ஆஸி. தொடரிலிருந்து பின்வாங்கிய தெ.ஆப்பிரிக்கா: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் 

By செய்திப்பிரிவு

துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி விளையாடமால் பின்வாங்கி உள்ளது. அதனால் இப்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறுவதில் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில் ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது தென்னாப்பிரிக்கா. ஆனால் ஜனவரியில் தங்கள் நாட்டில் ஐபிஎல் போலவே நடைபெறவுள்ள டி20 லீக் தொடர் காரணமாக இந்த ஒருநாள் தொடருக்கான அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் (CSA).

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை எனவும். அடுத்த கோடைக்கான கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் சொல்லிவிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட். அதனால் இப்போது இந்த தொடருக்கான புள்ளிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் என தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரில் பின்வாங்கி உள்ளதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சி.இ.ஓ உறுதி செய்துள்ளார்.

மறுபக்கம் உள்நாட்டு வீரர்கள் புதிய டி20 லீக் தொடரில் பங்கேற்பது மிகவும் அவசியம். இந்த தொடர் இல்லை என்றாலும் எஞ்சிய தொடர்களில் தென்னாப்பிரிக்க சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் (CSA). அது நடைபெறவில்லை எனில் தென்னாப்பிரிக்க அணி தகுதி சுற்றில் விளையாட வேண்டிய சூழல் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE