“காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்கள் இலக்கு” - இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

By செய்திப்பிரிவு

புது டெல்லி: “காமன்வெல்த் போட்டியில் தங்கம்தான் எங்களது இலக்கு” என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு புதிதாக காமன்வெல்த் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் இந்த ஐக்கானிக் விளையாட்டு போட்டியில் நடைபெறுகிறது.

வரும் 28-ம் தேதி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளுக்கு இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இதற்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு பிரிவுகளாக விளையாடுகின்றன. டி20 பார்மெட்டில் போட்டிகளில் நடைபெறுகின்றன.

இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் அணிகள் உள்ளன. முதல் சுற்றில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இந்நிலையில், தங்கம் தான் இலக்கு என ஸ்மிருதி மந்தனா இதனை தெரிவித்துள்ளார்.

"காமன்வெல்த் அரங்கில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளோம். தங்கம் தான் எங்களது இலக்கு. ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ளோம். ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற போது தேசிய கீதம் ஒலித்தது. அந்த தருணம் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நாங்கள் அதை பிரதிபலிக்க விரும்புகிறோம். இருந்தாலும் இது ஒலிம்பிக் இல்லை. காமன்வெல்த்தில் விளையாடுவது ஒரு புதிய அனுபவம்.

டி20 பார்மெட்டில் எந்த அணி யாரை வேண்டுமானாலும் வெல்லலாம். ஆஸ்திரேலிய அணியை பெரிய அணி என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். இதற்கு முன்னர் பல்வேறு தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை தொடக்க போட்டியில் எதிர்கொண்டுள்ளோம். எங்களுக்கு எங்கள் பிரிவில் உள்ள மூன்று அணிகளுக்கு எதிரான போட்டிகளும் மிகவும் முக்கியமானது" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE