“தேர்வுக்குழு செய்தது நியாயமே” - ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத இஷான் கிஷன்

By செய்திப்பிரிவு

மும்பை: தேர்வுக்குழு உறுப்பினர்கள் எது செய்தார்களோ அது நியாயமானது என தான் கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கடந்த 2021 முதல் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார் இஷான் கிஷன். இருந்தும் கடந்த சில போட்டிகளாக அவர் சரிவர ரன் சேர்க்கவில்லை. இந்தச் சூழலில் டி20 ஃபார்மெட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் அவர் இடம்பெறவில்லை.

அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இஷான் கிஷன். “தேர்வுக்குழு உறுப்பினர்கள் எது செய்தார்களோ அது நியாயமானது என நான் நினைக்கிறேன். ஏனெனில் வீரர்களை தேர்வு செய்யும்போது யாருக்கு, எங்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆலோசிப்பார்கள். நான் தேர்வு செய்யப்படாததை பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறேன். கடுமையாக உழைத்து, நிறைய ரன்களை சேர்க்க வேண்டியுள்ளது. தேர்வு குழுவினருக்கு என் மீது நம்பிக்கை வரும்போது நான் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே பயணிக்க உள்ள இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இருப்பினும் அவர் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷன், கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அந்த ரோலில் ஆசிய கோப்பையில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஓப்பனரான கே.எல்.ராகுல் விளையாடுவார். கூடுதலாக விராட் கோலியும் அந்த பணியை கவனிப்பார். அதேபோல பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதனால், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE