விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம்: 'விலக வேண்டும்', 'ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும்' - எதிர்ப்பும் ஆதரவும்

By எல்லுச்சாமி கார்த்திக்

நம்ம கோலிக்கு என்ன தான் ஆச்சு? டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து பார்மெட்டுகளிலும் உள்நாடு, வெளிநாடு என சகல ஆடுகளங்களிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவரது தடுமாற்றத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் இந்த சோதனை காலத்தில் சில குரல்கள் எதிரொலித்து வருகின்றன.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் அவர் போற்றப்படுபவர். கடந்த காலங்களில் அவரை விமர்சித்த குரல்கள் அனைத்தும் பின்னாளில் அவரது அபார ஆட்டத்தை பார்த்து போற்றியது. இப்போது அவர் தூற்றுதலுக்கு ஆளாகி உள்ளார். கிரிக்கெட் அரங்கில் அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் சாதனை தான். ஆனால் இவை அனைத்தும் இப்போது அப்படியே தலைகீழாக சோதனையாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,963 ரன்களை எடுத்துள்ளார். அவருக்கு தான் இப்படி ஒரு நிலை.

கோலியும் 2022-ம்: நடப்பு ஆண்டில் கோலி 4 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் மொத்தம் 443 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். 11, 1, 20, 11, 13 என அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஐந்து இன்னிங்ஸில் எடுத்த ரன்களாக உள்ளது. 15-வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.

கடந்த ஆண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கோலி. தொடர்ந்து கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றதும் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முன்னதாக டிசம்பர் வாக்கில் அவரை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பகிரங்கமாக நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். அது குறித்து தனது கருத்தை பொது வெளியில் தெரிவித்திருந்தார் கோலி. இப்போது அணியில் சீனியர் வீரராக மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.

இத்தகைய சூழலில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ளது. அதில் சில…

எதிர்ப்பு…
கபில் தேவ்: "டி20 போட்டியில் ஆடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பந்து வீச்சாளரான அஸ்வினை அணியில் இருந்து நீக்கும் போது, பேட்ஸ்மேனான கோலியையும் நீக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்தது போன்ற டாப் கிளாஸ் பேட்டிங் இப்போது விராட் கோலியிடம் இல்லை. அவர் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் திறமையான இளைஞர்களை அணியில் இருந்து விலக்கி வைக்க முடியாது.

அணியில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இளம் வீரர்கள் முயற்சி செய்து விராட் கோலியை விஞ்ச வேண்டும். கோலி போன்ற ஒரு பெரிய வீரரை தேர்வு செய்யவில்லை என்றால் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதே அதற்கு காரணமாக இருக்கும். தற்போதைய ஃபார்மை கருத்தில் கொண்டே ஆடும் லெவனில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். செல்வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது" என கபில் தேவ் சொல்லி இருந்தார்.

அஜய் ஜடேஜா: "விராட் கோலி மிகச் சிறந்த வீரர் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் சதம் பதிவு செய்யவில்லை. ரன் சேர்க்கவில்லை என சொல்லி அவரை அணியிலிருந்து நீக்கிவிட முடியாது. இருந்தாலும் பழைய பாணியில் ஆட்டத்தை அணுகுவதா அல்லது புதிய பாணியில் அதிரடியாக ஆட்டத்தை அணுகுவதா என்பது குறித்து இந்திய அணி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஏனெனில் பழைய பாணியில் மிகவும் கவனத்துடன் இன்னிங்ஸை நிதானமாக தொடங்குவோம். பினிஷர்களை நம்பியே ஆட்டத்தின் கடைசி ஓவர்கள் இருக்கும். ஆனால் இப்போது இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. நான் அணியின் டி20 அணுகுமுறை குறித்து சொல்கிறேன்.

இது கொஞ்சம் கடினமான சாய்ஸ் தான். டி20 அணியை நான் தேர்வு செய்தால் அதில் கோலிக்கு நிச்சயம் இடமில்லை" என தெரிவித்துள்ளார் அஜய் ஜடேஜா.

வெங்கடேஷ் பிரசாத்: "வீரர்கள் தங்களது மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு எதையும் கருத்தில் கொள்ளாமல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கங்குலி, சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் இந்தச் சூழலை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் டொமஸ்டிக் கிரிக்கெட்டுக்கு சென்று அங்கு தங்களது ஃபார்மை மீட்ட பிறகு மீண்டும் அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளனர். ஆனால் இப்போது இது மாறி விட்டதாக தெரிகிறது. ஃபார்மில் இல்லாதவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் எந்த முன்னேற்றமும் இருக்கப்போவதில்லை.

நம் நாட்டில் திறன் படைத்த வீரர்கள் பலர் உள்ளனர். வெறுமனே சிறந்த வீரர் என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு இங்கு விளையாட முடியாது. இந்திய அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவரான கும்ப்ளே கூட கடந்த காலங்களில் இந்த கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளார். அணியின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.

சையத் கிர்மானி: "அணியில் இடம் பிடிக்க இப்போது அதிக போட்டி நிலவி வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் சில இன்னிங்ஸில் சோபிக்காத போது அவர்களை தேர்வுக்குழுவினர் நீக்க வேண்டும். 'டொமஸ்டிக் கிரிக்கெட்டுக்கு செல்லுங்கள். இழந்த ஃபார்மை மீட்டெடுங்கள். அணியில் சேர்க்க முடியுமா என்பதை அப்புறம் பார்க்கலாம்' என அந்த அனுபவ வீரரிடம் தேர்வுக்குழுவினர் தவறாமல் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இது விராட் கோலிக்கு ஏன் பொருந்தாது" என கேள்வி எழுப்பியுள்ளார் சையத் கிர்மானி.

ஆதரவு…
கோலி குறித்த கருத்துகளுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். "எங்களுக்கு அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நாங்கள் வெளியில் இருந்து எழும் சத்தங்களை கவனிப்பதில்லை. அந்த வல்லுநர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்கள் என்பது கூட புரியவில்லை. அவர்கள் வெளியிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

நாங்கள் சிறந்தவொரு அணியை கட்டமைத்து வருகிறோம். அதற்கென எங்களுக்கு ஒரு திட்டமும், செயல்முறையும் உள்ளது. அதற்குப் பின்னால் நிறைய மெனக்கெடல் உள்ளது. எங்களுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பது முக்கியம் அல்ல.

கோலி ஒரு தரமான வீரர். அவருக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. ஃபார்மை பொறுத்தவரையில் அனைவருக்கும் ஏற்ற இறக்கங்கள் என்பது அவரவர் கரியரில் இருக்கும். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட வீரர் ஒருவர் வெறும் ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் ரன் சேர்க்க தவறினால் அவர் மோசமான வீரர் கிடையாது" என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்: "அணியில் உள்ள சீனியர் வீரர்கள் உட்பட சிலர் தொடர்ந்து ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இங்கு ஃபார்ம் என்பது தற்காலிகம் தான். கிளாஸ் என்பது வீரர்களின் இயல்போடு கலந்தது. தேர்வுக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோலி ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி இழந்த ஃபார்மை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.

அமித் மிஸ்ரா: "கோலி ஒரு மேட்ச் வின்னர். சமயங்களில் அணியில் உள்ள ஜுனியர் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவை போல சீனியர் வீரர்களுக்கும் ஆதரவு வேண்டும். அது அவருக்கு நம்பிக்கையை கொண்டு வரும்" என தெரிவித்துள்ளார் மிஸ்ரா.

தீப் தாஸ்குப்தா: "இழந்த ஃபார்மை மீட்டெடுக்க கோலிக்கு ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். அதை நான் முழுவதுமாக நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டின் தரமான கிரிக்கெட் வீரர்களில் அவர் ஒருவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

கோலி எனும் நாயகன் மீண்டும் ஃபார்முக்கு வர கிரிக்கெட் உலகின் எட்டுத்திக்கிற்கும் பயம்தானே என விக்ரம் பட பாணியில் அவரது கம்பேக்கிற்கு தீம் மியூசிக் போடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்புவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்