புதுடெல்லி: டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஸ்பின்னர்களின் மேஜிக் பவுலிங்கில் தென் ஆப்பிரிக்கா 99 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 105/3 என்று அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
100 ரன்களுக்குக் கீழ் 4-வது முறையாக தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது. இந்த ஆண்டிலேயே இது 2-வது முறை, இங்கிலாந்து சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை ஒருநாள் போட்டியில் 83 ரன்களுக்குச் சுருட்டியது.
ஏற்கெனவே டி20 தொடரை ரோஹித் சர்மா கேப்டன்சியில் வென்றது. இப்போது ஷிகர் தவான் கேப்டன்சியில் இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரையும் 2-1 என்று வென்று, தொடர்ச்சியாக 5 குறைந்த ஓவர்கள் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய சுழல் மேஜிக்கைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை, குல்தீப் யாதவ் 4.1 ஓவர்களில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த உலகக் கோப்பை டி20 அணியில் தன்னை தேர்வு செய்ய வலியுறுத்துமாறு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அற்புதமான தொடக்க ஓவர்களை வீசி 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிக ரன்களை கொடுத்த இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் அகமது 2 விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் 99 ரன்களுக்குச் சுருண்டது.
» சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கம் குறித்து முதல்வர் ஆய்வு: விரைவில் வெளியாகிறது அரசாணை
» IND vs SA 3-வது ஒருநாள் | அட்டகாச வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குல்தீப் யாதவ் 3-வது முறையாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் ஒருநாள் போட்டியில் பிட்ச் காரணமாக இந்திய பேட்டர்கள் திணறினர். மகராஜைக் கூட அடிக்க முடியவில்லை, பந்துகள் ஸ்விங் ஆகின, எழும்பின, மகராஜ் பந்து திரும்பியது, கடினமான பிட்சில் இந்திய அணி கடைசி வரை போராடி தோற்றது. ஆனால், நல்ல பிட்சில் ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன் தவிர யாருக்கும் ஆடவரவில்லை. இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் செம தடவு தடவி சொதப்பி ஆட்டமிழந்தனர்.
ஆனால், அத்தகைய பிட்ச் எதற்கு என்று கேப்டனோ அல்லது கோச் லஷ்மணோ கேட்டிருக்கலாம். அதனால் அடுத்த மேட்சில் ஸ்லோ பிட்சைப் போட்டு பவுன்ஸ் குறைவாக ஆகுமாறு பார்த்துக் கொண்டனர். அய்யர் சதமெடுக்க, இஷான் கிஷன் பொளந்து கட்ட இந்தியா வென்று தொடரை சமன் ஆக்கியது. இன்று தென் ஆப்பிரிக்காவின் ஆகப் பலவீனமான ஸ்பின் பந்து வீச்சை வைத்து அவர்களை இந்தியா மிரட்டியது. தென் ஆப்பிரிக்கா அணியில் நம்மை மிரட்டுவதற்கு ரபாடா இல்லை, வெய்ன் பார்னெல் இல்லை; அதற்குப் பதில் மார்க்கோ யான்சென், பெலுக்வயோ ஆடினர்.
ஷிகர் தவான் அருமையான கேப்டன்சி: தென் ஆப்பிரிக்கா டி20 உலகக்கோப்பைக்குச் செல்வதற்கு முன் நிறைய கேள்விகளுக்குப் பதில் கூறியாக வேண்டியுள்ளது. அதுவும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா கோர்த்து விடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இன்னும் செட்டில் ஆகாத அணியாக இருக்கிறது. இது ஒருபுறம் என்றாலும் ஷிகர் தவான் கேப்டன்சி இன்று டெல்லியில் துல்லியமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.
டெல்லி ஸ்பின் பிட்ச் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் புதிய பந்திலேயே வாஷிங்டன் சுந்தரைக் கொண்டு வந்து ஷிகர் தவான் பிட்சை நன்றாகப் புரிந்து கொண்டதோடு, சுந்தர் டி காக்கை ஆட்டிப்படைத்தார். முதலில் பீட்டன், பிறகு சஞ்சு சாம்சன் தலைக்கு மேல் அபாயகரமாக ஒரு துடுப்பு ஸ்வீப், பிறகு வைடு பந்தை வெட்டி ஆட முயன்று ஷார்ட் தேர்ட் மேனில் ஆவேஷ் கானிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இன்னொரு முனையில் ஜானிமேன் மலான் சிராஜ் தப்பு செய்தபோது பவுண்டரிகளை விளாசினார். இதில் ஒரு ஷாட் அருமையான டைமிங் மற்றும் சரியான இடத்தில் அடித்தது. இது உண்மையில் ஸ்டன்னிங் ஷாட்தான். இன்றைய ஷாட்களில் பெஸ்ட் என்றே கூறலாம். ஆனால், இங்குதான் ஷிகர் தவான் ஒரு வேலையைச் செய்தார். சிராஜ் இந்தப் பந்தை வீசுவதற்கு முன் டீப் ஸ்கொயர் லெக்கில் ஆவேஷ் கானைக் கொண்டு வந்தார் ஷிகர். ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடினார் மலான் ஆனால் பந்து நேராக ஆவேஷ் கானிடம் கேட்ச் ஆனது. ரீசா ஹென்றிக்சுக்கும் சிராஜுக்காக ஷார்ட் பைன் லெக்கை நிறுத்தியிருந்தார் ஷிகர் தவான். அவரும் அந்த இடத்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹென்ரிக் கிளாசனும், மார்க்ரமும் கட்டைப் போட்டனர். பவுண்டரிகள் அரிதாகின. மார்க்ரம் இந்த முறை ஷாபாஸ் அகமதுவின் அற்புதமான பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். கிளாசன் மட்டுமே 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, கேப்டன் டேவிட் மில்லர் வாஷிங்டன் சுந்தரிடம் ஏமாந்து பவுல்டு ஆனார். குல்தீப்பின் கூக்ளியில் பெலுக்வயோ காலியானார். மார்க்கோ யான்சென் இறங்கி குல்தீப் யாதவ்வை ஒரு லாங் ஆன் சிக்ஸ் விளாசினார். குல்தீப் யாதவ் டெய்ல் எண்டர்களை காலி செய்ய கிளாசனை ஷாபாஸ் வீழ்த்தினார். 28 ஓவர்களில் 99 ரன்களுக்குச் சுருண்டு, இந்தியாவுக்கு எதிராக ஆகக் குறைந்த ஒருநாள் ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா.
மாறாக, இந்தியாவின் தொடக்க வீரர்களில் ஷுப்மன் கில் அபாரமான டைமிங்குடன் தொடங்கி ஆடினார். 37 பந்துகளில் 42 ரன்களை இருவரும் சேர்த்தனர். தவான் 8 ரன்களில் ஷுப்மன் கில் இழுத்து விட்டதனால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி 5 இன்னிங்ஸ்களில் 40 தான் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர். இஷான் கிஷன் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து ஃபார்ட்டுயின் பந்தில் டி காக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷுப்மன் கில் ஷார்ட் பிட்ச் பந்துகளை அருமையாக ஆடினார். கட் மற்றும் புல் ஷாட்கள் இவருக்கு கைவந்த கலைதான். ஆனால் என்ன தூக்கி சிக்ஸ் அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தையெல்லாம் மடக்கி சிங்கிள் எடுக்கிறார். மற்றபடி அபாரமான டைமிங், அதுவும் கடைசியில் இங்கிடியை அடித்த கவர் ட்ரைவ் ‘கிளாஸ்’ ரகம். 49 ரன்களில் அரைசதம் எடுக்கும் பரபரப்பில் இங்கிடியிடமே எல்.பி.ஆனார்.
ஷ்ரேயஸ் அய்யர் நல்ல டச்சில் இருக்கிறார். அவர் 3 பவுண்டரி வின்னிங் ஷாட் மிட் ஆஃப் சிக்ஸ் உடன் 2 சிக்சர்களை விளாசினார். 23 பந்தில் 28 நாட் அவுட், இந்தியா 19.1 ஓவர்களில் 105/3. ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் சிராஜ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago