IND vs ENG | இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி; 1-1 என சமனில் தொடர்

By செய்திப்பிரிவு

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவு தான் இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு அடிப்படை காரணம்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. அதனால் தொடர் 1-1 என இப்போது சமனில் உள்ளது.

இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களை எடுத்திருந்தது. 102 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அந்த அணி. மெயின் அலி, டேவிட் வில்லி, லிவிங்ஸ்டன் ஆகியோர் டீசென்டாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் சஹால் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கடந்த போட்டியை போல தவான் - ரோகித் இணையர் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து தவான், பந்த், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷமி, ஜடேஜா, சஹால், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அவுட்டாகி இருந்தனர். 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரீஸ் டாப்லே (Reece Topley) இந்த போட்டியில் மொத்தம் 9.5 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கு தான் கொடுக்கப்பட்டது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE