ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி: 6 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை மாணவிக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

தாய்லாந்தில் நடந்த ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப் பதக்கங்கள் வென்ற லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் பாராட்டினார்.

தாய்லாந்தில் ஆசிய பசிபிக் காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்-2022 போட்டிகள் நடைபெற்றன.

இதில் பெண்கள் ஒற்றையர், இரட்டையர், திறந்த கலப்பு இரட்டையர், இளையோர் பெண்கள் ஒற்றையர், இரட்டையர், இளையோர் கலப்பு இரட்டையர் பிரிவில் 18 வயதான ஜெர்லின் அனிகா 6 தங்கப்பதக்கங்கள் வென்றார்.

மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காது கேளாதோர் ஒலிம்பிக்-2022 போட்டி பிரேசிலில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜெர்லின் அனிகா தங்கப்பதக்கம் வென்றார்.

இவரது சாதனைகளை அறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாணவி ஜெர்லின் அனிகாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது லேடி டோக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங், துணை முதல்வர் பியூலா ஜெய, உடற்கல்வி இயக்குநர்கள் டி.டி.சாந்தமீனா, எம்.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE