மே.இ.தீவுகள் அணியின் வாய்ப்பைத் தடுத்த சஞ்சு... இந்தியா கடைசி ஓவரில் வென்ற த்ரில் தருணம்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. எதிரணியின் வெற்றி வாய்ப்பை அபாரமாக செயல்பட்டு தடுத்திருந்தார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் சஞ்சு சாம்சன் முக்கியப் பங்கு வகித்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது. கேப்டன் தவான் 97 ரன்கள் குவித்தார். கில் 64 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்தனர். 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி விரட்டியது.

அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசினார். முதல் 4 டெலிவரியில் 7 ரன்கள் எடுத்தது அந்த அணி. கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பது. ஐந்தாவது பந்தில் ஒரு வைடு வீசி இருந்தார் சிராஜ். அந்தப் பந்து லெக் திசையில் வீசப்பட்டு இருந்தது. விக்கெட் கீப்பர் சாம்சன் லாவகமாக அதனை தடுத்தார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர் மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன்கள். கடைசி பந்து பேட்ஸ்மேன் ரொமாரியோ ஷெப்பர்ட் கால்களுக்கு நடுவே லெக் திசையில் வீசப்பட்டது. அந்தப் பந்தையும் சாம்சன் தடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பவுலர்கள் தாக்கூர், சிராஜ் மற்றும் சஹால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE