லியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

“உங்கள் வசம் உலகின் சிறந்த கார் உள்ளது. ஆனால், நீங்கள் அதை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளீர்கள். பிறகு அதனை வைத்திருப்பதில் என்ன பயன்? உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இளம் வீரர். சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரது பவுலிங் வேற லெவலில் இருக்கும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலருக்கும், அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு” என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் - இந்திய வீரர்

விசா சிக்கல் காரணமாக உம்ரான் மாலிக் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது சிராஜ், முகமது ஷமி மாற்று ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மூவரும் ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE