கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று, நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2-வது இன்னிங்சில் 227/8 என்று மொத்தம் 339 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக திகழ்கிறது.
ஆட்ட நேர முடிவில் விருத்திமான் சஹா 39 ரன்களுடனும், சாண்ட்னரை மேலேறி வந்து அபார சிக்ஸ் அடித்த புவனேஷ்வர் குமார் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்குச் சுருண்டு இந்தியாவுக்கு 112 ரன்கள் முன்னிலையைக் கொடுத்தது.
தவண், விஜய் மீண்டும் ஏமாற்றம்:
2-வது இன்னிங்சிலும் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தங்கள் வேகம் மற்றும் ஸ்விங் மூலம் தவண், விஜய்க்கு கடும் சிரமங்களைக் கொடுத்தனர், குறிப்பாக முரளி விஜய்யின் கால் நகர்த்தல்களில் சந்தேகத்தை ஏற்படுத்தினார் மேட் ஹென்றி. விஜய் அடித்த முதல் பவுண்டரியே லேட் ஸ்விங்கில் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லி வழியாக அபாயகரமாக நான்கிற்குச் சென்றது.
போல்ட் பந்து ஒன்று உள்ளே வந்து சற்றே எதிர்பாராமல் எழும்ப தவண் கையில் அடிபட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்த அடுத்த பந்தே மீண்டும் உள்ளே வந்த சற்றே பவுன்ஸ் கூடுதலான பந்தை எம்பி தடுத்தாடிய தவணின் மட்டை உள் விளிம்பில் பட்டு பின் தொடையைத் தாக்கியது. மீண்டும் அதே போன்ற பந்து உள்ளே புகுந்து போக விக்கெட் கீப்பர் கேட்சிற்காக ஒரு பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் பந்து மட்டையில் படவில்லை. தவண் தொடர்ந்து தடவு தடவென்று தடவினார்.
இந்நிலையில் 6-வது ஓவரை ஹென்றி வீச விஜய்யின் துன்பம் முடிவுக்கு வந்தது. மீண்டும் பந்து உள்ளே ஒரு கோணத்தில் வந்து சற்றே வெளியே லேட் ஸ்விங் ஆக விஜய் முன்னால் வந்து ஆட முயன்றார் அவ்வளவே, எட்ஜ் ஆகி 2-வது ஸ்லிப்பில் கப்திலிடம் சரணடைந்தது.
புஜாரா இறங்கி முதல் 2 ஹென்றி பந்துகளின் பவுன்ஸில் திணறிப்போய் விட்டார். இந்நிலையில்தான் தவண் போல்ட்டை 2 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை பெற்றார். இடையே புஜாரா ஹென்றியின் உள்ளே வந்த பந்தை கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார். ஆனால் இது ஐயத்திற்குரிய தீர்ப்பாகத் தெரிந்தது.
தவண் 17 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்து ஒன்று கூர்மையாக உள்ளே வர கால்நகர்த்தல்களை மறந்த தவண் கால்காப்பில் வாங்க எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ரஹானே 1 ரன்னில் ஹென்றியின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட மட்டையில் பந்து சரியாக சிக்காமல் லெக் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா 43/4 என்று ஆனது.
கோலியின் மீட்பும் ரோஹித், சஹாவின் சதக் கூட்டணியும்:
இதற்கிடையே கேப்டன் விராட் கோலி ஹென்றியின் ஒரே ஓவரில் இரண்டு தன் பாணி கவர் டிரைவ் பவுண்டரிகளை அடித்து தொடங்கினார். கோலி பாசிட்டிவாக ஆடி ஜீதன் படேலின் ஒரே ஓவரில் மீண்டும் தனது கவர் டிரைவ் பவுண்டரி ஒன்றையும் லெக் திசையில் சற்றே அதிர்ஷ்டகரமான பவுண்டரியையும் அடித்து 65 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் வந்த நிலையில் போல்ட் பந்து ஒன்று ஷார்ட் பிட்ச் ஆகி மிகவும் தாழ்வாக ஆட முடியாத அளவில் வர கோலி கால்காப்பில் வாங்கி எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார், பந்து கால்காப்பில் பட்ட இடம் லேசாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்தது. கோலி அவுட் ஆனார்.
ஆனால் கோலி இறங்கியவுடன் போல்ட்டும், ஹென்றியும் அளித்த நெருக்கடியை மற்ற வீச்சாளர்கள் அளிக்கவில்லை. டெய்லரின் கேப்டன்சியும் அடிக்கடி மாற்றிய கள வியூகமும் கோலிக்குச் சாதகமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களில் சாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தியா 106/6 இந்நிலையிலிருந்து நியூஸிலாந்து பிடியை தவற விட்டது என்றே கூற வேண்டும்.
ரோஹித் சர்மா இறங்கியவுடனேயே முதலில் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்துத் தொடங்கினார். ரோஹித் சர்மாவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 103 முக்கியமான ரன்களை எடுத்தனர். ரோஹித் சர்மா 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 எடுத்த நிலையில் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து சாண்ட்னரிடம் வீழ்ந்தார். அதே ஓவரில் ஜடேஜா இறங்கி ஒரு அபாரமான சிக்ஸரை அடித்து அடுத்த ஸ்லாக்கில் நீஷமிடம் கேட்ச் கொடுத்து இதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஆட்ட முடிவில் சஹா 39 ரன்களுடனும், புவனேஷ் குமார் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். இந்தியா 339 ரன்கள் முன்னிலை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago