கொல்கத்தா டெஸ்ட்: தவண், கோலி, ரோஹித் சோபிக்கவில்லை; இந்தியா திணறல்

By இரா.முத்துக்குமார்

ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் 7 விக்கெட்டுகளை முதல் நாளில் வீழ்த்தி 239 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர்.

ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்தும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் 2-ம் நாள் ஆட்டத்தில் நாளை களமிறங்குவர். நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு என்றாலும் கேப்டன் பொறுப்பு எடுத்து கொண்ட ராஸ் டெய்லர் அருமையான களவியூகம் அமைத்ததோடு, பந்து வீச்சு மாற்றங்களையும் அபாரமாகச் செய்தார்.

டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததற்குக் காரணம் 4-வது இன்னிங்ஸில் இந்தப் பிட்சில் ஆட முடியாத நிலை ஏற்படலாம் என்பதற்காகவே என்று தெரிகிறது. ஏனெனில் முதல் ஒரு மணி நேரம் பிட்சில் நல்ல பவுன்ஸ், ஸ்விங் இருந்தது, பிறகு கொஞ்சம் நிர்வகிக்கக் கூடிய அளவுக்கு பவுன்ஸ் இருந்தாலும் ஒரே இடத்தில் பிட்ச் செய்யப்பட்ட இருவேறு ஷார்ட் பிட்ச் பந்துகள் வித்தியாசமாக நடந்து கொண்டன. ஒன்று அதிக உயரமாகவும் மற்றொன்று வயிறு வரை மட்டுமே எழும்பியது, இதனால் பேட்ஸ்மென்கள் மனதில் ஐயம் இருந்து வந்தது. சீரற்ற பவுன்ஸ் என்ற இந்த அம்சம் அடுத்த 4 நாட்களுக்கு பேட்ஸ்மென்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பது இன்று தெரிந்துவிட்டது.

விராட் கோலி ‘வொர்க் அவுட்’

நியூஸிலாந்து தரப்பில் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், டிரெண்ட் போல்ட், இந்திய கேப்டன் விராட் கோலியை வொர்க் அவுட் செய்து வீழ்த்தினார். ஏன் வொர்க் அவுட் என்றால், ஒரு கவர் டிரைவ் அற்புதமாக ஆடினார் விராட் கோலி எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரியைக் கடந்தது. அடுத்த 2 பந்துகள் கோலியை பின்னால் சென்று ஆடப் பணித்தார் போல்ட். பிறகு வைடாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்தை டிரைவ் லெந்த் போல் தெரிவதாக வீசினார், கோலி நேர் பேட்டில் ஆடாமல் டிரைவ் ஆட முயன்றார் ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு கல்லியில் லாதமின் அருமையான கேட்சாக முடிந்தது. கோலியை எதிரணியினர் ‘வொர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர், இது அவருடைய பிரதான ரன் குவிப்பு ஷாட்டான கவர் டிரைவை அவர் தியாகம் செய்ய வேண்டி நிர்பந்திக்கலாம். இது அவருக்கு எச்சரிக்கை மணி. இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இப்படியாக ஆட்டமிழந்தது அவரது நினைவுக்கு வரவேண்டும், அல்லது கும்ப்ளே கோலிக்கு நினைவூட்ட வேண்டும்.

இதுதான் சச்சினுடம் இவரை ஒப்பிட வேண்டாம் என்று சிலர் கூறுவதற்குக் காரணம், ஏனெனில் சச்சின் ஒரு பந்துக்கு 2 ஷாட்களை வைத்திருப்பார். மேலும் ஆலன் டோனல்டு ஒரு முறை கூறியது போல் ஒருமுறை வீழ்த்திய பந்தில் உடனடியாகவே சச்சினை அடுத்த முறையும் வீழ்த்தி விட முடியாது என்பார், ஆனால் கோலி இன்று அவுட் ஆனது போல் எவ்வளவு முறை ஆட்டமிழந்திருப்பார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

கம்பீரை ‘சும்மா’ தேர்வு செய்து விட்டு மீண்டும் ஷிகர் தவணிடம் சென்றது மதிக்கக்கூடிய முடிவாகத் தெரியவில்லை. 10 பந்துகளில் 8 பந்துகளை ஆடாமல் விட்டார், 1 ரன் எடுத்த நிலையில் ஹென்றியின் வேகத்தை கணிக்கும் முன்னரே கால்களை எந்த விதத்திலும் நகர்த்தாமல் இருந்த இடத்திலிருந்தே கட் செய்ய முடியாத பந்தை கட் செய்ய முயன்று மட்டையின் உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள் ஏற்பட்ட ஒரு வீரரை பதற்றமான தொடக்க இடத்தில் இறக்குவது எப்போதும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

முரளி விஜய்யும் சோதிக்கும் சில பந்துகளை எதிர்கொண்டார். அதாவது ஹென்றியின் சில பந்துகள் உள்ளே வந்து பிறகு எதிர்ப்புறம் ஸ்விங் ஆனதில் விஜய் மட்டையை பந்துகள் கடந்து சென்றன. அவரும் 29 பந்துகள் சோதனைக்குப் பிறகு 9 ரன்கள் எடுத்த நிலையில் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஹென்றி வீசிய பந்து மீண்டும் உள்ளே வந்து பிறகு நேராகச் சென்றது, ஆஃப் ஸ்டம்பை கவர் செய்த விஜய் அதை ஆடியேயாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது, ஆடினார் விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது, அருமையான பந்து அது. இந்திய அணி 46/3 என்ற நிலையில் ரஹானே, புஜாரா இணைந்தனர்.

ரஹானே எப்போதுமே எந்த ஒரு டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில்தான் பிரமாதமாக ஆடியிருக்கிறார் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் அவர் அபாரமாகவே ஆடினார். புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வரும் பலனை தொடர்ந்து பெற்று வருகிறார், இருவரும் இணைந்து 141 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை 31 ஓவர்களில் 79 ரன்களையே எடுக்க முடிந்தது என்றால் நியூஸிலாந்தின் பவுலிங் மற்றும் ராஸ் டெய்லரின் களவியூகமே காரணம்.

புஜாரா 219 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாக்னர் பந்தில் வெளியேறினார். ரஹானே 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்திருந்த போது ஜீதன் படேல் பந்தில் ஏமாந்து எல்.பி. ஆனார். முன்னதாக ரோஹித் சர்மா ஜீதன் படேலின் திரும்பி எழுந்த பந்துக்கு ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார்.

அஸ்வின் களமிறங்கி சாண்ட்னரை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒரு ஷாட் சரியாக சிக்காமல் எட்ஜ் பவுண்டரி என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அவுட் ஆவதற்கு முதல் பந்தை ஹென்றியை அருமையாக ஒரு பேக்புட் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் எல்.பி. ஆனார். 26 ரன்கள் எடுத்து அஸ்வின் ஆட்டமிழந்தார்.

விருத்திமான் சஹா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் உள்ளார், ஜடேஜா 6 பந்துகளில் ரன் எதையும் எடுக்கவில்லை. இருவரும் நாளை களமிறங்கி முதல் டெஸ்ட் போல் ஆடி 300 ரன்கள் பக்கம் கொண்டு செல்வார்களா என்பதை பார்க்க வேண்டும். நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகள், ஜீதன் படேல் 2 விக்கெட்டுகள், போல்ட் பரிசு விக்கெட்டாக கோலியை வெளியேற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்