செஸ் ஒலிம்பியாட் 2022 | மெக்சிகோ வீரரை வீழ்த்த வகுத்த வியூகம் என்ன? - மனம் திறக்கும் கார்த்திகேயன் முரளி

By செய்திப்பிரிவு

மனம் திறக்கும் கார்த்திகேயன் முரளி ஓபன் பிரிவில் இந்திய சி அணியில் இடம் பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி மெக்சிகோவின் கபோ விடல் யூரியலை தோற்கடித்தார்.

அவர், கூறும்போது, ” இந்திய அணிக்காக விளையாடுவது சிறப்பான விஷயம். ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என நாங்கள் இதற்கு முன்னர் நினைத்தது இல்லை. சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடுவது பெருமையாக உள்ளது. இந்தியாவில் அதிகளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளோம். இதனால் சி அணியில் இடம் பெறுவது என்பது ஒரு பொருட்டல்ல.

இரு ஆட்டங்களிலும் சிசிலியன் டிபன்ஸ் தான் விளையாடினேன். எந்தவித நெருக்கடியும் இல்லை. இரு ஆட்டங்களிலும் என்னை எதிர்த்து விளையாடிய வீரர்கள் சில நகர்வுகளில் நிலைகுலைந்தனர். இரு ஆட்டங்களிலும் இயல்பாகவே விளையாடினேன்.

இதற்காக சிறப்பு முயற்சிகள் ஏதுவும் மேற்கொள்ளவில்லை, அணியில் உள்ள வீரர்கள் இணைந்து பயிற்சிகள் மேற்கொள்வோம். சேதுராமன், கங்குலி, அபிஜீத், அபிமன்யு ஆகியோருடன் ஏற்கெனவே நன்கு பழகியுள்ளேன். மேலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ள அணியில் இருப்பதால் அவர்களின் உள்ளீடுகள் உதவியாக உள்ளது.

இந்திய பி அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே முதல் நிலை இடத்துக்கு செல்லக்கூடிய தகுதியை உடையவர்கள்தான். இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE