காமன்வெல்த் போட்டிகள் 2022: காயம் காரணமாக இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகல்

By செய்திப்பிரிவு

டெல்லி: எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் இருந்து இந்தியாவின் தடகள வீரர் நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் இந்தியா சார்பில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்பதாக இருந்தது. இப்போது அவர் காயம் காரணமாக அதிலிருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 காமன்வெல்த் போட்டியில் நீரஜ் தங்கம் வென்றிருந்தார்.

“ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா எதிர்வரும் காமன்வெல்த்தில் இருந்து விலகி உள்ளார். ஃபிட்னஸ் சிக்கல் காரணமாக அவர் ஒரு மாத காலம் ஓய்வு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதனால் தனது சாம்பியன் பட்டத்தை காமன்வெல்த்தில் அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. காயத்திலிருந்து விரைவாக அவர் மீண்டு வர வேண்டும்” என இந்திய அணி தெரிவித்துள்ளது.

இந்தியா சார்பில் காமன்வெல்த் 2022-இல் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் முதலிடத்தில் இருந்தவர் நீரஜ் சோப்ரா. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன். இப்போது காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE