“எதிர்காலம் முக்கியம்” - நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

36 வயதான அவர் கடந்த 2012 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். 29 டெஸ்ட், 45 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2679 ரன்கள் எடுத்துள்ளார். அனைத்து ஃபார்மெட்டையும் சேர்த்து 91 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் 2 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்துள்ளார்.

“நியூசிலாந்து அணிக்காக நான் 2012 முதல் விளையாடி வந்ததில் மகிழ்ச்சி. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன். எனது சர்வதேச கிரிக்கெட் கெரியரை எண்ணி இந்த நேரத்தில் நான் மகிழ்கிறேன். அதே நேரத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். ஓய்வு குறித்து கடந்த சில வாரங்களாக யோசித்து வந்தேன். இப்போது அதில் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.

காயம் மற்றும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதுதான் இந்த முடிவை நான் எடுக்க காரணம். எனக்கென ஒரு அழகான குடும்பம் உள்ளது. கிரிக்கெட் கரியருக்கு பின்னால் உள்ள எனது எதிர்காலம் குறித்தும் நான் பார்க்க வேண்டி உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை ஃபைனல், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற நியூசிலாந்து அணியில் அவர் ஒரு வீரராக விளையாடி உள்ளார். அவரது ஓய்வு முடிவை அடுத்து நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்து அவர் விடுவித்து உள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

போல்ட் பாணியில் அவரும் டி20 கிரிக்கெட் லீகில் வரும் நாட்களில் பிசியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாட உள்ளதாகவும் தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE