உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஜெர்மனி சற்றும் எதிர்பாராதவிதமாக 7- 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சின்னாபின்னமாக்கியது.
இதன் மூலம் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஜெர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ் ஒரு கோல் அடித்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்த வகையில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார்.
இந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23வது நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல்கள் அடுத்தடுத்து ஜெர்மனி அடித்ததைச் சொல்வதா? அந்த அரைமணியில் இறுதி வாய்ப்பைக் கோட்டை விட்ட மனத்தாங்கலில் பிரேசில் ரசிகர்களில் பாதிபேர் கண்ணீரும் கவலையுமாக மைதானத்தை விட்டு வெளியேறியதைச் சொல்வதா? அல்லது அதிர்ச்சியை மறந்து, மறைத்து தன் குழந்தையை விட்டு கேமரா முன் டா டா காண்பிக்கவைத்த பிரேசில் பெண்மணியைக் குறிப்பிடுவதா? உண்மையில், பிரேசிலுக்கு என்னதான் நடந்தது? நமக்குமே இன்னும் நம்ப முடியவில்லை.
ஆம்! பிரேசில் கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற ஒரு தோல்வியை அந்த அணி சந்தித்ததில்லை. 1920ஆம் ஆண்டு உருகுவே அணிக்கு எதிராக 6-0 என்று தோல்வி தழுவிய பிறகு, பிரேசில் இப்போது சந்தித்த 7-1 தோல்விதான் படு மோசமான தோல்வியாகும்.
நெய்மார் இல்லாததால் பிரேசில் உடைந்து போனது உண்மைதான் என்றாலும், அவர் இருந்திருந்தாலும் ஜெர்மனியின் இந்த கோல் மழையைத் தடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், கேப்டன் தியாகோ சில்வா இல்லாதது தடுப்பாட்டத்தில் பெரிய ஓட்டையை விட்டுச் சென்றது என்னவோ உண்மை. நெய்மார் இல்லாமல் இந்த தோல்வி ஏற்பட்டதால் பிரேசில் ஆறுதல் அடைய ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் இருந்து இந்தப் படுதோல்வியைச் சந்தித்திருந்தால் அந்த அணி இன்னமுமே உடைந்து போயிருக்கும் என்பதே உண்மை.
ஒரு தேசத்தின் கனவை முறியடித்த அந்த 6 நிமிடங்கள்...
1975ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணி சொந்த மண்ணில் சர்வதேச போட்டி ஒன்றில் தோல்வியடைந்ததில்லை. ஆகவே அனைத்துமே பிரேசிலுக்குச் சாதகமான அறிகுறியாகவே இருந்தது. ஆனால் 11வது நிமிடத்திலிருந்து, 29வது நிமிடம் வரை 5 கோல்களை ஜெர்மனி திணிக்க ஒன்றும் புரியாமல் பிரேசில் எப்படி ஆடுவது என்பதையும் மறந்து போனது.
ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி பகுதியில் பெர்னர்ட் பந்தை எடுத்துச் சென்று பிரேசில் வீரர் லூயிஸ் குஸ்தாவோவிற்கு அளிக்க அவரை ஜெர்மனியின் ஸ்வெய்ன்ஸ் டெய்ஜர் ஃபவுல் செய்தார். நடுவர் கண்டு கொள்ளவில்லை, பந்து மார்செலோவுக்கு வர அவர் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து ஒரு ஷாட்டை முயற்சி செய்ய அது ஆபத்தில்லாமல் கோலுக்கு வெளியே சென்றது.
இப்படியே சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் வந்தது 11வது நிமிடம், தாமஸ் முல்லர், ஹமெல்ஸ் என்று ஜெர்மனி பந்தை விறுவிறுவென பிரேசில் பகுதிக்குள் பந்தை எடுத்து வர கோல் அடிக்கப்போகும் முன் பந்தை பிரேசில் வெளியே அடிக்க ஜெர்மனிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் ஷாட்டை சமி கேடிரா அடித்தா. பந்து அருமையாக இறங்கியது, கோலின் 6 அடிக்கு முன்னால் ஜெர்மனியின் தாமஸ் முல்லரை பிரேசில் கவர் செய்யவேயில்லை. அவர் தனியாக நின்றிருந்தார். பந்து வந்தது பந்தை பாதத்தை திருப்பி கோலுக்குள் செலுத்தினார். ஜெர்மனி 1-0 என்று முன்னிலை வகித்தது.
