உலக தடகள சாம்பியன்ஷிப் | வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா - இந்தியாவின் 19 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது

By செய்திப்பிரிவு

யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க ஏக்கம் தீர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று, இறுதி சுற்றில் 88.13 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. தங்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியாவின் 19 ஆண்டுகால ஏக்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா ஒருமுறை மட்டுமே பதக்கம் வென்றுள்ளது. 2003ம் ஆண்டு பாரிஸில் நடந்த தொடரில், இந்தியா சார்பில் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றதே இதுவரை இந்தியா வென்ற பதக்கமாக இருந்தது. அதன்பிறகு, இதுநாள் வரையில் எந்த இந்தியருமே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லவில்லை. அந்த ஏக்கத்தை தீர்த்து, இன்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

அமெரிக்காவின் யூஜினில் நடந்துவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் என இருவர் பங்கேற்றனர். என்றாலும், நீரஜ் சோப்ராவே பதக்கம் வென்றார். அதேநேரம், 21 வயதே ஆகும் ரோஹித் யாதவ் 10வது இடம் பிடித்து அசத்தினார். அவர் 78.72 மீட்டர் ஈட்டி எறிந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE