பிலாண்டரிடம் சிக்கிய ஆஸ்திரேலியா 85 ரன்களுக்குச் சுருண்டது: தென் ஆப்பிரிக்கா 171/5

By ஆர்.முத்துக்குமார்

ஹோபார்ட்டில் சனிக்கிழமையன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து அந்த அணியை 85 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. டெம்பா பவுமா 38 ரன்களுடனும், குவிண்டன் டி காக் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஹோபார்ட் பிட்ச் ஈர்ப்பதம் மிக்கதாகவும், வானிலை மேக மூட்டத்துடனும் நல்ல கடற்காற்றும் வீசியதால் பவுலிங்கிற்கு சாதகம் என்று சரியாகக் கணித்த ஃபா டுபிளெசிஸ் முதலில் ஆஸ்திரேலியாவைக் களமிறக்கினார். 32.5 ஓவர்கள்தான் ஆஸ்திரேலியா தாக்குப் பிடித்தது, 85 ரன்களுக்குச் சுருண்டது.

விதம் விதமாக சரிவடைவது எப்படியென்று ஆஸ்திரேலிய அணி இனி பாடமே எடுக்கலாம். 2011 கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 47 ஆல் அவுட், கடந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் நாட்டிங்கமில் பிராடிடம் சிக்கி சின்னாபின்னமாகி 60 ஆல் அவுட். கடந்த டெஸ்ட் போட்டியில் 158 ரன்களுக்குப் பிறகு கடைசி 10 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு இழந்து தோல்வி கண்டது, இன்று 85 ரன்களுக்கே சுருண்டது.

ஆஸ்திரேலிய பேட்டிங்கின் சரிவு பற்றி நாம் கூறுவதை விட தென் ஆப்பிரிக்க பந்து வீச்சின் துல்லியம், ஆக்ரோஷம், அதற்கேற்ற கடுமையான பீல்டிங், ஸ்லிப் கேட்சிங், ரன் அவுட், என்று தென் ஆப்பிரிக்க அணி அதன் ஆரம்ப நாட்களை (1992-2000) நினைவு படுத்திவருகிறது.

கிரேம் ஸ்மித் சில அற்புதமான ஆஃப் திசை பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாகத் தேங்கினார், ஆனால் இவர் செய்த தவறு தொடர்ந்து டெய்ல் எண்டர்களை ஆடவைத்ததே, இவர் பெரும்பாலும் ஸ்ட்ரைக் எடுத்துக் கொண்டு ஸ்கோரை ஒரு 125-130 ரன்களுக்காவது கொண்டு சென்றிருக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவர் செய்யவில்லை 48 ரன்களில் ஒருமுனையில் தேங்கினார்.

முதல் ஓவரில் டேவிட் வார்னர், பிலாண்டரின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அலட்சியமாக ஆடி எட்ஜ் செய்து வெளியேறினார். ரிக்கி பாண்டிங் ‘பொறுப்பற்ற ஷாட்’ என்று வர்ணனையில் சாடினார், இவர் மட்டுமல்ல மற்ற முன்னாள் வீரர்களும் வார்னரை கடுமையாக சாடினர். 2-வது ஓவரில் டேல் ஸ்டெய்னுக்குப் பதில் மிகச்சரியாக தேர்வு செய்யப்பட்ட கைல் அபாட் ஒரு வேகமான ஆஃப் ஸ்பின் ரக இன்ஸ்விங்கரை வீச மீண்டும் அணிக்கு வந்த தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 9-வது ஓவரில் உஸ்மான் கவாஜாவை பிலாண்டர் தனக்கேயுரிய அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் செய்ய வைத்தார். அடுத்த பந்தே ஆடம் வோஜஸுக்கு அருமையாக வீசினார் பிலாண்டர் ஒரு விதத்தில் ‘அன்பிளேயபிள்’ வகையறாவைச் சேர்ந்தது அந்தப் பந்து டி காக் கேட்ச் பிடித்தார்.

பிலாண்டர் ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற ஆஸ்திரேலியா 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 4 விக்கெட்டுகளை 10 ரன்களுக்குக் குறைவாக ஆஸ்திரேலியா இழந்த நிலையில் அறிமுக வீரர் கேலம் பெர்குசன் களமிறங்கினார், ஹாட்ரிக்கை தடுத்தார், ஆனால் அவர் 3 ரன்களில் இருந்த போது தென் ஆப்பிரிக்க பதிலி வீரர் டேன் விலாஸின் அருமையான நேர் த்ரோவுக்கு வெளியேறினார்.

அபாட் பந்தை பேக்வர்ட் பாயிண்டில் தள்ளி விட்டார் கேலம் பெர்குசன், அங்கு டேன் விலாஸ் அதனை மிஸ் பீல்ட் செய்தார், இதனை பயன்படுத்தி 2-வது ரன்னிற்காக உயிரை வெறுத்து ஓடி வந்தார் பெர்குசன் ஆனால் சற்றும் நம்பமுடியாத ஒரு பீல்டிங் மற்றும் த்ரோவில் நேரடியாக ஸ்டம்பைத் தாக்க டைவ் அடித்தும் பெர்குசன் கிரீசை கடக்க முடியவில்லை, ரன் அவுட். பெர்குசனின் சகோதரர் ஆவலுடன் ஆட்டத்தைப் பார்க்க வந்தவர் ரன் அவுட் ஆனவுடன் கடுப்பில் எழுந்து சென்றார். பிலாண்டர் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இருந்த போது ஸ்மித் கால்காப்பில் பந்து பட அப்பீல் செய்து கொண்டே பின்னோக்கி நகர்ந்தார் ஆனால் ஸ்மித் ரன் எடுக்கும் முயற்சியில் இருவரும் கடுமையாக மோதிக் கொள்ள தோள்பட்டையில் காயமடைந்த பிலாண்டர் வெளியேறினார்.

கேகிசோ ரபாடா விக்கெட் கீப்பர் நெவிலை எல்.பி. செய்ய உணவு இடைவேளையின் போது 43/6 என்று ஆஸ்திரேலியா தடுமாறியது. உணவு இடைவேளைக்குப் பிறகு பிலாண்டர் பந்து வீசினார். இரட்டை இலக்கம் எட்டிய மற்றொரு அறிமுக வீரர் மென்னியை பவுல்டு செய்தார், பவுல்டு செய்ததற்கு முதல் பந்து அதே லெந்தில் வெளியே ஸ்விங் ஆனது, இம்முறை உள்ளே வந்தது. அருமையான பவுலிங், கண்கொள்ளா காட்சி.

ஸ்டார்க்கிற்கு சற்றும் எதிர்பாராத கேட்சை ஸ்லிப்பில் டுமினி பிடிக்க, ஹேசில்வுட்டிற்கு ஆம்லா அப்படிப்பட்ட இன்னொரு கேட்சை பிடிக்க அபாட் இருவரது விக்கெட்டையும் சாய்த்தார். 2 ரன்களில் நேதன் லயன் எட்ஜ் செய்தார். பிலாண்டர் 10.1 ஓவர்களில் 5 மெய்டன் 21 ரன்கள் 5 விக்கெட். கைல் அபாட் 3 விக்கெட்டுகளையும் ரபாடா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 32.5 ஒவர்களில் ஸ்மித் 48 ரன்களில் தேங்க ஆஸ்திரேலியா 85 ரன்களுக்குச் சுருண்டது.

ஸ்டார்க்கின் அபார பந்து வீச்சு ஏற்படுத்திய திருப்பு முனை:

இன்னும் 55 ஓவர்களை விளையாட வேண்டிய நிலையில் பவுலிங்கிற்குச் சாதகமான பிட்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா குக் எல்கார் மூலம் 18 ஓவர்களில் 43 ரன்கள் தொடக்கம் கண்டது, அதாவது ஆஸி.வீச்சாளர்களில் ஹேசில்வுட் தவிர மற்றவர்களுக்கு ஸ்விங் ஆகவில்லை. தொடக்க வீரர் குக்கின் உத்தி நிச்சயம் சரியில்லை. கிரீசிற்குள்ளே நின்று கொண்டு ஷஃபுல் செய்து அவர் ஆடும் விதம் எந்த நேரத்திலும் எல்.பி.ஆவார் என்பது போல் இருந்தது, ஆனால் அவர் எப்படியோ அதிலும் 23 ரன்களை எடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகு புத்தெழுச்சி பெற்ற ஸ்டார்க் 17 ரன்களில் இருந்த எல்காரை காலைப் பெயர்க்கும் யார்க்கரில் எல்.பி.செய்தார். அதே ஓவரில் ஸ்டீபன் குக் எட்ஜ் செய்தார். அடுத்த ஸ்டார்க் ஓவரில் டுமினி எட்ஜ் செய்தார். ஹேசில்வுட்டிடம் டு பிளெசிஸ் 7 ரன்களில் எல்.பி.ஆனார் இதுவும் ஒரு யார்க்கர் லெந்த் இன்ஸ்விங்கர். ஆம்லா அருமையான சில ஷாட்களுடன் 47 ரன்களை எடுக்க, பவுமாவும் அவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக மிக முக்கியமான 56 ரன்களைச் சேர்த்தனர். கடைசியில் ஆம்லாவும் ஹேசில்வுட் பந்தை எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு நேதன் லயனிடம் ஒரு சில கவலைதரும் தருணங்கள் நீங்கலாக பவுமா 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தும் குவிண்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்தும் இருவரும் இணைந்து மேலும் 39 ரன்களை சேர்க்க ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 171/5 என்று சற்று வலுவான நிலையில் உள்ளது.

வெயில் அடிக்க ஆரம்பித்து பிட்ச் காயத் தொடங்கினால் பேட்டிங் சுலபமாக அமையும் ஆனாலும் இறுகிய பிட்சில் கொஞ்சம் முயற்சி செய்து வீசினால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்