இது முடிந்து 15வது நிமிடத்தில் டேவிட் லூயிஸ் பந்தை அற்புதமாக வாங்கி 3, 4 ஜெர்மனி வீரர்களைக் கடந்து அபாரமாக நடுக்களத்தில் புகுந்து விளையாடினார் பிறகு ஹல்க்கிடம் பந்தை அடிக்க அவர் கோலுக்காக பாஸ் செய்ய நினைத்தபோது பந்து அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. மீண்டும் 17வது நிமிடத்தில் பிரேசில் வீரர் மர்செலோ இடது புறம் பந்தை அருமையாகக் கடத்தி வந்து ஜெர்மனி பெனால்டி பகுதிக்குள் நுழைந்தார். அங்கு பிலிப் லாம் மார்செலோவை தடுக்கிறார். பெனால்டி பகுதியில் இது ஒரு ஃபவுலாகவே பார்க்கப் பட்டிருக்கவேண்டும், பெனால்டி கிக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் ஆனால் கொடுக்கப்படவில்லை. மார்செலோவும் கீழே விழுந்து பார்த்தார், நடுவர் மசியவில்லை. இதனால் ஜெர்மனி வீரர் போடெங்கிற்கும் மார்செலோவுக்கும் வாக்குவாதம் நடந்தது. இருவரும் ஒருவையொருவர் ஆள்காட்டி விரலை அசைத்து ஆக்ரோஷமாகத் திட்டிக்கொண்டனர்.
பிறகு 19வது நிமிடத்தில் இடதுபுறம் பிரேசில் விரர் தாந்தே பந்தை வேகமாக எடுத்துச் சென்றார். பந்தை பிறகு வலதுபுறம் மைகானுக்கு அடிக்க அவர் ஆஸ்கருக்கு பாஸ் செய்தார். அங்கு ஆஸ்கரிடமிருந்து பந்து ஜெர்மனிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இப்படித்தான் பிரேசில் இந்த ஆட்டம் முழுதுமே பந்தின் கட்டுப்பாட்டை வெகு சுலபத்தில் ஜெர்மனி தட்டிப் பறிக்க அனுமதித்தது.
இதுதான் இடைவேளைக்கு முன் பிரேசிலின் கடைசி முயற்சி... அதன் பிறகு நடந்தது ஜெர்மனிக்கு கடவுள் கொடுத்த கனவு, பிரேசிலுக்கு மோசமான துர்சொப்பனம்
மிராஸ்லாவ் க்லோஸ் உலக சாதனை:
பிரேசிலின் பகுதியில் பந்தை எடுத்து வந்த ஜெர்மனி அணி வீரர் வலது புறத்திலிருந்து பந்தை உள்பக்கமாக அடித்தார். அங்கு பிரேசில் வீரர் குஸ்தாவோ போல்தான் தெரிந்தது பந்தை தடுப்பதில் கோட்டை விட்டார். அது நேராக ஜெர்மனி வீரரின் கால்களுக்கு வர, அவர் அதனை மேலும் உட்புறமாக பெனால்டி பகுதிக்குள் அடித்தார். அங்கு க்லோஸிற்கு பந்து வர கோல் நோக்கி அடித்தார். ஆனால் பிரேசில் கோல் கீப்பர் பந்தை தடுத்து விட்டார். தடுத்தவரிடமிருந்து பந்து ரீபவுண்ட் ஆகி மீண்டும் க்லோஸிற்கே வர, அவர் கோலாக மாற்றினார். பிரேசில் ரொனால்டோவின் 15 கோல் உலக சாதனையை பிரேசிலுக்கு எதிராகவே முறியடித்தார்.
