IND vs ENG | 19 ரன்கள், 3 மெய்டன், 6 விக்கெட் - பும்ராவின் மிரட்டல் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

ஓவல்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது இந்திய வேகப்பந்து வீச்சு படை. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி தனது கரியரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அணியின் ஷிகர் தவான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம்பெற்றார். அவருடன் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷமி ஆகியோரும் அணிக்கு திரும்பியிருந்தனர். அதேபோல், டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரில் வலுவாக மீண்டுவர முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால், அந்த அணியின் பேட்டிங் வலுப்பெற்றதும் காரணமாக அமைந்தது.

ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாக இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப்பை தனியாளாக ஒரு கை பார்த்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. அவரின் அட்டாக்கிங் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறிபோயினர். அதிரடி ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் அதிரடியை தொடங்கும் முன்பாகவே பும்ரா அட்டாக்கை தொடங்கினார். தனது முதல் ஓவரிலேயே ஜேசன் ராய்யை போல்ட்டாக்கி வெளியேற்றிய அவர், ஜோ ரூட்டை அதற்கடுத்த இரண்டாவது பந்தில் அவுட் ஆக்கினார்.

மறுபுறம் மூன்றாவது ஓவரை வீசிய ஷமி, பென் ஸ்டோக்ஸை வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப வைத்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இந்த மூவரும் ஒரு ரன் எடுக்க முடியவில்லை என்பது கூடுதல் சோகமாக இங்கிலாந்துக்கு அமைந்தது. சில ஓவர்கள் தாக்குப்பிடித்து தடுப்பாட்டம் ஆடி 7 ரன்கள் எடுத்திருந்த பேர்ஸ்டோவை பும்ரா நடையைக்கட்ட வைத்தார். 6வது ஓவரில் பேர்ஸ்டோ என்றால், 8வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டோன் என பும்ரா மிரள வைத்தார்.

ஷமியும் பும்ராவும் சற்று ஓய்வு எடுத்த சமயத்தில் பிரசித் கிருஷ்ணா தன் பங்கிற்கு மொயின் அலியை 14 ரன்களில் அவுட் ஆக்கினார். இங்கிலாந்தை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தது கேப்டன் ஜாஸ் பட்லர் (30 ரன்கள்). அவருக்கு அடுத்து டேவிட் வில்லே (21 ரன்கள்). இதில் பட்லரை ஷமி அவுட் ஆக்கினார். வில்லேவை பும்ரா வெளியேற்றினார். இறுதியில் 25.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார், இதில் 3 மெய்டன் ஓவர்களும் அடக்கம். 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் தவிர ஷமி 3 விக்கெட்கள் எடுத்தார்.

வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் சேர்ந்தே 10 விக்கெட்களையும் வீழ்த்தினர். முன்னதாக 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்த சாதனையை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் படைத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்