வெள்ளிப் பதக்கத்தை எனக்கு திருப்பித் தர வேண்டும்: தடகள வீராங்கனை சாந்தி சிறப்புப் பேட்டி

என்னிடமிருந்து பறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தை திருப்பித் தர வேண்டும். நான் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி தர வேண்டும் என்று தடகள வீராங்கனை சாந்தி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. இவர், கடந்த 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், பாலினப் பிரச்சினை யால் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு அப்போது சாந்திக்கு அளித்த ரொக்கப் பரிசும், தற்காலிக தடகளப் பயிற்சியாளர் பணியும் ஆறுதல் அளித்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என பலமுறை சாந்தி வலியுறுத்தியபோது மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சாந்தி போராடினார். 10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு பல்வேறு சோதனைகளைக் கடந்து, விளையாட்டுத் துறையில் பயிற்சியாளராகிறார் தடகள வீராங்கனை சாந்தி.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சாந்திக்குப் பயிற்சியாளர் பணி அளிக்க உள்ளதாக, மாநில பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனின் உதவியாளர் மூலம் சாந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு பயிற்சியாளராகும் சாந்தியிடம் வாழ்த்துகளை தெரிவித்துப் பேசினோம்.

பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கு கிடைத்த வெற்றி என சொல்லலாமா?

வாழ்த்துக்கு நன்றி. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இதை முழுமையான வெற்றியாக என்னால் பார்க்க முடியவில்லை. நிறைய போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த சிறிய ஆறுதலாகத்தான் பார்க்கிறேன். ஆனால் இதுமட்டுமே போதாது.

மத்திய அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மத்திய அரசு என்னுடைய வெள்ளிப் பதக்கத்தைத் திரும்பத் தர வேண்டும். நான் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி தர வேண்டும். மாநில அரசு இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி முழு அளவில் பங்காற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்களின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து...

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்னுடைய மாணவர்களைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறேன். அவர்கள் நிச்சயம் பதக்கம் வாங்கி தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பார்கள்.

அரசுப் பணி கிடைத்ததை வீட்டில் எப்படிப் பார்க்கிறார்கள்?

மூன்று தங்கைகளும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்பா, அம்மாவுக்குப் பேச்சே வரவில்லை. அழுகை மட்டுமே அவர்களின் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது.

வெள்ளிப் பதக்கம் இழப்பு, பாலின பரிசோதனை என பல சோதனையான காலகட்டங்களை எப்படிக் கடந்து வந்திருக்கீறீர்கள்?

அந்த நிமிடங்களை, நாட்களை நரகம் என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் மோசமான மனநிலையில் இருந்தேன். கடின உழைப்பு, விடாமுயற்சி உள்ளிட்டவைகளைக் கொண்டு அவற்றைக் கடந்துவந்தேன். உடனிருந்தவர்களின் ஆறுதலும், தடகளமும்தான் என்னை மீட்டெடுத்தது.

பாலினப் பரிசோதனை ஏன் இன்னும் நிரந்தரமாக தடை செய்யப்படவில்லை?

அது நிச்சயமாகத் தடை செய்யப்பட வேண்டும். ஆண்களுக்கு இல்லாமல் பெண்களுக்கு மட்டும் எதற்காக இந்தப் பரிசோதனை என்று தெரியவில்லை. சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் விதித்துள்ள பாலினப் பரிசோதனைக்கான இரண்டு ஆண்டு காலத்தடை, நிரந்தரத் தடையாக மாற்றப்பட வேண்டும்.

ஒடிஷா வீராங்கனை டூட்டி சந்த் விஷயத்தில் அவர் மீதான தடை விலக்கிக்கொள்ளப்பட்டு, ஒலிம்பிக்கில் அவர் விளையாட அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீதி கிடைத்துவிட்டது. இன்னும் சாந்திக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பல குரல்கள் உங்களுக்காக எழுப்பப்பட்டதைக் கவனித்தீர்களா?

ஆம், அவரின் விஷயத்தில் நானும் நிறைய போராடினேன். டூட்டி சந்த் உண்மையாகவே திறமையான பெண். அவரை என்னுடைய ரோல் மாடலாகவே கருதுகிறேன். டூட்டி சந்தும், நானும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்தியப் பெண்களுக்கு ரோல் மாடல்களாக இருக்கவேண்டும். மற்றபடி, நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும். எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக முதல்வருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றி. அத்தோடு என்னுடைய வலிமிகுந்த தருணங்களில் உடனிருந்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள். முக்கியமாக கோபி ஷங்கருடன் என்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன். அவர் மட்டுமல்ல. அவரைப்போலவே எனக்கு ஆதரவளித்த ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்களையும் நினைவுகூருகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE