2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்த இந்தியா

By செய்திப்பிரிவு

டெர்ராசா: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையில் 9-வது இடம் பிடித்து ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது இந்திய அணி. ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி ‘பி’ பிரிவில் விளையாடியது.

முதல் சுற்றில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான கிராஸ்-ஓவரில் ஸ்பெயினுக்கு எதிராக விளையாடியது. அதில் 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதில் கனடா மற்றும் ஜப்பானை வீழ்த்தி 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது இந்தியா. ஜப்பான் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதில் வந்தனா கட்டாரியா அதிகபட்சமாக மூன்று கோல்களை பதிவு செய்துள்ளார். கடந்த முறை 8-வது இடத்தில் இந்தியா தொடரை நிறைவு செய்திருந்தது. இதுவரை இந்திய அணி இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE