உமிழ்நீருக்கு தடை, பெனால்டி ரன்... அக்.1 முதல் அமலுக்கு வரும் ஐசிசி-யின் புதிய விதிகள் என்னென்ன?

By எல்லுச்சாமி கார்த்திக்

துபாய்: அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய விதிகளை கிரிக்கெட் களத்தில் அமல்படுத்த உள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). கிரிக்கெட் பந்தை பாலிஷ் செய்ய உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இதன்மூலம் நடைமுறைக்கு வரவுள்ளன. அந்தப் புதிய விதிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

கிரிக்கெட் விளையாட்டில் முன்பெல்லாம் பை-ரன்னர் என்றொரு ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் களத்தில் பேட் செய்யும் வீரர்கள் தங்களுக்கு பதிலாக மாற்று வீரரை அழைத்து ரன் ஓட சொல்லி பணிக்கலாம். ஆனால், பேட்டிங் மட்டும் அவர்கள்தான் செய்ய வேண்டும். கால ஓட்டத்தில் அதற்கு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து குட்பை சொல்லப்பட்டது. இப்படியாக விதிகளை மாற்றி பழைய வழக்கத்திற்கு முழுக்கு போடுவது மற்றும் புதிய விதிகளை அமல்படுத்துவதுமாக கிரிக்கெட் கவுன்சில் இயங்கி வருகிறது. இது விளையாட்டில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக கொண்டு வரப்படும் முயற்சி. ஃபரீ ஹிட், ஓவருக்கு ஒரு பவுன்சர் போன்ற விதிகள் எல்லாம் அப்படி கொண்டுவரபட்டவை தான்.

அந்த வகையில்தான் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனை கடந்த மார்ச் வாக்கில் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அல்லது சுருக்கமாக எம்சிசி என அழைக்கப்படும் கமிட்டி வழிமொழிந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளை மாற்றுவது தொடர்பான பணிகளைச் செய்து வருகிறது எம்சிசி. புதிய விதிகள் என்னென்ன?

உமிழ்நீருக்கு நிரந்தர தடை: கிரிக்கெட் பந்தை பளபளக்க செய்யும் நோக்கில் வீரர்கள் எச்சிலை பயன்படுத்துவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக எச்சில் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அதனை நிரந்தரமாக்கி உள்ளது ஐசிசி.

கிராஸ் ஓவர் செல்லாது: ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்தை கேட்ச் கொடுத்து அவுட்டானால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்களை கிராஸ் செய்வது வழக்கம். புதிதாக வரும் பேட்ஸ்மேன் நேரடியாக ஸ்ட்ரைக் எடுப்பதை தவிர்க்கவும், ஆட்ட சூழலை புரிந்து கொள்ளவும் இது உதவும். குறிப்பாக அடுத்து பேட் செய்ய வருவது டெயில் எண்டர்கள் என்றால் இந்த கிராஸ் ஓவர் கொஞ்சம் அதிகம் நடக்கும். தற்போது இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் கடந்திருந்தாலும் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதிதாக வரும் பேட்ஸ்மேன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். முன்னர் இது 3 நிமிடங்களாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் 90 நொடிகளாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பந்துவீசும் அணி விஷமம் செய்தால் 5 ரன்கள் பெனால்டி: பேட்ஸ்மேன்களின் கவனத்தை குலைக்கும் வகையில் பந்து வீசும் அணிகள் பவுலர் பந்து வீச ரன் அப்பில் இருக்கும் போது ஏதேனும் விஷமம் செய்தால் நடுவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கலாம்.

நான்-ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்வது அதிகாரபூர்வமானது: பொதுவாக பவுலர்கள் பந்து வீச முற்படும்போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மென் கிரீஸ் லைனுக்கு வெளியே சென்று ரன் ஓட தயாராக இருப்பார்கள். பவுலர்கள் அதனை கவனித்தால் அவர்கள் ரன் அவுட் செய்யலாம். ஆனால் இந்த முறை நியாயமற்றதாக பார்க்கப்பட்டது. இப்போது அது அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அது விளையாட்டு முறையில் ஃபேர் பிளேவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறி விக்கெட்டுக்கு முன்னாள் வந்தால் பவுலர்கள் பந்தை டெலிவரி செய்வதற்கு முன்னர் த்ரோ செய்து பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம். இனி அப்படி செய்தால் அது டெட் பாலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டி20 கிரிக்கெட்டில் அமலில் உள்ள ஸ்லோ ஓவர் ரேட் முறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் 2023 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விளையாட்டு விதிமுறைகளை சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விதிகள் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்