பிரேசில் அணியின் மார்செலோ தொடர்ந்து முன்னேறி ஆட ஆசைப்பட்டதால் அவர் இடத்தில் தடுப்பணை பலவீனமடைந்தது. வலது புறம் இடது புறம் இரண்டுமே பலவீனமாக இருந்தது. மையப்பகுதியில் தியாகோ சில்வா இல்லாததால் பாதுகாப்பு சுத்தமாக இல்லை. சில்வாவுக்குப் பதிலாக தாந்தேயை நிறுத்தியிர்ந்தனர் அவர் பாதிநேரம் வேடிக்கையே பார்க்க முடிந்தது.
அப்படிப்பட்ட தருணத்தில்தான் பிரேசில் பந்தின் கட்டுப்பாட்டை இழக்க வலது புறம் ஒரு தாக்குதலை தொடுத்தது. மார்செலோ தன் இடத்தில் இல்லாமல் முன்னேறி வந்ததால் அந்த இடத்தில் தனக்கான சுதந்திரத்தை ஜெர்மனி பெற்றது. பந்து க்ரூஸிற்கு வர அங்கு பிரேசில் தடுப்பாட்ட வீரர்கள் இல்லாத நிலையில் 3வது கோல் 25வது நிமிடத்தில் விழுந்தது. பிரேசில் ரசிகர்கள், குறிப்பாக பெண் ரசிகர்கள் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினர்.
அடுத்த நிமிடமே பிரேசில் இந்த ஆட்டத்தில் இல்லை என்பது தெரிந்தது. தங்களது சொந்தப் பகுதியில் கவனமின்மையாக ஆடியது. பிரேசில் வீரர் பெர்டினாண்டோ பந்தை முன்னே எடுத்துச் செல்லும் முன்பாக, அவரிடமிருந்து பந்து பிடுங்கப்பட்டு மீண்டும் ஜெர்மனியின் டோனி குரூஸிற்கு பந்து அடிக்கப்பட, அவர் காலியாக இருந்த கோலிற்குள் பாதத்தைத் திருப்பி லேசாகத் தள்ளிவிட்டார். 4வது கோல் விழுந்தது.
இது நடந்து அடுத்த 3வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் டேவிட் லூயிஸ் பந்தை கட்டுப்பாடில்லாமல் எடுத்துச் செல்ல பந்து மீண்டும் பிரேசிலின் கட்டுப்பாட்டிலிருந்து ஜெர்மனி பக்கம் வர பிரேசிலின் சிதிவுண்ட தடுப்பரணைக் கடந்து சமி கேடிரா பந்தை 12 அடியிலிருந்து மேலும் ஒரு கோலாக மற்றினார்.
29வது நிமிடம் ஜெர்மனி 5-0 என்று முன்னிலை வகிக்க, பிரேசில் ரசிகர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டனர். ஒரு தேசமே அழுததை நேற்று பார்க்க முடிந்தது.
ஒரு தேசத்தின் அழுகை:
முதல் பாதியில் பிரேசிலின் ஆட்டம் அதன் சர்வதேசத் தரத்திற்கு ஒரு போதும் இல்லை என்பதே உண்மை, மார்செலோ அவரது இடத்தில் இல்லை. மைகான், தாதே ஆகியோர் சில சுலபமாக தடுக்க வேண்டியப் பந்தை கோட்டை விட்டனர். மேலும் பாஸ் செய்யும்போது தங்கள் பகுதியிலேயே ஜெர்மனி வீரர்களுக்குப் பாஸ் செய்ததும் நடந்தது.
இடைவேளைக்குப் பிறகு: தாந்தேயையும் மைகானையும் உட்கார வைப்பதற்குப் பதிலாக பெர்டினான்டோ மற்றும் ஹல்க்கை உள்ளே அழைத்து பதிலாக ராமிரேஸ், மற்றும் பாலினியோவை களமிறக்கினார். இடைவேளைக்கு பிறகான பிரேசில் ஆட்டம் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் அறிவு பூர்வமாக இருந்தது. முதலில் ஆஸ்காரின் முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் முறியடித்தார். பிறகு உடனேயே பாலினியோ அடுத்தடுத்து இரண்டு ஷாட்களை கோல் நோக்கி அடிக்க அதனையும் அற்புதமாக தடுத்தார் நூயர். குறைந்த இடைவெளியில் 3 வாய்ப்புகள் பிரேசிலுக்குக் கிடைத்தது. ஆனால் ஒன்றும் பயனில்லை.
ஜெர்மனி முழு ஆதிக்கம் தொடர்ந்தது. ஆனால் ஒவ்வொரு முறை பிரேசில் ஜெர்மனி கோல் அருகே சென்ற பிறகும் ஜெர்மனி எதிர்தாக்குதலில் மேலும் கோல்களை அடிக்கும் என்ற நிலையே இருந்தது. அப்படித்தான் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் வலது புறமாக ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது, பந்து லாமிற்கு கிராஸ் செய்யப்பட்டது, அங்கு மற்றொரு அபாய ஜெர்மனி வீரர் ஷுயர்லி பந்தை எடுத்துச் சென்று பக்கவாட்டுப் பாதத்தினால் கோலாக மாற்றினார். சீசர் வேதனையுடன் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
ஆயிரம் பக்கவாட்டுப் பாத ஷாட்களில் பிரேசில் கொல்லப்பட்டது. பிறகு 78வது நிமிடத்தில் இடது புறம் மீன்டும் மார்செலோவை திக்கு முக்காடச் செய்து பந்தை எடுத்து வந்து மீண்டும் ஷுயர்லேயிற்கு பந்தை அடிக்க அவர் இடது காலால் கோலுக்குத் தூக்கி அடிக்க 7வது கோல் விழுந்தது. பிரேசில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
மேலும் மேலும் ஜெர்மனி அணியே கோல் அடிக்கும் போல்தான் இருந்தது. கிரிக்கெட் ஆட்டமாக இருந்திருந்தால், போதும் டிக்ளேர் என்று கூறியிருப்பார்கள். கால்பந்தில் அதற்கான வாய்ப்பில்லை. இருந்திருந்தால் ஜெர்மனி டிக்ளேர் செய்திருக்கும். இவ்வளவு சுலபமாக உலகக் கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் எதிரணியினரின் கோல் எல்லைக்கு அடிக்கடி வர முடியும் என்பது பிரேசில் பாதுகாப்பு அரணின் விசித்திரமான ஆட்டத்தினாலேயே என்றால் மிகையாகாது. 90வது நிமிடத்தில் போதும் என்று மனதிற்குள் ஜெர்மனி டிக்ளேர் செய்த தருணத்தில்தான் ஆஸ்கார் பிரேசிலுக்காக ஒரு கோலை அடித்தார்.
ஆனால் பிரேசில் கால்பந்து வரலாற்றிலேயே தன் சொந்த மண்ணில் அந்த அணி அடித்த கோல் ஒன்று சத்தமேயில்லாமல் எதிர்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறிவிடலாம். திறமையான அணி ஒன்றை ஜெர்மனியின் ஆட்டம் தகர்த்ததோடு ஒரு தேசத்தி நம்பிக்கை, கனவு, என்று அனைத்தும் தகர்ந்து போனது. எந்த மகிழ்ச்சிக்காக, சந்தோஷத்திற்காக இந்த உலகக் கோப்பைப் போட்டிகளை கடுமையான எதிர்ப்பையும், ஏழ்மையையும் மீறி பிரேசில் நடத்தியதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
அந்த 6 நிமிடங்கள் ஒரு தேசத்தின் கனவு சிறுகச் சிறுக அழிக்கப்பட்டது. ஏதோ இந்தத் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற புனித உரிமை பெற்ற அணி என்பது போலவே சொல்லாடல்கள் உருவாகியிருந்தன. ஆனால் அந்த அணியின் உண்மையான பலவீனத்தை மறைத்திருந்த சொல்லாடல்கள் தவிடு பொடியானதையே ஜெர்மனியின் ஆட்டம் நிரூபித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago