முன்பெல்லாம் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் பாணியை கடைபிடித்தது. இதுவே தொடர்ச்சியான வெற்றிக்கு ‘தாரக மந்திரம்’ என கருதிவந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் இவை அனைத்தும் மாறத்தொடங்கிவிட்டது.
எதிரணிக்கு தொடக்கத்திலேயே ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்கி, முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷ அணுகுமுறையை கடைபிடிக்கும் எண்ணத்தை வேரூன்றிக் கொண்டது இந்திய அணி. இதுகுறித்து சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எங்களது ஆட்ட அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்தோம். இதுதொடர்பாக வீரர்களுக்கு தெளிவான தகவலை கூறினோம்.
அவர்கள் சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து தெளிவான தகவல் கிடைக்கப்பெற்றால் அணி எங்கு செல்ல முயற்சிக்கிறதோ, அதை நோக்கி பயணிக்க தனிப்பட்ட முறையில் வீரர்கள் முயற்சி செய்து வேலையை முடிப்பார்கள். அதற்கு, அவர்களுக்கு சுதந்திரமும் தெளிவும் தேவை, அதை நாங்கள் கொடுக்க முயற்சிக்கிறோம்” என்றார்.
புதிய அணுகுமுறையால் பவர்பிளேவில் இந்திய அணியின் ரன் விகிதம் சீராக முன்னேற்றம் கண்டது. 2021-ல் 7.87 ஆக இருந்த ரன் விகிதம் இந்த ஆண்டில் 8.67 ஆக உயர்ந்தது. இந்த வகையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும். இது டி 20 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக இருக்கும். ஆசிய கோப்பையில் இந்தியா தனது பயணத்தை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து தொடங்குகிறது.
மற்ற அணிகளைவிட அதிகமாக இந்த ஆண்டில் இந்திய அணி இதுவரை 21, டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் மட்டை வீச்சு, பந்து வீச்சு ஆகியவற்றில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உண்மையிலேயே ஆசிய கோப்பை தொடர்தான், உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்கு சிறந்த களமாக இருக்கும்.
ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் என வெற்றியை வசப்படுத்திக் கொடுக்கக்கூடிய வீரர்கள் பலர் நிறைந்த அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கூடுதல் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத குறையை அர்ஷ்தீப் சிங் பூர்த்தி செய்யக்கூடும். ஏனெனில் டி 20 போட்டிகளில் பும்ராவுக்கு அடுத்தபடியாக சிக்கனமாக ரன் வழங்கக்கூடியவராக அர்ஷ்தீப் சிங் உருவெடுத்துள்ளார். 23 வயதான அர்ஷ்தீப் சிங், இந்திய அணியின் உடையில் அதிகம் விளையாடாவிட்டாலும் இறுதிக்கட்ட ஓவர்களில் அற்புதமாக செயல்படும் திறனை பெற்றுள்ளார். சுழலில் யுவேந்திர சாஹல் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும்.
விராட் கோலி சமீபகாலமாக பார்மில் இல்லை. சுமார் ஒருமாத ஓய்வுக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் விராட் கோலி 4, டி 20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளார். 20 சராசரியுடன் அவர் 81 ரன்கள் சேர்த்தார்.
ஐபிஎல் தொடரும் விராட் கோலிக்கு சிறப்பாக அமையவில்லை. 2022 சீசனில் 22.73 சராசரியுடன் 341 ரன்களே சேர்த்தார். இருப்பினும் தற்போது சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட ஓய்வால் புத்துணர்ச்சி பெற்றுள்ள விராட் கோலி இழந்த பார்மை மீட்டெடுப்பார் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இதேபோன்று காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுலின் பார்மும் சிறப்பாக இல்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 7 பேரை தொடக்க பேட்ஸ்மேனாக களமிறக்கி சோதித்து பார்த்துள்ளது. இதனால் கே.எல்.ராகுல் விளையாட முடியாத நிலை உருவானால் அந்த இடத்தை ரிஷப் பந்த் அல்லது சூர்ய குமார் யாதவ் கைப்பற்றக்கூடும்.
மெதுவான மேற்பரப்புகள், பெரிய பவுண்டரி, வெப்பம் ஆகியவற்றால் நடுநிலையான ஸ்கோர்களையே அணிகள் சேர்க்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் சூழ்நிலையை சிறப்பாக எந்த அணி தகவமைத்துக் கொண்டு ஆட்டத்தை ஆழமாக கொண்டு வெற்றியை வசப்படுத்துகிறதோ அந்த அணியே ஆசிய கண்டத்தின் சாம்பியனாக மாறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago