சூர்யகுமார் யாதவ் கரியருக்கு கேகேஆர் அணியில்தான் திருப்புமுனை கிடைத்தது: ரிக்கி பாண்டிங்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் சூர்யகுமார் யாதவின் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை ஏற்பட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவ் அபாரமான ஃபார்மில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 1266 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 926 ரன்கள் எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 682 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில உள்ளார்.

இந்நிலையில், அவரது கிரிக்கெட் கரியரில் கேகேஆர் அணியில் விளையாடியபோது தான் திருப்புமுனை தொடங்கியதாக தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

“நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது அவருக்கு 18-19 வயதுதான் இருக்கும். மிகவும் இளம் வீரர். அவர் எங்கள் அணியில் இருந்தபோதும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அந்த அணியில் இருந்து விலகிய பிறகு அவரை கொல்கத்தா அணி வாங்கி இருந்தது. அங்குதான் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது.

மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் மீண்டும் மும்பை அணி அவரை வாங்கியது. இப்போது அந்த அணியின் மேட்ச் வின்னராக அவர் ஜொலித்து வருகிறார். அவரை மிக இளம் வயதில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும் அவரது திறன் என்னவென்று. அவர் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் தேடலை செழிக்க செய்தார்” என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE