கால்பந்தின் கருப்பு நாளாக மாறிய இந்தோனேசிய கலவரம்!

By பெ.மாரிமுத்து

கால்பந்து ரசிகர்கள் மற்ற விளையாட்டு ரசிகர்களை காட்டிலும் ஆக்ரோஷமானவர்கள். தங்களுக்குப் பிடித்த அணியின் வெற்றி, தோல்வியை அவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததாகவே எடுத்துக்கொள்வார்கள். இதனால் கால்பந்து போட்டிகளில் பல நேரங்களில் வன்முறை நடந்துள்ளன.குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் பல சமயங்களில் கால்பந்து போட்டிகளின் போது வன்முறை நடந்துள்ளது. இந்த வகையில்தான் 27.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவின் மலாங் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வன்முறைச் சம்பவம் அரங்கேறி 187 பேரின் உயிர் மாய்ந்துள்ளது. விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மோதல்களில் இது உலகின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வு நடந்த நாள் (சனிக்கிழமை இரவு) கால்பந்தின் ‘கருப்பு தினமாக’ மாறியுள்ளது.

இந்தோனேசியாவில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு. அந்த நாடு 1938-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றதில்லை. எனினும் அங்கு உள்நாட்டுலீக் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து போட்டிகளின் போது இந்தோனேசியாவில் வன்முறை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. இதற்கு காரணம் ரசிகர்கள் தங்கள்கிளப்களுடன் வலுவான பிணைப்பை கொண்டிருப்பதுதான். இத்தகைய வெறித்தனம் பெரும்பாலும் வன்முறை மற்றும் போக்கிரித்தனத்தில் முடிவடைகிறது. ஆனால் ஆதரவாளர்களுக்கு இடையேயான கலவரம் மைதானத்திற்கு வெளியே நடப்பது வழக்கம். இம்முறை வழக்கத்துக்கு மாறாக ஆடுகளத்தின் உள்ளேயே ரசிகர்கள் வெறியாட்டம் நிகழ்த்திவிட்டனர்.

இங்குள்ள பெர்சிஜா ஜகார்த்தா, பெர்சிப் பாண்டுங் கிளப் இடையே நடைபெறும் போட்டியை ரசிகர்கள் தங்களது பகையாளிகள் மோதுவதாக பாவித்துக்கொள்வார்கள். இந்த இரண்டு கிளப்புகளின் ஆதரவாளர்களும் பல போட்டிகளில் மோதியதால் மரணம் ஏற்பட்டுள்ளது. 2018-ல், பெர்சிஜா ஜகார்த்தா அணியின் ரசிகர் ஒருவர், பெர்சிப் பாண்டுங் ரசிகர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் இந்தோனேசிய கால்பந்து சர்வதேச அரங்கில் சிக்கலையும் சந்தித்துள்ளது. கத்தாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டி கடந்த 2019-ல் நடைபெற்றது. இதில் பரம வைரிகளான இந்தோனேசியா – மலேசியா ஆகிய அணிகள் மோதின. இதில் இருநாட்டு அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதே ஆண்டு செப்டம்பரில் ஜகார்த்தாவில் மீண்டும் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது மலேசிய ரசிகர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த ஆட்டத்தை காண்பதற்கு வருகை தந்த மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கோலாலம்பூரில் நடந்த மற்றொரு போட்டியில் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டனர்.

2019-ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியவிளையாட்டுப் போட்டியில் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் இந்தோனேசியா, வியட்நாமிடம் தோல்வியடைந்தது. இதை தாங்கிக்கொள்ள இயலாத இந்தோனேசிய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வியட்நாம் அணியின் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவமதிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். கால்பந்து போட்டிகளின் போது இந்தோனேசியாவில் வன்முறை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. அரேமா - பெர்சிபயா சுரபயாஆகிய அணிகள் மிகவும் நீண்ட நாள் பகையாளிகள். இந்த ஆட்டம் அரேமா அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால் மோதலை தவிர்ப்பதற்காக பெர்சிபயா அணி ரசிகர்களுக்கு டிக்கெட்கள் விற்கப்படவில்லை.

அரேமா அணி இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை. முதன்முறையாக அந்த அணி பரம வைரியிடம் தோல்வியடைந்ததால் அதனை ரசிகர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போனது.பொதுவாகவே விளையாட்டு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறது. இந்த கருத்தியலை மையமாகக் கொண்டுதான் ஒலிம்பிக் போட்டிகள் உருவானது. ஆனால் இவற்றுக்கு எதிர் திசையில் கால்பந்து போட்டியின் வன்முறைகள் பயணிக்கின்றன. எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், குறிப்பிட்ட நபர்கள், குழுக்களுக்கு தடை விதித்தாலும் கால்பந்து கலவரங்களை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. எதிர்பார்ப்பு, அன்பு, உணர்ச்சிகளை தாங்கள்நேசிக்கும் விளையாட்டுக்கும், நாயகர்களுக்கும் எதிராக திருப்புவது நல்ல மனநிலைஇல்லை. இது விளையாட்டின் முன்னேற்றத்துக்கே ஆபத்தை விளைவித்துவிடும் என்பதே நிதர்சனம்

கால்பந்து கலவரங்களில் இதுவரை... - பெரு: 1964-ம் ஆண்டு மே 24-ல் பெரு நாட்டில் லிமா சர்வதேச மைதானத்தில் பெரு – அர்ஜெண்டினா அணிகள் ஒலிம்பிக் தகுதி சற்று கால்பந்து போட்டியில் மோதின. இதில் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 320 பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ரஷ்யா: 1982-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி ரஷ்யாவின் லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற யுஇஎஃப்ஏ கோப்பையில் மாஸ்கோ – ஹார்லீம் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஏனெனில் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டதில் 66 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோவியத்ஸ்கி ஸ்போர்ட்ஸ் நாளிதழ், கால்பந்து கலரவத்தில் 340 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது.

கானா: 2001-ம் ஆண்டு மே 9-ம் தேதி கானாவின் அக்ராவில் நடைபெற்ற ஹார்ட்ஸ் ஆஃப் ஓக்ஸ் – குமாசி கிளப் போட்டியின் முடிவில் 126 பேர் இறந்தனர், குமாசி ஆதரவாளர்கள் தங்கள் அணியின் தோல்வியால் கோபமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்து: 1989-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஷெஃபீல்ட்ஹில்ஸ்பரோ ஸ்டேடியத்தில் லிவர்புல் – நாட்டிங்காம் பாஃரஸ்ட் மோதிய ஆட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 97 ரசிகர்கள் இறந்தனர்.

கவுதமாலா: 1996-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கவுதமாலாவில் உள்ள மேடியோ புளோரஸ் தேசிய அரங்கில் கவுதமாலா – கோஸ்டா ரிகா அணிகள் உலகக் கோப்பை தகுதி சுற்றில் மோதின. இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 80 ரசிகர்கள் உயிர் துறந்தனர்.

ஸ்காட்லாந்து: 1971-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஸ்காட்லாந்தின் ஐப்ராக்ஸ் ஸ்டேடியத்தில் ரேஞ்சர்ஸ் – செல்டிக் டெர்பி அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் இறந்தனர். இதே மைதானத்தில் 1902-ம் ஆண்டு கேலரி இடிந்து விழுந்ததில் 26 பேர் இறந்திருந்தனர்.

எகிப்து: 2012-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி எகிப்தின் போர்ட் மைதானத்தில் அல்-மஸ்ரி - அல்-அஹ்லி கிளப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் 74 ரசிகர்கள் கொல்லப்பட்டனர். இதே மைதானத்தில் 1974-ம் ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் இறந்தனர். 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில் 80 பேர் ஆயிரம் கூடியதால் இது நிகழ்ந்தது.

தென் ஆப்பிரிக்கா: 2001-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஆர்லாண்டோ பைரேட்ஸ் – கைசர் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 43 பேர் இறந்தனர். இதே மைதானத்தில் 1991-ம் ஆண்டு ஜனவரி 13-ல் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

பெல்ஜியம்: 1985-ம் ஆண்டு மே 29-ம் தேதி பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹெய்சல் மைதானத்தில் ஜுவென்டஸ் ரசிகர்கள் லிவர்பூல் ரசிகர்களை விரட்ட முயன்றதில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ்: 1992-ம் ஆண்டு மே 5-ம் தேதி பிரான்ஸின் - கோர்சிகாவில் உள்ள ஃபுரியானி மைதானத்தில் கேலரி இடிந்து விழுந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேமரூன்: இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 24-ம் தேதி கேமரூன் நாட்டில் யவுண்டேவில் கேமரூன் - கொமொரோஸ் இடையேயான போட்டியில் ஏற்பட்ட நெரிசல் 8 பேர் இறந்தனர். 38 பேர் காயமடைந்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்