நியூஸிலாந்து அபாரப் பந்து வீச்சு: இந்திய அணியை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது

By இரா.முத்துக்குமார்

தோனியின் சொந்த மண்ணான ராஞ்சியில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை இதுவரை 2-2 என்று சமன் செய்துள்ளது.

261 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. மின்னல் வேக அவுட் ஃபீல்டில் நியூஸிலாந்தின் வேகப்பந்து, ஸ்பின் பந்து வீச்சு அருமையாக அமைந்ததோடு அருமையான பீல்டிங், கேட்சிங்கும் நியூஸிலாந்து வெற்றியின் பின்னணியில் உள்ளதை மறுக்க முடியாது.

28-வது ஓவர் தொடக்கத்தில் இந்தியா 128/2 என்று இருந்தது. அதன் பிறகே ரஹானே (57), தோனி (11), பாண்டே (12), ஜாதவ் (0), ஹர்திக் பாண்டியா (9) ஆகியோரை வரிசையாக இழந்து 36 ஓவர்கள் முடிவில் 167/7 என்று ஆனது. அதன் பிறகு அமித் மிஸ்ரா 14 ரன்களுக்கும் அக்சர் படேல் மிக அருமையாக போராடி விளையாடி 38 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஓரளவுக்கு வெற்றி நம்பிக்கையை இந்த ஜோடி அளித்தது. ஆனால் அக்சர் படேல் ஒரு புல் ஷாட்டை ஆடினார் சாண்ட்னரிடம் பந்து டீப் ஸ்கொயர் லெக்கிற்குச் சென்றது, அக்சர் முதல் ரன்னை மெதுவாக எடுத்து ரன்னர் முனையில் பந்தைப்பார்த்துக் கொண்டிருக்க அமிஷ் மிஸ்ரா தடதடவென முக்கால் பிட்சிற்கு ஓடி வர, போல்ட், படேலை மறைக்க அக்சர் ரன்னர் முனைக்கு திரும்பினார், அமித் மிஸ்ரா நடுப்பிட்சில் நின்றார் ரன் அவுட் செய்யப்பட்டார். அதே போல்ட் ஓவரில் அக்சர் படேல் பவுல்டு ஆனார். மொத்தம் 40 பந்துகளைச் சந்தித்த அக்சர் படேல் 3 பவுண்டரிகள் மற்றும் ஜேம்ஸ் நீஷமை ஒரு அபாரமான நேர் சிக்ஸ் அடித்து 38 ரன்கள் எடுத்த பிறகு பவுல்டு ஆனார்.

207/9 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த உமேஷ் யாதவ் (7), தவல் குல்கர்னி (25 நாட் அவுட்) ஸ்கோரை 48.4 ஓவர்களில் 241 ரன்களுக்குக் கொண்டு சென்றனர் அப்போது உமேஷ் யாதவ் போல்ட் பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுக்க நியூஸிலாந்து கொண்டாட்டம் தொடங்கியது. 19 ரன்களில் இந்தியா தோல்வி கண்டது.

ரஹானே கோலிக்குப் பிறகு சவுதி, நீஷம் அருமை:

இலக்கைத் துரத்த இந்திய அணி களமிறங்கிய போது ரஹானே தன்னம்பிக்கையுடன் ஆடினார். சவுதியை பாயிண்ட், கவர் பாயிண்ட் இடையில் பவுண்டரியுடன் தொடங்கினார். ஆனால் ரோஹித் சர்மா போல்ட் பந்தில் எட்ஜ் செய்தார் பந்து கைக்குச் செல்லவில்லை.

ஆனால் போல்ட்டின் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஒரு புல் மற்றும் அற்புதமான கட் ஷாட்டில் 2 பவுண்டரிகளை அடித்தார். அவ்வளவுதான் இந்தத் தொடரில் அவர் நீருபிக்க வேண்டிய நேரத்தில் அவரது பலவீனமான லெந்தில் வீசிய சவுதி அவுட் ஸ்விங் செய்ய எட்ஜைக் காட்டி ரோஹித் வெளியேறினார்.

ஆனால் ரஹானே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். போல்ட் ஓவரில் மிட் ஆஃப் கவருக்கு இடையில் ஒரு பவுண்டரியையும் அதே ஓவரில் ஒரு மார்புயர ஷார்ட் பிட்ச் பந்தை ‘அப்பர் கட்’ சிக்ஸ் அடித்தார்.

கோலி அருமையாக ஒரு மிட் ஆன் பவுண்டரியுடன் தொடங்கினார். 9-வது ஓவரில் சவுதியை மீண்டும் ரஹானே 2 பவுண்டரிகள் அடித்தார். அதுவும் ஷார்ட் கவர், 30 அடி சர்க்கிளில் கவர் திசையில் 2 பீல்டர்கள் நிறுத்தியும் ரஹானே இடையில் பவுண்டரி அடித்தது இன்றைய தினம் அவரது தினம் என்றே நினைக்க வைத்தது. கோலி, சோதியை ஒரு பவுண்டரியும் சாண்ட்னரை ஒரு சிக்சரையும் அடித்தார். பிறகு சோதி ஓவரில் 3 முறை 2 ரன்களை அற்புதமாக ஓடி எடுத்தார்.

51 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து இன்னொரு வெற்றிகர விரட்டலுக்கான அடித்தளத்தை கோலி அமைத்த நிலையில் இஷ் சோதியின் லெக் ஸ்பின் பந்தை கட் செய்ய முயன்றார் மெலிதான எட்ஜ் வாட்லிங் கையில் தஞ்சமடைய மைதானம் அமைதிப்பூங்காவானது.

ரஹானே, தோனி கிரீசில் இருந்தனர். ரஹானே, டேவ்சிச் பந்தை அருமையாக ஆஃப் திசையில் பவுண்டரி அடித்து 61 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

சரிவின் தொடக்கம்: தோனியின் லெக் ஸ்டம்ப் பறந்தது

ரஹானே ஜேம்ஸ் நீஷம் வீசிய 29-வது ஓவரின் 2-வது பந்து சற்றே உள்ளே ஸ்கிட் ஆகி வர காலில் வாங்கி எல்.பி.ஆனார். அனைவரும் மணீஷ் பாண்டேயோ அல்லது கேதர் ஜாதவோ இறக்கப்படுவார் என்று நினைத்த போது அக்சர் படேல் இறக்கப்பட்டார். ஓரு விதத்தில் சிந்தித்து எடுத்த முடிவுதான், ஏனெனில் பினிஷிங் போது மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா இருந்தால் வெற்றி சாத்தியம் என்று நினைத்திருக்கலாம். அக்சர் படேல் சோடைபோகவில்லை வந்தவுடனேயே நீஷமை ஆன் டிரைவ் பவுண்டரி அடித்தார்.

தோனி 31 பந்துகளில் 11 ரன்களில் பவுண்டரியே இல்லை. 31 பந்துகளில் 23 பந்துகள் ரன் இல்லாத பந்துகள். அவர் பீல்டரின் கைகளுக்கு நேராக அடித்துக் கொண்டிருந்தார். அதில் ஓரிரண்டு பந்துகள் அவர் வழக்கமாக சிக்சருக்குத் தூக்கும் பந்துகளே. அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும்போதெல்லாம் தோல்வி அடைகிறார் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். இந்நிலையில் நீஷம் வீசிய 30-வது ஓவரில் பவுல்டு ஆனார். அது ஒரு அருமையான லேசான இன்ஸ்விங்கர், தோனி காலை நகர்த்துவது வழக்கமல்ல என்பதால் நின்ற இடத்திலிருந்தே டிரைவ் ஆட முயன்றார் பந்து மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து லெக்ஸ்டம்பைத் தாக்க ஸ்டம்ப் பறந்தது. மீண்டும் மைதானத்தில் பேரமைதி.

மணிஷ் பாண்டே களமிறங்கி நீஷமின் ஒரே ஓவரில் ஒரு புல் ஷாட் பவுண்டரி பிறகு அருமையான ஆஃப் டிரைவ் பவுண்டரி என்று 2 பவுண்டரிகளை அடித்தார். இதில் 2 வது பவுண்டரி கிட்டத்தட்ட தோனி பவுல்டு ஆன பந்துதான் ஆனால் மணிஷ் உத்தி மிகச்சரியானது. தோனிக்கு விழுந்த பந்தும் ஆஃப் வாலிதான் ஒழுங்காக ஆடியிருந்தால் பவுண்டரி சென்றிருக்கும் ஆனால் நல்ல பவுலிங்கிற்கு தோனியின் உத்தி சரியாக அமையவில்லை.

லேதமின் அருமையான கேட்ச்கள்:

அப்போதுதான் சவுதியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். 33-வது ஓவரில் மணீஷ் பாண்டே பேட்டிங் முனையில் நிற்க மிட் ஆனை முன்னால் கொண்டு வந்தார் வில்லியம்சன், பந்தின் வேகத்தைக் குறைத்து இழுத்து விட்டார் சவுதி, அடிக்க வேண்டிய பந்துதான் ஆனால் வேகம் குறைக்கப்பட்டதால் மணிஷ் பாண்டே ஷாட் மிட் ஆனில் லேதம் தலைக்கு மேல் சற்று அதிக உயரத்தில்தான் சென்றது ஆனால் லேதம் கன்னாபின்னாவென்று எம்பி அதனைப் பிடித்து விட்டர். மணிஷ் பாண்டே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்து சற்றும் எதிர்பாராமல் நீஷமின் ஆஃப் கட்டர் பந்தில் ஜாதவ் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். இந்தப் பந்து ஸ்லோ ஆஃப் கட்டர்தான். ஜாதவ் மட்டையை இறக்குவதில் வினாடிக்கும் குறைவான காலதாமதம் செய்தார், பந்து சற்றே தாழ்வாகி கால்காப்பைத் தாக்கியது. 157/6 என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா கடைசி நம்பிக்கையாக இருந்தார், ஆனால் அவர் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் வீசிய பந்தை மேலேறி வந்து இன்சைடு அவுட் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் ஆடினார், பந்தை அருமையாகத் தூக்கி அடித்தார். ஆனால் லாங் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர் பகுதியை அருமையாக கவர் செய்த லேதம் இன்னொரு அருமையான கேட்சைப் பிடிக்க 167/7 என்று ஆனது.

அதன் பிறகே அக்சர் படேல், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி தங்களால் இயன்றவரை முயன்று பார்த்து கைவிட்டனர். கேன் வில்லியம்சனின் எதிர்பாராத பந்துவீச்சு மாற்றமும், களவியூகமும் அதற்கேற்ற பந்து வீச்சும் நியூஸிலாந்து அணிக்கு ஒரு தொழில் நேர்த்தியான வெற்றியைப் பெற்றுத் தந்தது.

ஆட்ட நாயகனாக மார்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார், உண்மையில் சவுதி அல்லது நீஷமுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் சவுதி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளுடன் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிலும் பாண்டே, ஜாதவ்வை ஒரே ஓவரில் வீழ்த்தினார், அதே போல் நீஷம் மிக முக்கிய விக்கெட்டான ரஹானே மற்றும் தோனியை வீழ்த்தினார். இந்த போட்டியில் இந்த ஓவர்கள் ஏற்படுத்திய திருப்பு முனைதான் இந்திய அணியை வெற்றி வாய்ப்பிலிருந்து தொலைவு படுத்தியது என்றால் மிகையல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்