கோலி 13-வது சதம் எடுத்தார்; ரஹானே அபாரம்: வலுவான நிலையில் இந்தியா

By ஆர்.முத்துக்குமார்

இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 13-வது டெஸ்ட் சதத்தை அடித்து ஆட்டமிழக்கமால் இருக்கிறார், ரஹானே 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து வலுவாகத் திகழ்கிறது.

4-வது விக்கெட்டுக்காக விராட் கோலியும், அஜிங்கிய ரஹானேயும் இணைந்து இதுவரை சேர்த்த 167 ரன்கள்தான் இந்தத் தொடரில் இருதரப்பினருக்கும் ஆகச்சிறந்த சதக்கூட்டணியாகும். ஆட்ட முடிவில் கோலி 103 ரன்களை எடுத்துள்ளார்.

விராட் கோலி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் சதம் எடுத்தார். பிட்ச் இரண்டகத் தன்மை கொண்டது. பந்துகள் மேலும் கீழுமாக வந்து கொண்டிருக்கிறது. ஸ்பின்னர்களுக்கு பந்துகள் சில இடங்களில் பிட்ச் ஆகும் போது நன்றாகத் திரும்பியது.

தொடக்கத்தில் கோலி பந்துகளை கணிப்பதில் சிரமம் கண்டார், ஆனால் போகப் போக அவரது கால் நகர்த்தல்களில் தன்னம்பிக்கை ஏற்பட்டது. பிறகு அவரது வழக்கமான ஆட்டம் தொடர்ந்தது. ரன்களையும் வழக்கம் போல் வேகமாக ஓடி எடுத்தார், சதம் எடுத்த ஒரு ரன் கூட ரிஸ்க் ரன் தான். நேர் த்ரோ ஸ்டம்பைத் தாக்கியது, 3-வது நடுவர் தீர்ப்பிற்குச் சென்றது, ஆனால் கோலி அதற்கு முன்னரே சதத்தைக் கொண்டாட ஆயத்தமானார். நாட் அவுட் என்று வந்த பிறகு பெவிலியன் நோக்கி கட்டை விரலை உயர்த்தினார்.

நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் நாளை உடையப்போகும் முதல் நாள் பிட்சில் தங்களால் இயன்றவரை அபாரமாக வீசினர், ஜீதன் படேல் தனது லெந்த், பிளைட், ஆர்க், டிரிப்ட் ஆகியவற்றின் மூலம் சில வேளைகளில் கடும் சிரமங்களை கொடுத்தார், சாண்ட்னரின் சில பந்துகளும் மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே திரும்பியது. ஜீதன் படேலின் திரும்பிய புல் லெந்த் பந்தில்தான் முரளி விஜய் நேராக ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.

கம்பீர் ஹென்றியின் ஓரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை பைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் இரண்டு சிக்சர்களை அடித்து நியூஸி.யை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பிறகு ஒரு லெக் திசை பவுண்டரி, ஒரு அவர் பாணி கட் ஷாட் பவுண்டரி என்று 29 ரன்களுக்கு நன்றாகவே ஆடிவந்தார், இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் ஸ்பின் பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருப்பார், ஆனால் அதற்குள் டிரெண்ட் போல்ட்டின் பந்து ஒன்று இன்ஸ்விங்காகி கம்பீரின் பின்காப்பில் தாக்க எல்.பி.ஆனார். பந்து சற்றே தாழ்வாக வந்தது. கம்பீர் தனது ஸ்டான்ஸில் சிறிய மாற்றம் செய்துள்ளார், சற்றே ஸ்கொயராக நிற்கிறார். அதாவது மொஹீந்தர் அமர்நாத், ஜாவேத் மியாண்டட், சந்தர்பால் ஆகியோர் பாணியில் நிற்கிறார் கம்பீர்.

புஜாரா நிதானமாகத் தொடங்கினார், நல்ல உத்தியுடன் தடுப்பாட்டம் ஆடி 21 பந்துகளில் 4 ரன்களையே எடுத்தார். பிறகு ஹென்றி ஆஃப் வாலி பந்தை வீசும் வரைக் காத்திருந்து கவரில் அற்புதமான பவுண்டரியை அடித்தார். அடுத்த பந்து நல்ல அளவில் வீழ்ந்து சற்றே பிட்சில் நின்று வந்தது, ஆனால் புஜாரா முழுக்கட்டுப்பாட்டுடன் மணிக்கட்டை தளர்த்தி ஆடியதால் பந்து எட்ஜ் எடுத்தாலும் இடைவெளியில் தேர்ட் மேனில் பவுண்டரி ஆனது.

பிறகு சாண்ட்னர், படேல் ஆகியோரையும் பவுண்டரி அடித்த புஜாரா 41 ரன்களில் சாண்ட்னரின் திரும்பிய பந்து ஒன்றில் பவுல்டு ஆனார். முன்னங்காலை இன்னும் நன்றாக நீட்டி ஆடியிருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட பந்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ஜடேஜாவிடமிருந்து இத்தகைய பந்துகளை நியூஸிலாந்து இப்போதே நினைத்துப் பார்த்து அஞ்சியிருப்பார்கள்!

கோலி-ரஹானே சதக்கூட்டணி:

கோலி இந்த டெஸ்ட் போட்டிக்கு ரன் எடுக்கும் நெருக்கடியுடன் இறங்கினார். அரைசதத்திற்கு முன்னதாக படேல் பந்தில் எட்ஜ், பிறகு அரைசதம் கடந்த பிறகு ஜேம்ஸ் நீஷம் பந்தில் ஒரு எட்ஜ், மற்றபடி கோலி நிதானமாக, சாதுரியத்துடன் ரன்களைச் சேர்த்தார். அவர் மட்டையை நியூஸி. பந்துகள் அதிகம் கடந்து செல்ல முடியவில்லை.

செட்டில் ஆன பிறகு அவரது பாணி எக்ஸ்ட்ரா கவர் டிரைவ்கள் அபாரமாக வந்தது. லெக் திசையில் ட்ரெண்ட் போல்ட் பந்து ஒன்று ஷார்ட் பிட்ச் ஆக வந்து எதிர்பார்த்த அளவில் பவுன்ஸ் ஆகாத போதும் அதற்கேற்ப விரைவில் மாற்றி அமைத்துக் கொண்டு புல் ஆடியதும் அபாரம். பிறகு சாண்ட்னரை ஆன் திசையில் அடித்த பவுண்டரியும் வியப்புக்குரியது. டைமிங் அபாரமாக அமைந்தது.

மாறாக ரஹானேயை ஷார்ட் பிட்ச் பந்துகள் சோதனைக்குள்ளாக்கின. ஹென்றியின் ஒரு பந்து உடலைத் தாக்கி பின்னால் சென்றது பிடித்த நியூஸி வீரர்கள் கடும் முறையீடு செய்தனர், ஆனால் தர்மசேனா மசியவில்லை, பந்து கைக்காப்பில் பட்டுச் சென்றது. பிறகு டிரெண்ட் போல்ட் பந்து ஒன்றை புல் ஷாட்டை சரியாக ஆடாமல் மிட்விக்கெட்டில் ஹென்றி டைவ் அடிக்க முன்னால் விழுந்தது. நிறைய ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் தன் கண்களை எடுத்து விட்டு பந்தை ஆடாமல் விட்டார், நீஷம் பவுன்சர் ஒன்று முதுகைத் தாக்கியது. இது அவருக்குச் சோதனை காலகட்டம், ஆனாலும் கடுப்பாகாமல், பொறுமை காத்தார் ரஹானே.

அவ்வப்போது பவுண்டரி அடித்தார், ஸ்பின்னர்களை ஏறி வந்து அடித்தார், சாண்ட்னரை லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார், அரைசதத்திற்காக படேலை மேலேறி வந்து தூக்கி சிக்ஸ் அடித்தார்.

விராட் கோலி 108 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுக்க ரஹானே 123 பந்துகள் எடுத்துக் கொண்டார். அரைசதத்திற்குப் பிறகு இருவரும் பிட்சின் தன்மைகளைப் புரிந்துகொண்டு இயல்பாக ஆடினர்.

நாளை இந்த கூட்டணி எதுவரை செல்லும் என்பதே நியூஸிலாந்தின் இன்றைய இரவின் கவலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கூட்டணியை உடைத்தாலும் மேலும் உடையும் இந்தப் பிட்சில் பேட்டிங் சுலபமில்லை என்பதும் நியூஸிக்கு பிரதான கவலையே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்